Friday 15 January 2021

வாலாஜாவில் இஸ்லாமியர் முன்னெடுத்த சமத்துவப் பொங்கல்!

பெரு மழை, பெரு வெள்ளமானாலும் துளி நீர் கூட தேங்காமல் வழிந்தோடும் வாட்டம் கொண்ட தமிழகத்தின் முதல் நகராட்சி. பின் தோன்றிய மதுரை, சென்னை எல்லாம் பல லட்சம் மக்கள் தொகையுடன் மாநகராட்சிகளாக உயர்ந்த போதும் ஐம்பதாயிரத்தைத் தாண்டவே இன்னும் வாலாஜா திண்டாடிக் கொண்டிருக்கிறது. வசதிகள் பெருகினால்தானே நகரங்கள் வளர முடியும். ஒரு பக்கம், பழம் பெருமைகள் எல்லாம் வெறும் நினைவுகளாய் மாறினாலும், மறு பக்கம் சில நிகழ்வுகள் நம்மை நெகிழ வைக்கின்றன. சாதி, மதம், இனம், மொழி என மக்களிடையே பகைமையை வளர்த்து ஆதாயம் தேட சிலர் முயற்சிக்கும் வேளையில், ஓடும் குருதி ஒன்றாய் இருக்கும்பொழுது எமக்குள் ஏது வேறுபாடு என பறைசாற்றும் நிகழ்வுகளும் நடந்தேறுகின்றன.

தை என்றாலே பொங்கல் மட்டுமல்ல தமிழும் இனிக்கும். தை இன்றி தமிழ் இல்லை, தமிழ் இன்றி தை இல்லை என்பதனால்தானோ என்னவோ தமிழ்ப் புத்தாண்டு தையிலே தொடங்குகிறது. உழைத்துக் களைத்த வேளாண் குடிகள், தை மகள் கண்டு சற்றே முகம் மலரும் காலம் இது.


மகிழ்ச்சி; அது எல்லோருக்கும் பொதுவானதாய் மாறும் பொழுது பிணக்குகள் எல்லாம் மாயமாய் மறைகின்றன.


வள்ளுவன் வந்த நாளில்தான் ஆண்டுதோறும் வாலாஜாவில் சமத்துவப் பொங்கல் விழா அரங்கேறுகிறது. இந்த ஆண்டு, காலை பத்து மணி…, 


வாலாசா பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் பின் திரையில் அழகன் வள்ளுவன் மிளிர, நாதஸ்வரக் கலைஞர்கள் இசை மழை பொழிய, கீழே சர்க்கரைப் பொங்கல் தயாராகிக் கொண்டிருந்தது. கரும்பும், மஞ்சளும், மாவிலையும் தைப்பொங்கலின் தவிர்க்கமுடியாப் பொருளாய் இடம் பிடித்தன. சாதி, மதம், இனம், மொழி, அரசியல், ஏழை, பணக்காரன் கடந்து "முத்தமிழ்ச் சுவைச் சுற்றம்" அழைப்பு விடுத்ததால் பலர் வந்த வண்ணம் இருந்தனர். 


முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்களும், தொழிலதிபர் அக்பர் ஷெரிப்பும், ஆட்டோ தொழிலாளி அலிமும், கோட்டீஸ்வரன், ஜானகிராமன், விஜயராகவனோடு கைகோர்த்து புதுப் பானையில் சர்க்கரை இட்டனர். தாய்மார்களுக்கு, கணேசும் மதனும் கனிவோடு உதவ புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கல். பேதங்கள் இன்றி உண்டு மகிழ்ந்தனர். இனிதாய் முடிந்தது சமத்துவப் பொங்கல். இடையிடையே மேடையில் "சக்சஸ் கிங்" சிறார்களின் சிலம்பம்-கராத்தே-குங்பூ களை கட்டியது. இவை அத்தனைக்கும் ஆணிவேர் வாலாஜா ஜெ.அசேன். ஊருக்கு ஒரு அசேன் இருந்தால் சாதி-மத-இன பேதங்களுக்கு இடமேது?


காத்திருக்கிறோம்! மாலைநேர கலை நிகழ்ச்சிகள், பட்டி மண்டபத்தை காண!






















மயக்கும் மாலைப் பொழுதில் விடியல் குழுவின் அதிரடியில், விழித்துக் கொண்டதோ வாலாஜா என அலை அலையாய் மக்கள் கூட்டம். இந்து-இஸ்லாமிய-கிறிஸ்தவ சமயத் தலைவர்கள் கை கோர்க்க, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் தலைமையில்,  சாதனையாளர்களுக்கு திரைப்பட நடிகர் நாசர் விருதுகள் வழங்க, "குடும்பத்தின் பிக்பாஸ் கணவனா? மனைவியா?" என்ற தலைப்பில் ஆலங்குடி வெள்ளைச்சாமி குழுவினர் நடத்திய பட்டிமண்டம நிகழ்வோடு விழா இனிதே நிறைவுற்றது.
 









பொன்.சேகர்
வழக்குரைஞர்








4 comments: