Saturday, 2 August 2025

ஆலைக் கழிவுகளால் வாழத் தகுதியற்ற இடமாய் மாறிவிட்ட இராணிப்பேட்டை!

கொடிய நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் திருமலை கெமிக்கல்ஸ், அல்ட்ரா மரைன், மல்லாடி உள்ளிட்ட 16 சிவப்பு வகை ஆலைகளாலும்,

ஆண்டுக் கணக்கில் அகற்றப்படாமல் இருக்கும் தமிழ்நாடு குரோமேட்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் மலைபோல குவிக்கப்பட்டு கிடக்கும் 1.6 லட்சம் டன் குரோமேட் கழிவுகளிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளாலும்,

நீர், நிலம், காற்று என் அனைத்தும் மாசடைந்து பாழ்பட்டுவிட்டதால்  உலகின் மாசடைந்த நகரங்களில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இராணிப்பேட்டை, இனி மக்கள் வாழத் தகுதியற்ற பூமியாக மாறிவிட்டதோடு, மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு, அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குள்ளாகிவிட்டது. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளும்கூட சுற்றுச்சூழல் கேடுகளிலிருந்து தப்பிக்க முடியவில்லை.

திருமலை கெமிக்கல்ஸ் (TCL) நிறுவனம் தனது ஆலையில் உள்ள நச்சுக் கழிவுகளை 2019 ஆம் ஆண்டு மழைநீர் கால்வாயில் திறந்து விட்டதையொட்டி, ஆலை தற்காலிகமாக மூடப்பட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, சில நிபந்தனைகளின் அடிப்படையில் அந்த ஆலை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
 
மழைக் காலங்களில் ஆலைக்குள்ளிருந்து மழைநீர் வெளியே செல்லாத வகையில் நீர் வளையங்களை அமைத்தல், பெருமழைக் காலங்களில் ஆலைக்குள் வழிந்தோடும் நீரை ஆலைக்குள்ளேயே மறுசுழற்சி செய்வதற்கேற்ப, மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கி, அந்நீரை மறுசுழற்சி செய்து ஆலையின் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட  நிபந்தனைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்தபோதும்,

இவற்றையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் ஆலையில் தேக்கி வைத்திருக்கும் கொடிய நச்சுக் கழிவுகளை, மழைநீர் கால்வாயின் வழியாக வெளியே திறந்து விடுவதை  திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனம் வாடிக்கையாக செய்து வருகிறது. மற்றபிற சிவப்பு வகை ஆலைகளும்  விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
 
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அமைச்சரை சந்தித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில் புகார் கொடுத்ததன் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் விதிமீறல்களில் ஈடுபட்ட ஆலைகள் முதல் தவணையாக ரூ.18.6 லட்சமும், இரண்டாவது தவணையாக தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு ரூ.6.88 கோடியும் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட பிறகும், அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது இன்று வரை தெரியவில்லை. 

எனவே, இராணிப்பேட்டையில் இயங்கும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் அனைத்து ஆலைகளையும் முழுமையாக ஆய்வு செய்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த விதிமுறைகளை கடைபிடிக்காத ஆலைகளை நிரந்தரமாக இழுத்துமூட உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், மாவட்ட ஆட்சியருக்கும் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் மூலம்
மனு அளிக்கப்பட்டுள்ளது.

பன்நெடுங்காலமாக இந்த மண்ணையே நம்பி வாழும் இராணிப்பேட்டை மக்கள் இம்மண்ணை விட்டு புலம் பெயராமல் இங்கேயே வாழ வேண்டுமானால், ஈரநெஞ்சம் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள், கல்நெஞ்சம் கொண்ட நச்சு ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால், அது மாவட்ட ஆட்சியரின் பொற்காலமாக மட்டுமன்றி, இம்மண்ணின் கடைசி செடிகூட அசைந்தாடி அசைந்தாடி மாவட்ட ஆட்சியரின் புகழ் பாடிக் கொண்டிருக்கும்!

இணைப்பு:

# மாவட்ட ஆட்சியருக்குப் புகார் மனு 

# ரூ.18.6 லட்சம் இழப்பீடு குறித்த
 21.01.2020 தேதியிட்ட மத்திய மாசு  கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணை. 

#ரூ.6.88 கோடி இழப்பீடு குறித்த
 19.05.2020 தேதியிட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணை






Wednesday, 2 April 2025

அடக்கம் அமரருள் உய்க்கும்...!

