Thursday, 22 February 2024

காளைகளை அடக்க ஜல்லிக்கட்டு! மதவெறி அடக்க மல்லுக்கட்டு!

காளைகளை அடக்க ஜல்லிக்கட்டு..!
மதவெறி அரசியல் ஆதிக்கத்தை அடக்க மல்லுக்கட்டு..!
அடங்காமல் ஆர்ப்பரிக்கும்
காளைகளின் 
திமிலைப் பிடித்து 
திமிரை அடக்கும்
ஜல்லிக்கட்டு விழா
முடிந்து விட்டது..!

அடங்காத 
ஆதிக்க வெறிபிடித்த 
ஆட்சியரின் 
பிடரி பிடித்து அடக்க 
மல்லுக்கட்டு விழா (2024)
தொடங்க உள்ளது..!

அடுத்தக் குடியரசு நாளை
கொண்டாட முடியுமா..?
ஜனநாயகம்...,
மக்களாட்சி..,
மங்கி மரணித்து விடுமோ..?
துயரக் கேள்வி 
இதயத்தைத் துளைக்கிறது..!

ஜனநாயக மலர்க் காட்டை..,
மதவெறி வேட்டைக் காடாக்க 
கங்காணிகளின் கையில்
ஆட்சி அதிகாரம்..!

அரசியல் அமைப்புகளை ஏவி அடக்குமுறை ஆட்டம்..!
சட்டங்கள் 
நூலறுந்த பட்டங்களாக  பரிதவிக்கின்றன..!

மாதங்கள் பல கடந்தும் 
இந்தியாவின் அங்கம்
மணிப்பூரில் 
துப்பாக்கித் தோட்டாக்களின் 
ரத்த தாகம் தணியவில்லை..!

மோடி ஜி யோ...
ஒரே நாடு
ஒரே மொழி
ஒரே சட்டம்...
என ஒய்யார பாட்டிசைத்து 
ஓய்வெடுக்க லட்சத்தீவில்..!

ஒற்றுமைக் கொடிபிடித்து 
நீதிக்கான நெடும் பயணத்தில் 
மக்கள் தலைவன் ராகுல்ஜி..! 

6713 கிலோமீட்டர்..
100 பாராளுமன்றத் தொகுதிகள்..
15 மாநிலங்கள்..
மக்களின் இதயங்கள்..
சங்கமம் ஆகும் காட்சி...
ஊர்வலத்தின் மாட்சி..!
சிங்க நடையால் 
தடம் போட்டுவிட்டார்..!
நாம் 
அதில் வடம்
பிடிக்க வேண்டாமா..!

புரட்சிக் குயிலே...
பூபாளம் இசைத்துப்  
புறப்படு..!!

மூடுபனியின் 
நீடு துயில் நீக்கி
களம் காண்போம் வா...!

மீண்டும் ஒரு சுதந்திரப் போர் அழைக்கிறது..!

ஜனநாயகத்தைக் காக்க
தாயகத்தை மீட்போம் வா..!

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA

திக்கெட்டும் தியாகச்சுடரின் திக் விஜயம்!



உகாண்டாவிற்கு இடி அமீன்! இந்தியாவுக்கு E.D அமி(ன்)த் ஷா!

உகாண்டா நாட்டிற்கு
இடி அமீன்!
இந்திய நாட்டிற்கு
E.D அமி(ன்)த்ஷா!

இந்தியத் திருநாட்டை
உலக அரங்கில் 
உயர்த்திக் காட்டிய
ஒளிவிளக்கு..!
தன் வாழ்வின்
வசந்த காலத்தை
வெங்கொடுமை சாக்காட்டில் 
ஒன்பதாண்டுகள்
சிறைப்பறவையாகப் போராடி
வெள்ளைக் கொக்குகளை
விரட்டிய ராஜாளிப் பறவை..!

வெள்ளையர்களால் 
சுரண்டப்பட்டு 
வறுமையின் எல்லையில் 
வீழ்ந்து கிடந்த தேசத்தை
தன் அறிவு ஆற்றலால் 
எழுச்சியுறச் செய்த
பிதாமகன்..!

வரலாறாய் வாழும் 
நேரு பெருமகனாரின்
புகழ் ஒளியை
மங்க வைக்க
காஷ்மீர் பிரச்சினை கொண்டு 
தனி மனிதத் தாக்குதல் 
தொடுத்துள்ளார் 
E.D அமி(ன்)த்ஷா..!

