Friday, 18 November 2022

சுல்தானே சோத்துக்கு அழும் போது, அவன் குதிரை குலாப் ஜாமுனுக்கு அழுததாம்!

இரசாயனக் கழிவுகளால் பாலாறு பாழ்பட்டு பரிதவிக்கும் போது, இராணிப்பேட்டை, பிஞ்சி ஏரி, படகுப் பயணத்துக்குத் துடிக்கிறது.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் அமையக் கூடாத, மிகவும் அபாயகரமான, இராணிப்பேட்டையில் அமைந்துள்ள 16 சிகப்பு வகை இரசாயனத் தொழிற்சாலைகளில் இருந்து நச்சுக் கழிவுகள் வெளியேற்றப்பட்டு பாலாற்றில் கலப்பதால், பாலாறு மரணித்துக் கொண்டிருக்கிறது. 

விவசாய நிலங்கள் விதவைகளாகிவிட்டன. இராணிப்பேட்டை சிப்காட் பகுதி, மனிதர்கள் வாழ முடியாத, வியாதிகளின் விலை நிலமாக மாறிவிட்டது. 

இந்த ஆண்டு பெய்த மழையின் போது நச்சு ஆலைகள், 08.11.2022 அன்று வெளியேற்றிய இரசாயணக் கழிவுகள், பாசன ஏரிகளை நோக்கியும், விளை நிலங்களை நோக்கியும், பாலாற்றை நோக்கியும் பாய்கிறது.

இதற்குண்டான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பல கோடி ரூபாய் செலவில் இராணிப்பேட்டை, பிஞ்சி ஏரியை படகுத் துறையாக மேம்படுத்துவது என்பது மக்களை திசை திருப்பும் ஒரு நடவடிக்கை.

நச்சு இரசாயன ஆலைக் கழிவுகளால் பாதிக்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாகப் போராடிவரும் மக்களின் கோரிக்கைக்கு செவி மடுக்காமல், பிஞ்சி ஏரியை, படகுத் துறையாக மாற்றுவது என்கிற திட்டம் யாரை ஏமாற்ற? 

நச்சுக் கழிவுகளை வெளியேற்றும், இரசாயன ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காலம் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இன்று அமைச்சராக இருக்கும் அன்றைய சட்டமன்ற உறுப்பினரிடமும் மனு கொடுத்தேன். 

அதற்கு, பதில் அளிக்கும் விதமாக, குமுதம் ரிப்போர்ட்டர் 22.09.2020 தேதியில் எனக்கு அளித்த வாக்குறுதியை நான் வெளியிடக்கூடிய சூழ்நிலையை உருவாக்காமல், நச்சு ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகார பீடத்திற்கும், பீடத்தின் அர்ச்சகர்களாக உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA., BA, BL ,