அடக்கம் அமரருள் உய்க்கும்...
அண்ணாமலை  
எனும் புண்ணாக்கு 
போட்டாரே தப்புக் கணக்கு..!

காக்கியைக் கழட்டினார்.,
காவியில் குடி புகுந்தார்..!
ஆவி தீர..,
அண்டா வாயால்
அண்டப் புளுகை
அவிழ்த்து விட்டார்..!

அரசமரத்தைச் சுற்றியதும்
அடிவயிற்றை
தடவிப் பார்ப்பதுபோல்
அரசியலில்
அடியெடுத்து வைத்தவுடன்
முதலமைச்சர் பதவிக்கு 
குத்தாட்டம் போட்டார்..!

***
அவரைப் போல
ஒரு ஐ.ஏ.எஸ்
காங்கிரஸில் சேர்ந்தார்..!
அடக்கமாக
களம் கண்டார்..!
அன்புடன் மக்களைக்
கவர்ந்தார்..!
பொய் புரட்டு வாந்தி
எடுக்கவில்லை..!
மக்கள் இதயங்களை
வென்றார்..!

கடந்த..,
மக்களவைத் தேர்தலில் 
சுமார் ஐந்தரை 
இலட்சம் வாக்குகள் 
வித்தியாசத்தில்
சந்தித்த முதல்
களத்திலேயே
வெற்றிவாகை சூடி
எம்.பி ஆனார்..!
அவர்தான் 
சசிகாந்த் செந்தில் MP..!

***
தன் தற்பெருமை அரசியலால்
எல்லாக் களங்களிலும்
தோல்விகளே
பரிசாகப் பெற்றார்.!
பாவம் சாட்டைவீச்சு
கழைக் கூத்தாடியாக
அவரை நிற்க வைத்த
அவலத்தை
தமிழகம் கண்டது..!

எம் பாட்டன் சொன்னான்..,
"அடக்கம் அமரருள்
உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்."
என்று..!
இரண்டு இலட்சம் 
புத்தகங்கள் படித்ததாக
தம்பட்டம் அடித்த அவர்...
பாட்டன் வள்ளுவனைப்
படிக்க மறந்து 
விட்டாரே...? 🤔

வாலாஜா ஜெ.அசேன் Ex.,MLA

Thursday, 5 December 2024

அதானியின் ஊழல் மேக வெடிப்பு!

அதானியின் ஊழல் மேக வெடிப்பு!

ஊழல் பெருங்கடலில் 
உலா வந்த 
அதானியின் தோணி..!
அதுவே மோடிஜீயின் பாணி..!
அமெரிக்க நீதியலைகள் கவிழ்த்ததே காணீர்..!

ஏற்கனவே,
பதினேழு விதேசி விருதுகள் வாங்கியவருகு..,
நேற்று,
கயானா, டொமினிக்கா, பார்படோஸ் நாடுகளின் 
உயரிய விருதுகள் 
வழங்கிய நேரத்தில்..,

சட்டத்தின் சன்னிதானத்தில்
அமெரிக்க நீதிமன்றமும்
குற்றப் பத்திரிக்கையை 
வாசித்துள்ளது..!


கடந்த காலத்தில்
அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க்
ஆய்வு நிறுவனம்
மொரீஷியசில் இல்லாத
நிறுவனத்திலிருந்து
இருபதாயிரம் கோடி ரூபாய்
அதானி குழுமத்திற்கு
வந்தது எப்படி என
குற்றம் சாட்டியது..!

இப்போது
அமெரிக்க நீதிமன்றத்தில்
குற்றப்பத்திரிக்கை
அறிவிப்பு..!
இது ஊழல்
மேக வெடிப்பு..!

இதுவரை
நமக்குத் தெரிந்தது...,
டெல்லிகேட்,
டோல்கேட்,
கோல்கேட்,
இப்போது அதானியின் "ப்ரைப்"கேட்..!
இது மோதானியின்
உச்சகட்ட சாதனை..!

கூடாநட்பு கேடாய்
முடியுமென
ஆரம்பத்திலேயே
சங்கு ஊதிய
சரித்திர நாயகன்
ராகுல்ஜீ...
இப்போது
வியாபாரி அதானியைக்
கைது செய்ய
எரிமலையாய் வெடிக்கிறார்..!

