Friday, 16 January 2026

ஒன்றும் தெரியாத பாப்பா போட்டுக்கொண்டாளாம் தாப்பா!

"ஒன்றும் தெரியாத பாப்பா போட்டுக்கொண்டாளாம் தாப்பா!" - எனும் கிராமத்துப் பழமொழிக்கேற்ப, ஊழலின் உச்சம் தொட்டவர்கள் இன்று உத்தமர் வேஷம் போடுகிறார்கள்!

'ஆட்சியில் ஊழல், ஊழல், ஊழல்' என்று ஊர் ஊராகப் பல்லிளித்துப் பேசி வருகிறார் பழனிசாமி..!

  • அடையாளம் தெரியாமல் இருந்த அக்ரகாரச் சிறையை, அகில இந்தியாவிற்கும் அடையாளம் காட்டியது யார் ஆட்சி?

  • செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கோட்டைவிட்ட பிறகு, நீதிமன்ற வளாகங்களில் உலாவரும் முன்னாள் அமைச்சர்கள் எந்தக் கட்சி?

  • குட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதை இவ்வளவு சீக்கிரம் மறந்துவிடலாமா?

அங்கிங்கெனாதபடி ஊழல் செய்ததால் அமலாக்கத் துறையிடம் மாட்டி, அமித்ஷாவிடம் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துச் சோரம் போனவர்களா வீரம் பேசுவது? அமித்ஷாவின் உடல் அசைவுக்கு ஏற்ப அம்மிக்கல்லாய் உருளும் அர்த்தநாரிகள் மீண்டும் ஆளக் கனவு காண்பதா, ஊர்ந்து ஊர்ந்து சென்று பாத பூஜை நடத்திப் பதவி பெற்றவர்!

தியாகக் கனலில் புடமிடப்பட்டு, பொதுநலத்தில் தன்னை அர்ப்பணித்து, தமிழகத்தின் வரலாற்றையே மாற்றி, நிர்வாகத் திறனில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகத் தலைநிமிரச் செய்தவர் நம் முதல்வர். தமிழ் மணம் கமழப் புத்தாண்டை மலரச் செய்த வித்தகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை, இனப்பற்றற்ற, மொழிப்பற்றற்ற பாதம் தாங்கிகள் வீழ்த்த நினைப்பது துரோகத்தின் உச்சகட்டம்!

எம்.ஜி.ஆர் அவர்களாலும், அம்மையார் ஜெயலலிதாவாலும் இரும்புக் கோட்டையாகக் கட்டியமைக்கப்பட்ட அதிமுகவை மணல் கோட்டையாக்கிச் சிதைத்து, விழுதுகளையெல்லாம் வெளியேற்றி, கட்சியை அடமானம் வைத்தது போல் தமிழகத்தின் உரிமைகளையும் அமித்ஷாவிடம் அடமானம் வைக்க ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கிறீர்கள்!

தங்களின் பேச்சு "கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானமேறி வைகுண்டம் காட்டுவேன்" என்று கூறுவதைப் போன்ற வெற்றுப் பேச்சு! வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது!

- வாலாஜா அசேன், முன்னாள் MLA

No comments:

Post a Comment