Thursday 29 June 2023

நீரோ 2.0

நீரோ 2.0

இயற்கையின்
எழில் தோற்றம்
இந்தியாவின்
பெருமை சாற்றும்
மணிப்பூர் மண்ணில்
குருதி வெள்ளம்.
ஓயாத உள் மாநிலப் போர். 
பேயாட்சியின்
பின்விளைவு. 
அமைதி காக்க
மோடி முனையாமல்... 
அமெரிக்க  அரசின்
அழைப்பை ஏற்று
பறந்து போனார். 

மணிப்பூர் 
மதவாதிகளின் கொலைக்களமானது! 
மருந்துக்குக் கூட
மணிப்பூர் உயிர்களின் கவலையின்றி
வெள்ளை மாளிகை
விருந்து வைபவம்
பைடன்-ஜில் பைடன்
பறிமாற
மோடி பசியாறினார்.

ரோமாபுரி பற்றி எரியும்போது
நீரோ மன்னன்
பிடில் வாசித்த வரலாறு
நினைவலைகளில்
நீந்தி வந்தது! 
ஈன்ற தாயையே 
தூக்கில் தொங்கவிட்ட
நீரோவிடம்...
தாய் மடிப்பிச்சை கேட்டாள்... 

"I carried you in my womb
and nourished you with my blood"
என் கருவிலே
உன்னை சுமந்தேன், 
என் உதிரத்தால்
உன்னை வளர்த்தேன்
மகனே என மன்றாடினாள்.
நீரோவின் கல் மனம்
சரித்திரமானது!

இந்தியாவின் நீரோ
மோடியின் கல்மனம்
மட்டும் கரையுமா?
மறந்தார், 
மணிப்பூர் எரிதழலில்
வெந்து கரிவதை
மீண்டும் பறந்தார்!


எழிலரசி, புவியரசர்களை
விழி வீச்சில் வென்று
பித்தர்களாக்கி
துப்பட்டாவில் தொங்கவிட்டு
பாராண்ட  பைங்கிளி
கிளியோபாட்ரா
தன் அழகு வாகனத்தில்
உலா வந்த நைல் நதியின்
தென்றல் அலைகள்
தாலாட்டும்
எகிப்து நாட்டிற்கு!

அரபு பூமி
ஆரத் தழுவி
நைல் நதி தீரத்தின்
மிக உயரிய 
'ஆர்டர் ஆஃப் தி நைல்'
(Order of the Nile)
விருதினை வழங்கி
ஆனந்த கும்மி
இசைத்தது! 
விருந்தோம்பலின்
உச்சத்தை தொட்டது, 
உலகம் வியப்புடன்
உற்று நோக்கியது! 
காரணம்...
வஞ்சப் புகழ்ச்சி விருதா?

ஐ.நாவில்
வெளிச்சம் போட்ட
இந்திய ஜனநாயக
மரபணு... 
மணிப்பூரில்
வெந்தணலில்
வீழ்ந்து கிடப்பதை
இனியேனும் மோடி
காப்பாரா?
மௌனம் கலைப்பாரா?

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

No comments:

Post a Comment