Tuesday 10 November 2020

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களுக்கு வாலாசாவில் பிறந்தநாள் விழா!

முத்தமிழ்க் காவலர் என்று பரவலாக அறியப்பட்ட திருச்சி கி..பெ விசுவநாதன் அவர்களின் பிறந்தநாள் விழா 11.11.2020 அன்று தமிழ் ஆர்வலர்கள் சார்பாக வாலாசாப்பேட்டையில் கொண்டாடப்பட்டது.

பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கி.ஆ.பெ அவர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா அசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வழக்குரைஞர் பொன்.சேகர் சிறப்புரையாற்றினார். ஜானகிராமன், மதன், பூக்கடை மணி, வழக்குரைஞர் அண்ணாதுரை,  சால்வை மோகன், உத்தமன், தினகரன், ராணி வெங்கடேசன், அசோக்குமார், ஜெகதீசன்,அருள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்று கி.ஆ.பெ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

வழக்குரைஞர் பொன்.சேகர் தனது உரையில்...,

"கி.ஆ.பெ அவர்கள் பள்ளிக்குச் சென்றதில்லை என்றாலும் தாமாக முன்வந்து தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்று இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். திராவிட நாடு கோரிக்கையில் உடன்பாடு இல்லை என்றாலும் பெரியாரோடு இணைந்து 1938 மற்றும் 1965  இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்று சிறையில் அடைக்கப்படடுள்ளார். நீதிக்கட்சி உறுப்பினராக இருந்த போது பார்ப்பனரல்லாதோர் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டுள்ளார். 

தமிழுக்காகப் பாடுபட்ட அதேவேளையில் கி.ஆ.பெ பெயரில் திருச்சியில் செயல்படும் மேல்நிலைப்பள்ளியும் மருத்துவமனையும் இன்றும் மக்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மருத்துவ சேவையில் பெரும் பங்காற்றி வருகின்றன.

இந்தித் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் இன்றைய சூழலில், தமிழ் மொழியைக் காக்க வேண்டுமானால் தமிழ் பேச்சு மற்றும் அலுவல் மொழியாக இருந்தால் மட்டும் போதாது, அது ஒரு தொழில் மொழியாக வளர்க்கப்பட வேண்டும்; எந்த மொழியில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றனவோ, எந்த மொழியில் தொழில் கல்வி வழங்கப்படுகின்றனவோ அந்த மொழியே வளர்ச்சி பெறும், நிலைத்து நிற்கும். இல்லையேல் ஒரு மொழியின் அழிவை யாராலும் தடுக்க முடியாது. எனவே தமிழ் மொழியை பாதுகாக்கவும் வளர்க்கவும் வேண்டுமானால் அனைத்துத் தொழிற்கல்வியும் தமிழிலேயே பயிற்றுவிக்கப்பட வேண்டும்; தமிழில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் ஆர்வலர்கள் குரல் கொடுக்க வேண்டும்." என தனது சிறப்புரையில் வழக்குரைஞர் பொன்.சேகர் வலியுறுத்திப் பேசினார்.




தகவல்

முத்தமிழ் சுவைச் சுற்றம்
வாலாசாப்பேட்டை

No comments:

Post a Comment