விசாரணை தீர்ப்பு வந்தால்தான் 
குற்றவாளியென
மோதானி பாய்ஸ் புலம்பல்..!

இந்த புத்தி
இந்தியாவின்
பொருளாதார மேதை
முன்னாள் உள்துறை அமைச்சர்
ஐயா ப.சிதம்பரம்  அவர்களை
106 நாட்கள்
விசாரணைக் கைதியாக
பழிவாங்கிய போது
எங்கே போனது..!

மதப்போர்வையால் மறைக்கப்பட்டுள்ள
மாயாஜால வித்தைகள் 
இனி
மக்கள் அரங்கில் எடுபடாது..!
தெய்வம் நின்று கொல்லும்..!!

வாலாஜா ஜெ.அசேன் Ex.MLA

சாக்கடை நீரில் மிதக்கும் வாலாஜா மகளிர் கல்லூரி!

வட தமிழ்நாட்டை உலுக்கிய ஃபெஞ்சலைக் கண்டு ஓடி ஒளிந்திருந்த மூடுபனி, புயல் அகன்றதை எட்டிப்பார்த்து பூமித்தாயை சூழ்ந்து கொண்டது. மூடுபனி பார்ப்பதற்குச் சாதுவாய் தோன்றினாலும் அதுகூட பலரை முடக்கிவிடும். இது ஒரு ஊமகொட்டான். ஆனாலும் என்னை இதமாய் வருடிவிடும் காதலி இது. இன்று இவளைக் கைபிடிக்க கையில் கைபேசியோடு புறப்பட்டேன்.

வழக்கமான பாதைதான் என்றாலும் அவளை பரந்தவெளியில் கைபிடிக்க, திறந்தவெளி நோக்கிச் சென்றேன். செல்லும் வழியில் கழிவுநீர் வாய்க்கால் பராமரிப்பின்றி கிடப்பதால் அண்மையில் பெய்த மழை நீர் பெருக்கெடுத்து கணபதி நகர் டி.என்.எச்.பி சாலையில் புரண்டோடி சரலைகளால் சாலை வேயப்பட்டிருந்தது.

விசாலமான இடத்தில் மூடுபனியை கைக்குள் அடக்கி, அருகில் குளிருக்கு இதமாய் நீண்ட கவுன் அணிந்து ஒய்யாரமாய் நின்ற ஒற்றைப் பனையையும் அணைத்துக் கொண்டு, அக்கம் பக்கம் பார்த்த போது அருவெறுப்பே மிஞ்சியது.

எடக்குப்பம்-அனந்தலை செல்லும் கூட்டுச் சாலையின் முகப்பில் வலப்பக்கம் அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி. அங்கே அதன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து குப்பை கொட்டும் பாழிடமாய் மாறிவிட்டது. வாலாஜாவிலிருந்து ஓடிவரும் சாக்கடை நீரில் கல்லூரி வளாகம் மூழ்கிப் போனது.

அதற்கு எதிரில் ஈமக்கிரியை செய்யும் குளக்கரையின் இடப்பக்கம் ஏழை மகளிர் தங்கும் விடுதி, வலப்பக்கம் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, இரண்டுக்கும் இன்றும் மண்பாதைதான். இருண்டு விட்டால் கைபேசிதான் பாதை காட்டும்

அங்கு, முச்சந்தியில் கொட்டப்படும் நகரக் கழிவுகளின் நாற்றத்தில் நாள்தோறும் அவதியுறும் விடுதி வாசிகள். குளக்கரையில் காரியம் செய்பவர்களைக்கூட இந்த நாற்றம் தொடாமல் விடுவதில்லை. ஆனால் அது அவர்களுக்கு ஒரு நாள் கேடு. ஆனால் விடுதி வாசிகளுக்கோ அது ஒவ்வொரு நாளும் கேடு.

இதற்கு மேற்கே, சென்னை செல்லும் முதன்மைச் சாலையில் தீனபந்து ஆசிரமம். அதையொட்டி அதன் அருகே சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள் அருவருப்பின் உச்சம்.

சுற்றிலும் மாணவர்கள். பூஞ்சோலையாய் பராமரிக்கப்பட வேண்டிய இடம் இன்று பேய்கள் உலாவும் இருண்ட காடாய் உரைந்து கிடக்கும் எடக்குப்பம் கூட்டுச்சாலை. அதிகாரிகளின் கண்கள் திறக்குமா? இருண்ட காட்டில் வெளிச்சம் பாயுமா?

