Monday, 9 November 2020

நவம்பர் 8: பணமதிப்பிழப்பு: மறக்க முடியுமா?

2016 நவம்பர் 8 அன்று இரவு 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து நான்கு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கருப்புப் பணம் ஒழியும் என்றார்கள். ஆனால் புதிய 2000 ரூபாய் நோட்டு வந்தபிறகு கட்டுக்கட்டாக பதுக்கினார்கள் பணக்காரர்கள். ஏழைகளோ அன்றாடத் தேவைக்காகப் பணம் எடுக்க 'ஏடிஎம்' வாசலில் வரிசைகட்டி நின்றார்கள்‌. சொந்தப் பணத்தைக் கூட எடுக்க முடியாமல் வாடி வதங்கிச் சுருண்டு விழுந்து வாசலிலேயே மாண்டு போனார்கள். 

வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் எல்லாம் இந்தியாவுக்கு வரும் என்றார்கள். நமது பிரதமர் நாடு நாடாய் சுற்றியதில் நமது வரிப்பணம்தான் காலியானதே தவிர அந்நிய நாட்டிலிருந்து ஒரு 'அணா'கூட இந்தியாவிற்குள் வரவில்லை.

ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை என்றார்கள். ஆனால் இருந்த வேலையையும் பறித்துக்கொண்டு அவர்கள் நமக்கு 'கோடி' போட்டதுதான் மிச்சம்.

ஆளுக்கு 15 லட்சம் 'அக்கவுண்டில்' போடுவேன் என்றார்கள். ஆனால் 'கார்ப்பரேட்' முதலாளிகளுக்கோ லட்ச லட்சமாய் தள்ளுபடி செய்தார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதம் ஒழியும் என்றார்கள். ஆனால் காவிகளே தீவிரவாதிகளாய் நாடெங்கும் பரவினார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் புதிய நோட்டுகளை அச்சடித்துக் காசை கரியாக்கியதைத் தவிர வேறெதையும் யாமறியோம் 'பராபரமே!'

மறக்க முடியுமா?
மறுக்க முடியுமா?

மதி இழந்த மோடியால்
கதி இழந்து அலைந்த 
மக்களை மறக்க முடியுமா?

நவம்பர் 8 இரவு 8 மணி
நடுநடுங்கிப் போனதே வங்கிகள்

பணப் புழக்கத்தின் மீது 
'சர்ஜிகல் ஸ்ட்ரைக்'

கந்தல் கூளமானதே 
பொருளாதாரம் 
மறக்க முடியுமா?

தாடி வளர்ச்சி 
மூளை வளர்ச்சி ஆகுமா?

முற்றும் முறிந்து போன 
பொருளாதாரம் மீண்டும்
துளிர் விடுமா?

வாய்மையைப் புறந்தள்ளி
பொய்மையைப் போற்றி
புகழ் தேடும் கபட வேடதாரிகளை
மறக்க முடியுமா?


வாலாஜா ஜெ.அசேன், B.A, B.L., Ex.MLA, வழக்குரைஞர் பொன்.சேகர், B.E, M.L, M.Phil.,

நீதிக்கான குரல்



No comments:

Post a Comment