Wednesday, 30 August 2023

களவாடப்பட்ட கடின உழைப்பு!

களவாடப்பட்ட கடின உழைப்பு!


அன்று...
விண்ணோடும் 
முகிலோடும்
விளையாடும்
வெண்ணிலவே..!

இன்று...
விண்ணோடும், 
விஞ்ஞான சந்திராயனோடும்
இசைந்தாடும்
பால் நிலவே..!

உன்னில், 
'பாட்டி வடை சுட்ட கதை'
பழமையானது..!
ஆனால்...

உன்னை வைத்து
தாத்தா சுடும் வடையோ...
வகை வகையானது..!

சாதனையை 
வார்த்தெடுக்க உழைத்தவனுக்கு
கைத்தட்டல் மட்டுமே
கதையானது..!

ஊர் சுற்றும் உல்லாசிக்கு
விண்ணளவு
பாராட்டானது..!

இஸ்ரோ அணியின் உழைப்பு
களவாடப்படும்
விந்தையானது..!


1962 இல்...
இந்தியப் பொருளாதாரத்தின்
இருண்ட காலம்., 
அது
இஸ்ரோ கண்விழித்த நேரம்...

வறுத்தெடுத்த
வறுமையின் வேரை
அறுத்தெறிந்த
அருந்தவப் புதல்வன் 
நேருபிரான்..,

விக்ரம் சாராபாய்
மற்றும் 
ஹோமி பாபாவின்
துணையுடன்
விண்வெளி
ஆய்வுக் களத்தை
வடிவமைத்தார்..!

ஆரியபட்டா துவங்கி
சந்திராயன் 3 வரை
மண்ணிலிருந்து
விண்ணோக்கிப் பாய்ந்த
அக்னிச் சிறகுகள்
அனைத்தும் - அன்று 
நேரு விதைத்த
விதையின்
விருட்சங்களாகும்..!

மதம் பார்த்து
மகுடம் சூட்டப்பட்ட
மாமனிதர் போடும்
சதிராட்டமோ.., 
வேதனையானது..!

அங்கே
வானத்து நிலவில்
சந்திராயனின்
ஆராய்ச்சி..,

இங்கே 
வானவில்லின்
உச்ச நட்சத்திரத்தின்
பாத சரண
ஆராய்ச்சி...

பதவி போதையில்..,
இரத்த வெள்ளத்தில்
குளிர்ச்சியைக் காண்பவன்.,
புல்டோசரைக் கொண்டு
எளிய மக்களின் வசிப்பிடங்களையும்
இடித்து மகிழ்பவன்.,
காவலர் பாதுகாப்பில்
விசாரணைக் கைதிகளை
சுட்டுக் கொல்லும் அநீதியை
நீதியாக்குபவன்தான்
சந்நியாசி - என
கண்டுபிடிப்பு..!

தமிழ் அகராதியிலோ..,
தினம் தினம்
இரந்து உண்பவன்,
முற்றும் துறந்தவன்தான்
சந்நியாசி..!

விஞ்ஞானத்தை
சந்தைப் பொருளாக்கி..,
பித்தலாட்டமாய்
விளம்பரம் தேடும்
விந்தை மனிதர்களை
வீழ்த்த..,

பெரியாரின்
புரட்சி வெடிக்கும் காலம்
வெகு தொலைவில் இல்லை..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

No comments:

Post a Comment