பணக்காரர்களின் 
வாராக் கடன்
₹ இருபத்தைந்து லட்சம் 
கோடிகளைத் தள்ளுபடி செய்து
ஏழைகளின் கையிருப்பை
அழிக்க 
பணமதிப்பிழப்பை
(Surgical strike)
தன்னிச்சையாக அறிவித்த
மோடியல்ல.., நேருபிரான்..!

தன் வாழ்நாள் முழுவதும் 
தேசத்திற்காக அர்ப்பணித்த
தியாகத் தலைவரின் மீது
குற்றம் சுமத்துவது என்பது
சமீபத்தில் ஒரு நாளிதழில் 
கண்ட பொன்மொழி நினைவூட்டுகிறது...

'தன் குற்றம் மறப்பதும்
பிறர் குற்றம் காண்பதும்
முட்டாள்தனத்தின்
விசேஷ குணம்'

வாலாஜா ஜெ.அசேன் Ex. MLA

தடம் மாறியதால் தப்புத்தாளங்கள்!

தடம் மாறியதால்
தப்புத் தாளங்கள்!
அக்கா... அக்கா..
கவர்னர் அக்கா..நீர்
சொக்காய் மாற்றிக் கொண்டதால்
பக்கா தமிழச்சி என்பதனை
மறந்தனை போலும்!

இயற்கையை வெல்ல..
செயற்கையால் முடியுமா?

தண்ணீர் வடியவில்லை
எனக் கண்ணீர் விட்டீர்..
கடல்,
புயல் சீற்றத்தால் 
பொங்கும் பொழுது 
வெளிநீரை உள்வாங்காது..

நீக்குப் போக்குத் தெரியாமல்
நினைவிழந்து பேசுவதோ?அதிகாரம் 
அறிவை
மழுங்கச் செய்கிறதோ?

கூவத்தைப் பற்றி
கூவுகிறீர்..
கங்கையைச் சுத்தப்படுத்தும்
சவடால் என்ன ஆனது?
சுத்தமாக மறந்தனையோ?

ஆறுகள் இணைப்போம்
ஆர்ப்பாட்ட அறிவிப்பு
அடங்கிப் போனதேன்?

அடுப்பு ஊத 
நீர் போவதில்லை
அதனால் உமக்கு
சிலிண்டர் கவனம் வருவதில்லை!

அரசு வாகன பவனியால்
உமக்குப் பெட்ரோல்
விலை உயர்வு தெரியாது?

எத்தனை சொன்னாலும்
உமக்குச் சித்தம் தெளியாது!
காரணம்... நீர்
பித்தன் தலையின்
பிறை நிலவு!
பிதற்றுவது.. 
சேர்ந்த இடம் தந்த 
சீதனச் சொத்து...!

வாலாஜா J.அசேன் Ex.MLA., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்

Saturday, 25 November 2023

காஸாவா? கல்லறையா? (DO or DIE)

காஸாவா? கல்லறையா?
(DO or DIE)

பாலையில் பூத்த 
கண்ணீர் புஷ்பம் 
பாலஸ்தீனம்!

வெடித்தால்தான் 
விடியும்!
விடிந்தாலும் 
கருமேகம் 
அலை மோதும்!

ஓயாத போராட்டம் 
பிறப்புக்கும் 
இறப்பிற்கும் 
இடைவெளி இல்லை!

குந்த இடம் கேட்டு
படுக்க பாய் விரித்த
யூதர்களின் அநீதி!

ஆயுதக் கிடங்கு 
அமெரிக்காவின் 
ஆசியுடன் 
இஸ்ரேலின் பேயாட்டம்!

இடிந்து விடும் 
கட்டிடங்கள் 
முடிபாடுகளில் 
சடலங்கள்!

உதிரத்தைப் பாலாக்கி 
ஊட்டி வளர்த்த 
இளம் தளிர்கள் 
புதை குழிகளில் 
தாய்மார்களின் 
அவல ஓலம் ... 
உலகம் செவிடானதோ?

மாந்தர்களின் 
மனிதாபிமானம் 
மண்ணரையில் 
புதைந்து போனதோ?

தாயக விடுதலைக்காக 
தளராது போராடி 
மடியும் மாவீரர்கள் ...

