Friday, 7 April 2023

இராகுல் காந்தியைப் பழி வாங்கும் மோடி அரசைக் கண்டித்து வாலாஜாப்பேட்டையில் பொதுக்கூட்டம்

ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து, அதானி-மோடி இருவரின் கள்ளக் கூட்டு குறித்தும், ஷெல் கம்பெனிகளில் அதானி பெயரில் குவிந்து கிடக்கும் 20 ஆயிரம் கோடி ரூபாய் யாருடையது என்றும் அடுத்தடுத்து கேள்விகள் எழுப்பிய இராகுல் காந்தி அவர்களுக்கு சிறை தண்டனை விதித்தும், எம்பி பதவியைப் பறித்தும் பழி வாங்கும் மோடி அரசின் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து, வாலாஜாபேட்டை இராகுல் காந்தி பாசறை சார்பில் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் 07.04.2023 வெள்ளிக்கிழமை மாலை மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது

நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத் அவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோடீஸ்வரன், பூக்கடை மணி, நியாஸ், தீனா, உத்தமன், மற்றும் பேராசிரியர் அன்பு, மனித உரிமை செயல்பாட்டாளர் வழக்கறிஞர் பொன்.சேகர் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
 
இந்தப் பொதுக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




தீர்மானம்
-1
 
ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து, அதானி-மோடி இருவரின் கள்ளக் கூட்டு குறித்தும், ஷெல் கம்பெனிகளில் அதானி பெயரில் குவிந்து கிடக்கும் 20 ஆயிரம் கோடி ரூபாய் யாருடையது என்பது குறித்தும் இராகுல் காந்தி அவர்கள்

தொடுத்தக் கேள்விக் கணைகளால் பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது மோடி அரசு. இராகுல் காந்தி அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணியற்ற மோடி அரசு, பழைய வழக்கு ஒன்றை தூசு தட்டி, இராகுல் காந்தி அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்து, அவர் குடியிருந்த அரசு குடியிருப்பையும் காலி செய்யச் சொல்லி பழி வாங்கி வருகிறது மோடி அரசு. இது பாரம்பரியமான நேரு குடும்பத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துக் கேள்வி எழுப்புகின்ற கருத்துரிமையைப் பறிக்கும் ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கையாகும்.
 
இளம் தலைவர் இராகுல் காந்தி அவர்களுக்கு எதிரான மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை, வாலாஜாபேட்டை, “இராகுல் காந்தி பாசறை” இந்தப் பொதுக் கூட்டத்தின் வாயிலாக மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
 
தீர்மானம் - 2
 
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கிய பிறகு தமிழ்நாடு கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிப்பதற்கு மிகவும் சொல்லொன்னாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அனிதாவைத் தொடர்ந்து எண்ணற்ற மாணவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர். மாணவர்களின் உயிர்காக்க வேண்டி, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அனுப்பி வைத்தது.
 
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை புறந்தள்ளி வரும் மோடி அரசை வாலாஜாபேட்டை, “இராகுல் காந்தி பாசறை” இந்தப் பொதுக் கூட்டத்தின் வாயிலாக மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
 
தீர்மானம்-3
 
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கிக் கொண்டு, பணத்தை இழந்து எண்ணற்ற தமிழ்நாட்டு இளைஞர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். எனவே இளைஞர்களின் தற்கொலையை தடுத்து நிறுத்தும் வகையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் எனக் கோரி ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஆளுநர் ரவிக்கு அனுப்பி வைத்துள்ளது.
 
ஆனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யக் கோரும் தீர்மானத்தை நடுவண் அரசுக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பில் போட்டுள்ளார் ஆளுநர் ரவி.
 
"சரியான காரணமின்றி ஆளுநர் ஒரு மசோதாவைத் தடுத்து நிறுத்தினால், அது நாட்டில் ஜனநாயகம் இறந்து விட்டதாகப் பொருள்படும்"
 
ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யக் கோரும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தைக் கிடப்பில் போடும் ஆளுநர் ரவியை, வாலாஜாபேட்டை, “இராகுல் காந்தி பாசறை” இந்தப் பொதுக் கூட்டத்தின் வாயிலாக மிக வன்மையாகக் கண்டிக்கிறது.




 

No comments:

Post a Comment