Thursday, 2 April 2026

இராணிப்பேட்டை சுற்றுச்சூழல் கேடு: ஆள்பவர்கள் மாறினாலும் அவலங்கள் தொடர்கின்றன!

உலகின் மிக மோசமாக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இராணிப்பேட்டை மூன்றாம் இடத்தில் இருப்பது நாம் அனைவரும் அறிந்த கசப்பான உண்மை. பன்நெடுங்காலமாக இந்த மண்ணையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

ஆள்பவர்கள் மாறலாம், அதிகாரிகளும் மாறலாம்; ஆனால் இராணிப்பேட்டை மண்ணின் நச்சுத்தன்மையும், மக்களின் துயரமும் மட்டும் மாறுவதே இல்லை. நம் மண்ணின் தற்போதைய அவல நிலை குறித்துச் சில முக்கிய உண்மைகளை இங்கே பொதுமக்களின் பார்வைக்கு:

நச்சுக் கழிவு: தமிழ்நாடு, இராணிப்பேட்டையில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் குரோமியம்.

1. நச்சைக் கக்கும் 'சிவப்பு வகை' ஆலைகள்

இராணிப்பேட்டை சிப்காட் (SIPCOT) வளாகத்தில் இயங்கும் திருமலை கெமிக்கல்ஸ், அல்ட்ரா மரைன், மல்லாடி உள்ளிட்ட 16 'சிவப்பு வகை' (Red Category) ஆலைகள், நச்சுக் கழிவுகளை முறையாகக் கையாளாமல் நீர், நிலம் மற்றும் காற்றைப் பாழாக்கி வருகின்றன. இவை வெளியேற்றும் நச்சுக்கள் மக்களின் நுரையீரலையும், இந்த மண்ணின் செழிப்பையும் மெல்ல மெல்லக் கொன்று வருகின்றன.

2. மழைக்கால 'நச்சுத் திருவிழா'

குறிப்பாக, திருமலை கெமிக்கல்ஸ் போன்ற நிறுவனங்கள் மழைக்காலங்களில் ஆலைக்குள் தேக்கி வைத்திருக்கும் கொடிய நச்சுக் கழிவுகளை, மழைநீர் கால்வாய்களில் சட்டவிரோதமாகத் திறந்து விடுவதை ஒரு 'வாடிக்கையாகவே' கொண்டுள்ளன. கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இது உறுதி செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டும், இன்று வரை இந்நிலை தொடர்கிறது என்பதுதான் நிர்வாகத்தின் பலவீனம்.

3. தீராத சாபம்: 1.6 லட்சம் டன் குரோமியக் கழிவுகள்

மூடிக்கிடக்கும் 'தமிழ்நாடு குரோமேட்ஸ்' நிறுவனத்தின் 1.6 லட்சம் டன் குரோமியக் கழிவுகள் பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் மலைபோலக் குவிந்து கிடக்கின்றன. மழையில் நனையும் இந்தக் கழிவுகள் நிலத்தடி நீரை நஞ்சாக்கி, இப்பகுதி மக்களைப் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு ஆளாக்குகின்றன. இந்தப் 'புற்றுநோய் மலைகளை' அகற்ற வேண்டிய அரசு இயந்திரம் இன்னும் தூக்கத்தில் இருக்கிறது.

4. கணக்கில் வராத அபராதங்கள்

விதிமீறல்களில் ஈடுபட்ட ஆலைகளுக்கு மத்திய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் விதித்த சுமார் ரூ.7 கோடிக்கும் மேலான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதா? அவ்வாறு வசூலிக்கப்பட்டிருந்தால், அந்தத் தொகை பாதிக்கப்பட்ட நிலங்களைச் சீரமைக்கப் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து எவ்விதத் தகவலும் பொதுவெளியில் இல்லை.

நமது உரிமை: அரசுக்கு விடுக்கும் கோரிக்கைகள்!

நிர்வாகத்தைச் சரி செய்வதற்கான போராட்டமும், மக்களின் வாழ்வுரிமையைக் காப்பதும் இப்போது காலத்தின் கட்டாயம்.

மக்களின் கோரிக்கைகள் இவைதான்:

1.கறாரான ஆய்வு: இராணிப்பேட்டையில் இயங்கும் அனைத்து நச்சு ஆலைகளையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உடனே முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

2.நிரந்தர மூடல்: விதிமுறைகளைத் தொடர்ந்து மீறி வரும் ஆலைகளை எவ்விதப் பரிந்துரையுமின்றி நிரந்தரமாக இழுத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.குரோமியக் கழிவு அகற்றம்: தேங்கிக் கிடக்கும் 1.6 லட்சம் டன் குரோமியக் கழிவுகளைப் பாதுகாப்பான இடத்திற்கு அகற்றி, மண்ணைச் சீரமைக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.பயன்பாட்டுத் தெளிவு: விதிக்கப்பட்ட அபராதத் தொகையை உடனடியாக வசூலித்து, அதன் மூலம் பாதிக்கப்பட்ட நீர்நிலைகளையும் நிலத்தையும் மீட்க வேண்டும்.
 
முடிவுரை

மக்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிட்ட இராணிப்பேட்டையை நச்சுக்களில் இருந்து மீட்க வேண்டியது நமது தலையாய கடமையாகும். சம்பந்தப்பட்ட நிர்வாகமும், ஆட்சியாளர்களும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், மக்களின் வாழ்வுரிமையைக் காக்கத் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது காலத்தில் கட்டாயம்.

இராணிப்பேட்டை என்பது வெறும் தொழிற்சாலைகளின் காடு அல்ல; அது மனிதர்கள் வாழ வேண்டிய மண்!

இராணிப்பேட்டை மோசமான மாசில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நாட்டின் நெறிமுறையிலும் நியாயத்திலும் ஒரு வீழ்ச்சி!

இந்தத் தேர்தல் காலத்திலாவது, இது சம்பந்தப்பட்டவர்களின் காதுகளை எட்டட்டும்!

பொன்.சேகர்
வழக்கறிஞர்

செய்தி ஆதாரம்: வாலாஜா ஜெ.அசேன் (Ex.MLA) அவர்களின் புகார் மனு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகள்.

No comments:

Post a Comment