Monday 2 November 2020

பல்லு போனா சொல்லு போகும்!

பல் சிகிச்சைக் கட்டமைப்பை மேம்படுத்த வாலாஜா மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் கோரிக்கை! 

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இராணிப்பேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வாலாசாப்பேட்டை நகரத்தில் செயல்பட்டு வருகிறது. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இராணிப்பேட்டைக்கும் முக்கிய இடம் உண்டு.

இராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் செயல்படும் பல்வேறு நச்சு ஆலைகளால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நீர், நிலம், காற்று அனைத்தும் மாசு படுத்தப்பட்டு மக்கள் சொல்லொன்னாத் துயரங்களுக்கும் பல்வேறு நோய்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர். உலக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இராணிப்பேட்டையும் இடம் பெற்றுள்ளது என்பது ஒரு துயரமான செய்தி. 

இத்தகைய சூழலில் வாலாசாப்பேட்டையில் செயல்படும் மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது மிகமிக அவசியமானதாகும். ஆனால் கடந்த ஓராண்டு காலமாக இங்கு பல் மருத்துவர் ஒருவர்  நியமிக்கப்பட்டும் பல் மருத்துவம் செய்வதற்கான நாற்காலிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத சூழல் தொடர்கிறது. “நீதிக்கான குரல்” அமைப்பின் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில் அதன் நிர்வாகிகள் 02.11.2020 அன்று  காலை 10.30 மணி அளவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அவர்களைச் சந்தித்து பல் மருத்துவ சிகிச்சைக்கானக் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக செய்து தருமாறு கோரிக்கை முன்வைத்தபோது அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில்  செய்து முடிப்பதாகவும் மாவட்ட மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மருத்துவர் சிங்காரவேலு அவர்கள் உறுதியளித்துள்ளார். 

சமூக ஆர்வலர் வாலாஜா அலிம் அகமத் அவர்களின் முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு இருசக்கர நாற்காலிகள்   (wheel chair) மருத்துவமனை. பயன்பாட்டிற்காக ஜெ.அசேன் அவர்களால் அன்பளிப்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் சிங்காரவேலு அவர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது நீதிக்கான குரல் அமைப்பின் நிர்வாகிகள் வழக்குரைஞர் பொன்.சேகர், டி.ஜானகிராமன், மதன் மற்றும் சமூக ஆர்வலர்கள் சசிகுமார், முகமது அலி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.






No comments:

Post a Comment