Saturday 2 March 2024

ராமர் ஒரு கிராமர் (Grammar)!

ராமர் ஒரு கிராமர் (Grammar)
ஜெய் ஸ்ரீ ராம் பக்தி முழக்கமா? அரசியல் முழக்கமா?

ஆலயம் தொழுவது
சாலவும் நன்று..!
கோவில் இல்லா ஊரில்
குடியிருக்க வேண்டாமென்ற
முதுமொழிகளுக்கு ஏற்றம்
தந்த புனித பூமி..!

மதங்கள்
வாழ்க்கை சாகரத்தின்
வழிப்பயணத் துடுப்புகள்
என்பதை மறந்து
மதப் பேய் பிடித்து
ஆட்டம் போடுகின்றனர்..!

பல்வேறு பெயர்களில்
பல்வேறு பிரிவுகள்
என்றாலும்..,
ஒரே பரம்பொருளிடமிருந்து
உதித்தவைதான் மதங்கள்
என்பதையே சிவவாக்கியரும்
பின்வருமாறு பாடிவைத்தார்...

"தங்கம் ஒன்று ரூபம் வேறு
தன்மையானவாறு போல்
செங்கண்மாலும் ஈசனும்
சிறந்திருந்தது உம்முளே
விங்களங்கள் பேசுவீர்
விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற ராம
நாமம் இந்த நாமமே..."

மக்கள் நெஞ்சக் குழியில்
நாதமாக ஒலிக்கும்
ஆன்மீக இலக்கணமான ராமநாமத்தை
அரசியல் அரங்கில்
அரங்கேற்றம் செய்தனர்..!

கடந்த 
வங்க சட்டமன்றத் தேர்தலில்
பிஜேபி vs திரிணாமுல் காங்கிரஸ் 
என ஆரம்பித்து 
பிறகு
மோடி vs  மம்தா பானர்ஜி 
என மாற்றி 
இறுதியில்...
ஜெய் ஸ்ரீராம் vs ஜெய் காளி
என உரக்க முரசுகொட்டி
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இறுதி முடிவின் விளைவு 
ஜெய் காளியே வென்றது..!

இதிலிருந்து 
படிப்பினையைப் பெறாமல் மீண்டும் 
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில்
சாதனையைச் சொல்ல
சரக்கில்லாததால்
ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தை
ஒலிக்கச் செய்யும் முயற்சி...!

பக்தி மேவியதால் 
பல ஆலயங்கள் கட்டப்பட்டது வரலாறு..! 
ஆனால்...
பதவிப் பசியைத் தணித்துக்கொள்ள
மோடி அரசால் 
இராமர் ஆலயம்  கட்டப்பட்டது தகராறு..!

அன்னை கைகேயியின்
ஆணையை ஏற்று
தன் தம்பி பரதனே
நாடாளட்டும் என்று
"என் பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்றதன்றோ"
எனப் பகர்ந்து
பதவி துறந்து கானகம் புகுந்த
உன்னத புருஷனின்
பெயரைப் பயன்படுத்தி
பதவிப் பித்தலாட்டம்
நடத்துவது தருமம்தானா..?

தற்போதைய அரசியலில்
நேரு குடும்ப இளந்தளிரின்
நடைப்பயணம்
இந்திய அரசியலையே
புரட்டிப் போட்டுக்கொண்டு
இருக்கிறது..!

வருங்காலம் 
காங்கிரஸின் ✋யில்..!
மீண்டும் ஒரு முறை
ஜெய் ஸ்ரீராம் எனும் கோஷம்
மதிப்பிழக்க வேண்டுமா..?
சிந்திப்பாரா மோடிஜி..?

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA

No comments:

Post a Comment