ஊரான்

தீனபந்து வளாகம்

எடக்குப்பம் கூட்டுச்சாலை கல்லூரி வளாகம்


எடக்குப்பம் கூட்டுச்சாலை கல்லூரி வளாகம்

Sunday, 17 November 2024

மக்களாட்சியின் மாண்புக்கு மகுடம் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்..!

மக்களாட்சியின் மாண்புக்கு 
மகுடம்  சூட்டிய 
முதல்வர் ஸ்டாலின்..!

தொலைக்காட்சியில்..,
இதயத்தில் 
ஈரம் பாய்ச்சியக் காட்சி..!

அதிகார போதையால் 
ஆட்டம் போடும் 
அநேகத் தலைவர்கள் மத்தியில் நிறைகுடம் தளும்பாது என்பதை நினைவு படுத்தும் நிகழ்ச்சி..!

பழம்பெரும் மூத்தத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள்., 
தோழர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு விழாவுக்கு 
சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அழைக்க 
அவரது இருப்பிடம் போகிறார். 
வாயிலின் வெளியே வந்து வரவேற்று, 
கனிவாக உபசரித்து, 
பணிவாக மரியாதை தந்து, மீண்டும் வாயில் வரை வந்து 
காரில் வழியனுப்பி வைத்தக் காட்சி..,

"இந்தக் காலத்திலும் 
இப்படி ஒரு முதலமைச்சரா?" - என வியக்காத விழிகள் இல்லை..!

இளைஞரணியின் 
தொடக்கக் காலத்தில் - நான் அவரிடம் பழகும்போது 
கண்ட பணிவும், கனிவும் முதலமைச்சரான பிறகும் கரையவுமில்லை, மறையவுமில்லை..!

மகிழ்ச்சியால் 
மனம் நிறைந்த போதுதான் 
எனது மாவட்டத்தில் 
நிகழ்ந்த நிகழ்ச்சி 
நினைவுக்கு வருகிறது..!

இராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு வளாகம் 
ரூபாய் பதினைந்து கோடி மதிப்பில் கட்டுவதற்கான தொடக்கவிழா நடைபெற்றது..!

அவ்விழாவிற்கு 
கூட்டணியாக இருக்கும் 
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் அழைக்கப்படவில்லை..!
விழா ஒட்டுமொத்த மாவட்டத்துக்கானது... ஆனால் இராணிப்பேட்டை 
மாவட்ட அமைச்சரோ 
தன் தொகுதிக்கு மட்டுமான விழாவாக நடத்தியுள்ளார்..!

பலமுறை 
பல நிகழ்ச்சிகளில் 
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ.எம். முனிரத்தினம் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்..!


கடந்த செப்டம்பர் மாதம் 
சோளிங்கர் தொகுதியைச் சார்ந்த பனப்பாக்கத்தில்  
சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 
கார் தொழிற்சாலை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 
திருக்கரத்தால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அவ்விழாவில் 
தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினருக்கு 
மேடையில் அமரும் வாய்ப்புகூடத் தரப்படவில்லை..!

தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பாக 
மாண்புமிகு முதல்வரை வரவேற்க., 
வரவேற்பு பதாகைகள்  ஏற்பாடு செய்ததை கட்டுவதற்கூட அனுமதி வழங்கப்படவில்லை..!
ஆளுங்கட்சியின் சார்பாக மட்டும் பதாகைகள் கட்டப்பட்டன..!

மாண்புமிகு முதலமைச்சர் 
எல்லா மக்களுக்கும் பொதுவானவர்.
அவரை மக்களிடமிருந்து
மாவட்ட மந்திரி 
தோழமைக் கட்சியினரை புறக்கணிப்பது..,
தன்னை 
மன்னர் கிருஷ்ணதேவராயராக நினைத்து 
செயல்படுவதாகத் தெரிகிறது..!

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA

Thursday, 1 August 2024

கண்ணீர்க் கடலில் கடவுளின் தேசம்..!

கண்ணீர்க் கடலில் கடவுளின் தேசம்..!


இதயத் தடாகத்தில்
இன்ப அலை எழுப்பும்
தாய் மண்ணே வணக்கம்..,
தாய் மண்ணே வணக்கம்..!

ரகுமானின் இசையால்
உள்ளம்  நிறைந்த
தாய்மண்...
வயநாட்டில் சேய்களை
விழுங்கியதே..!