ஆயுதங்கள் இல்லை 
ஆனாலும் 
யூதர்களைப் பந்தாடும் 
பாலஸீதீன விடுதலை வீரர்கள் ...

காஸாவா? சாவா?
சரித்திரம் படைக்கும் 
ஹமாஸின் துணிவு!

காஷ்மீரக் கவிஞன் 
அல்லாமா இக்பாலின் 
நெஞ்சில் மோதிய 
நினைவலைகள்!

"திப்புவின் தியாகம் 
மெல்ல ஒலித்தது 
வீர மண்ணில் 
முத்தம் பதித்தேன் ...
மானம் இழந்து வாழ்வதே
வாழ்வெனில்
மரணம் தழுவி மடிவதே
உன்னதம் ...
கல்லறை எனது காதில் 
ஒலித்தது"

ஆம்..இன்று
பாலஸ்தீன பாலைவன
கூட்டுக் கல்லறைகளில்
அது எதிர் ஒலிக்கிறது!

வாலாஜா J.அசேன், B.A, B.L, Ex.MLA.,



Thursday, 28 September 2023

ஆடி மாசம் காத்தடிக்க... ஆடுப்பய கூத்தடிக்க...

நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்
குயவனை வேண்டி.,
கொண்டு வந்தானே ஒரு தோண்டி...
அதைக் கூத்தாடி கூத்தாடி
போட்டுடைத்தாண்டி..!

அடித்தளமில்லா அரசியல்வாதி
அதிகார போதையில்
ஆதியும் அந்தமும் 
அவரே என்று
ஆட்டம் போட்ட
அண்ணாமலையின்
வண்ணக் கனவுகள்
மண்ணைக் கவ்வின..!

அறிஞர் அண்ணாவை 
விமர்சிக்க
அரை வேக்காடு 
அண்ணாமலைக்கு
அருகதையில்லை.!

மாமூல் சேற்றில் மலர்ந்த
தாமரைக்கு
தமிழ்நாட்டில் இனி 
எதிர்காலமில்லை..!

லட்டிக் காட்டி
லூட்டி அடிக்க 
கர்நாடகம் அல்ல...
இது தமிழ்நாடு..!

கொஞ்சமாவது
அரசியல் ஞானம்
இருக்க வேண்டும்..!
நீயோ ஞானசூன்யமென
நிரூபித்துவிட்டாய்..!

உன் வாய்ஜாலக்
கானல் நீரில்
கப்பலை ஓட்டினாய்..!
அதிமுக கைநழுவியதால்
ஆண்டி உடைத்த 
தோண்டியானாய்..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Monday, 25 September 2023

கறுப்பு ஆடு வாலை ஆட்டுகின்றது!

கறுப்பு ஆடு வாலை ஆட்டுகின்றது..!

புலிக்கு எலி
சமமாகுமா.?

சாக்கடை,
பூக்கடைக்கு
சவால் விடுவதா.?

ஒவைசி,
உடனிருந்தே
கொல்லும் துரோகி.!

பாஜகவின் 'ஸ்லீப்பர் செல்', 
என்பதை - நம்
தேசமே அறியும்..!

வாய்ச் சவடாலால்
ஹைதராபாத்தின்
மக்களை மயக்கலாம்.!

ஒவைசி

தமிழ்நாட்டு மக்கள்
நரியின் ஊளைக்கு
செவிசாய்க்க மாட்டார்கள்.!

தைரியமிருந்தால்
தமிழ்நாட்டிற்கு வா.!
தொகுதியை
நீயே தேர்ந்தெடு.!

எங்கள் கட்சியின்
சாதாரணத் தொண்டனை
எதிர்த்துப் 
போட்டியிட்டுப் பார்.!

மோடியின், 
புரட்டு அரசியலை 
புரட்டிப் போட்டு,
புதுயுகம் காண
புறப்பட்ட 
நவயுகச் சிற்பி.,

திசை தெரியாமல் தவித்த 
இந்திய அரசியலுக்குத் 
திசைகாட்டிய
துருவ நட்சத்திரம்!
எங்கள் கோமான்
ராகுல் காந்தி.!

அவரிடம்
மோதுவதற்குத் 
தகுதி வேண்டும்.!

மோடிக்கு வால்பிடிக்கும்,
உனக்கு 
அந்தத் தகுதி
கிடையாது..!!

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA., 
தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்