Sunday 26 March 2023

வெல்லட்டும் இராகுல் காந்தி அவர்களின் அறப்போர்!

  • எம்.பி பதவி பறிப்பு பற்றிக் கவலை இல்லை!
  • சிறையில் அடைத்தாலும் தொடர்ந்து கேள்வி கேட்பேன்!
  • வாழ்நாள் முழுவதும் தடை விதித்தாலும், மக்களுக்காகக் குரல் எழுப்புவேன்! - இராகுல் காந்தி

பிரதமர் மோடியின் அரவணைப்பில், குஜராத்தைச் சேர்ந்த அதானி என்கிற முதலாளி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு கடந்த மூன்று ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்து, உலகின் மூன்றாவது பெரிய பணக்காரனாக உயர்ந்தது எப்படி என்பதை கடந்த ஜனவரி மாதம் வெளியான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளிப்படுத்தியது.

இது குறித்து முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இராகுல் காந்தி அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இராகுல் காந்தி அவர்களின் கேள்விக் கணைகளை எதிர்கொள்ளத் திராணி இன்றி, 2019 ஆம் ஆண்டு அவதூறு வழக்கு ஒன்றை தூசு தட்டி, அவசர அவசரமாக இராகுல் காந்தி அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், அதைத் தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தும் பழிவாங்கி வருகிறது மோடி தலைமையிலான பாஜக அரசு.

அதானி குழுமத்தின் போலி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி பணம் யாருடையது? பிரதமர் மோடி-அதானி இடையே என்ன தொடர்பு இருக்கிறது? என்பதுதான் என் கேள்வி. இதை திசை திருப்ப பாஜக முயற்சிக்கிறது. இதனாலேயே, என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக நான் பேசியதாக குற்றம் சாட்டுகின்றனர். நான் எந்த சமுதாயத்தையும் அவமதிக்கவில்லை. இந்த 20 ஆயிரம் கோடி ரூபாய் யாருடையது என்பது அவர்களுக்குத் தெரியும். இதனால் பதற்றத்தில் உள்ளனர்.

இப்போதைய சூழல் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக இருக்கிறது. எங்கள் கையில் பா.ஜ.-வினரே ஆயுதங்களை அளித்துள்ளனர். எனக்குச் சிறப்பான பரிசை வழங்கி உள்ளனர். அதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

எனது பெயர் இராகுல் காந்தி. நான் சாவர்க்கர் இல்லை. நான் யாரிடமும் மன்னிப்புக் கோர மாட்டேன். நாடாளுமன்றத்தில் பேச அனுமதி கோரி இரண்டு முறை கடிதம் அளித்தேன். மக்களவைத் தலைவரை நேரில் சந்தித்துப் பேசினேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. நாட்டில் ஜனநாயகம் இல்லை. மனதில் உள்ளதை யாராலும் தைரியமாகப் பேச முடியவில்லை. அனைத்து அரசு அமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இன்றைய சூழலில் மக்களைச் சந்திப்பதைத் தவிர எதிர்க்கட்சிகளுக்கு வேறு வழி இல்லை.

பொதுவாக, அரசியலில் யாரும் உண்மையைப் பேசுவதில்லை. ஆனால், நான் உண்மையை மட்டுமே பேசுகிறேன். அது என் இரத்தத்தில் கலந்தது. சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை. வாழ்நாள் முழுவதும் தடை விதித்தாலும் கவலை இல்லை. மக்களுக்காகக் குரல் எழுப்புவேன். சிறையில் அடைத்தாலும் தொடர்ந்து கேள்வி கேட்பேன். எனக்கு மீண்டும் எம்.பி பதிவு கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, என்னை நிரந்தரமாக தகுதி இழக்க செய்தாலும் சரி, கவலைப்பட மாட்டேன்.

நாடாளுமன்றத்திற்கு உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்வேன். வயநாடு மக்களை மிகவும் நேசிக்கிறேன். எப்போதும் மக்களோடுதான் இணைந்திருப்பேன். எனக்கு ஆதரவளித்து அனைத்து எதிர் கட்சிகளுக்கும் நன்றி. நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்!

என, தனக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, எம்.பி பதவி பறிக்கப்பட்ட சூழலிலும், இராகுல் காந்தி அவர்களின் இந்தச் சூளுரை இந்திய மக்களை நிச்சயம் தட்டி எழுப்பும். பாஜக-மோடி கும்பலை அரசியல் அதிகாரத்தில் இருந்து அகற்றும் வரை இராகுல் காந்தி அவர்களோடு கரம் கோர்ப்போம்!

  • வெல்லட்டும் இராகுல் காந்தி அவர்களின் அறப்போர்!
  • வீழட்டும் பாஜக-மோடி கும்பலின் அராஜக ஆட்சி!
வாலாஜா ஜெ.அசேன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

*****


No comments:

Post a Comment