விடியலில் விழிப்போமென
கண்மூடியவர்களை
விடியும் முன்னே
மண்மூடியதே.!

கடவுளின் தேசத்தில்
மரணகீதம்...!
எழிலழகு இசைபாடும் பூமியில்
ஊழி வெள்ளத்தின்
ருத்ரதாண்டவம்..!

மேக வெடிப்போ...
வானக்கிழிப்போ...
வயநாடு...
காலநதியில் கரைந்து
விடைபெற்ற இடத்தின்
நினைவுச் சின்னமானதே..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Thursday, 21 March 2024

வசந்த விடியலை வரவேற்போம் வா...!

வசந்த விடியலை வரவேற்போம் வா...!


நாட்டைக் காக்க 
நெடும் பயணம்..!
பாரத தேசமெங்கும் - தன்
பாதச் சுவடுகளை பதியவிட்டு
பாசிச சக்தியின்
பிடறி முடியை 
பிடித்துப் பந்தாடி
மக்கள் உரிமையை 
மீட்டெடுக்கும்
இலட்சியப் போராளியின்
அதிரடி அறிவிப்பு..!
மோ(ச)டியின் காடியை
ஆட்டம் காண வைத்துள்ளது..!

பெண்ணினத்தின் பெருமையை
நாவால் நடனமிட்டு ஏமாற்றும்
மோடியின் தொண்டையை அடைக்கும் 
அபாய அறிவிப்பு..!
ஏழைப் பெண்களுக்கு
ஆண்டுக்கு ஒரு இலட்சம்..!
அரசு வேலையில் 50 சதவீதம்..!
அங்கன்வாடி, ஆஷா ஊழியர்கள் மற்றும் மதிய உணவு திட்டத்திற்கு
வழங்கும் நிதி இருமடங்கு உயர்வு..!
ஆட்சிக்கு வந்த ஆண்டே
இருபது இலட்சம்
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு..!

இவை அனைத்தும்..,
அடுத்து மலரப்போகும் 
மக்கள் ஆட்சியின் மகுடாதிபதி இராகுல்காந்தியின் அதிரடி
நடைப்பயண வெடிமுழக்கம்..!
நாட்டு மக்களின்
இரத்த நாளங்களில் 
இதயத்தாளங்களாய் 
ஒலிக்கத் துவங்கிவிட்டது..!

வெளிபப்டையான நிர்வாகமென 
வெளிச்சம் போட்டு 
மோடியின் ஆட்சிக்குத் துதிபாடிய பத்திரிக்கை தும்பிகளே..,
உச்சநீதிமன்ற துந்துபி முழக்கத்திற்கு பதில் என்ன?
இடிமுழக்கம் கேட்ட நாகம்போல்
அடங்கிப்போனது ஏன்..?

மோடியின் வித்தைகள்
வெளிச்சத்துக்கு வந்துவிட்டது..!
அரசின் அனைத்து அமைப்புகளையும் 
தனது பதவியைத் தக்கவைக்க பயன்படுத்தி வரும் மோடிக்கு கடைசி ஆயுதம் EVM எனும் மின்னணு வாக்கு எந்திரம்தான்..!
அதற்கும் உச்சநீதிமன்றம் வழிகாட்டும் என 
நாடு எதிர்பார்க்கின்றது..!
மோடி கும்பல்களின் முகமூடியை
நீதி தேவதைகள் கிழித்துக்கொண்டிருக்கின்றன..!
காரிருள் கரைந்து கீழ்வானம் சிவந்துவிட்டது..!

களம்காணத் துடிக்கும் காளைகளே...
களமாடுவோம் வாருங்கள்.!
தன்னம்பிக்கையின் தளநாயகன்
இராகுல்ஜீயின் தலைமையில்
வேற்றுமையின் வேரறுத்து,
ஒற்றுமை நாதம் ஓங்கி ஒலிக்க
சுதந்திர இந்தியாவின் புதிய பரிணாமத்தை பூவுலகிற்கு தருவோம்! புறப்படு...!
Do or die 
மகாத்மாவின் அன்றைய 
ஆத்ம ஒலிக்கு 
இன்று விடை காண
I.N.D.I.A கூட்டணியின் 
மறவர் கூட்டமே
தேர்தல் அழைக்கிறது...
ஒன்றுபட்டு தேர்தல் களம் காண்போம்  வா..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA