தமிழகத்தின் முதல் பிள்ளை வாலாஜாப்பேட்டை. பிறந்தது என்னவோ 1866 ல்தான் என்றாலும் இன்னமும் சவளப் பிள்ளையாய் தவழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சித்தூர் மற்றும் இராணிப்பேட்டை முத்துக்கடை பகுதிகளிலிருந்து சென்னை செல்ல விரும்புவோர் வாலாஜாப்பேட்டைக்குள் நுழைய அச்சப்பட்டு, வி.சி.மோட்டூரிலேயே ஜகா வாங்கி புறவழிச்சாலை வழியாக சென்னைக்குப் பயணிப்பர். இரண்டு கிலோ மீட்டர் நகரைக் கடக்க, சமயத்தில் இரண்டு மணி நேரம் கூட தவழ வேண்டி வரலாம். புறவழிச்சாலை வந்தபிறகும் துள்ளி ஓடும் வகையில் அப்படி ஒன்றும் மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை.
ஏன் இந்த அவலம்?
ஒரு காலத்தில் பாக்கு, பஞ்சு, வெத்தலைப் பேட்டைகளின் உறைவிடமாக இருந்த வாலாஜா, இன்று மாடுகளின் பேட்டையாக மாறிப் போனதால் பாதைகள் எல்லாம் மறிக்கப்பட்டு வருகின்றன. சாலைகள் நடுவே நந்திகள் முளைத்தால் தட்டி விட்டா கடக்க முடியும்? முடியாது என்பதால்தான் டைவர்ஷன் எடுக்கிறார்கள்.
போதாக்குறைக்கு நடைபாதைகள் எல்லாம் வியாபாரிகளின் சின்ன வீடுகளாய் மாறிப்போனதால் நடப்பதற்குக்கூட, பாதசாரிகள் நடை பயில வேண்டிய இருக்கு. முரணாய் நிற்கும் நந்திகளில் முட்டி மோதி உயிர் துறப்பதும், கோமாதாக்களின் கழிசலில் வழுக்கி விழுந்தது கால் முடமாவதும் வாலாஜாவின் காலச் சுவடுகள். கோரிக்கை வைத்து துவண்டு போன மக்களைத் தட்டியெழுப்ப தாரை தப்பட்டைகளோடு பிப்ரவரி மூன்றில் களமிறங்கினார் வாலாஜா அசேன்.
மாடுகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் காட்சிப்படுத்த, காளையாய் வேடமிட்ட ஒருவர் குறுக்கும் நெடுக்குமாய் சாலையில் ஓட, தாரை தப்பட்டையுடன் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பரிக்க, அசேன், பொன்.சேகர் ஆகியோர் கண்டன உரையாற்ற நகர ஆணையரிடம் ஆவண செய்ய அறிவிக்கை கொடுத்தனர். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் நகர மக்களே நேரடி கரசேவையில் இறங்குவர் என எச்சரிக்கை செய்து, அடுத்து மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனுவையும் கொடுத்துப் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
மாடுகள் போற்றுதலுக்கு உரியவைதான் அவை மக்களோடு முரண்படாத வரை. வியாபாரிகள் வாழ்த்துக்குரிவர்கள்தான் அவர்கள் நடைபாதைகளை ஆக்கிரமிக்காத வரை.
மரம் வளர்த்தால் மழை பெறலாம் என்கிறது அரசாங்கம். காலையில் பெரும்படையாய் திரண்டு வரும் ஆடுகளையும், பகல் முழுதும் சுற்றித் திரியும் மாடுகளையும், வேர் வேட்டைக்கு அலையும் பன்றிகளையும் கட்டுப்படுத்தாமல் மரம் வளர்ப்பது வாலாஜாவைப் பொறுத்தவரையில் வெறும் கானல் நீர்தான்.
சாலையின் நடுவே ஒருவன் சண்டித்தனம் செய்தால், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்ததாக அவன் மீது "இந்திய தண்டனைச் சட்டம்", பிரிவு 289 ன் கீழ் வழக்குத் தொடுப்பது போல, மாடுகளைச் சாலைகளில் திரிய விடும் உரிமையாளர் மீதும் மேற்கண்ட பிரிவில் வழக்குத் தொடுக்க முடியும். தெரிந்தோ, கவனக் குறைவாகவோ மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், கொடுங்காயம் உண்டாக்குதல் ஆகிய குற்றங்களுக்காக உரிமையாளரை ஆறுமாதம் சிறை வைக்கவும், ரூ.1000 தண்டம் விதிக்கவும் சட்டம் வழிவகை செய்கிறது. மேலும் மாடுகளால் ஏற்படுத்தப்பட்ட காயம் மற்றும் சேதத்திற்கு உரிமையாளர் இழப்பீடும் வழங்க வேண்டும்.
உணவுக்காகத்தானே மாடுகளை வெளியே அவிழ்த்து விடுகின்றனர். அப்படியானால் அவர்கள் மாடுகளுக்குப் போதிய அளவு உணவு வழங்கவில்லை என்ற குற்றத்திற்காக "விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960", 11 (I) (j) (h) ஆகிய பிரிவுகளின் கீழ் உரிமையாளர் மீது வழக்குத் தொடுக்க முடியும்.
நெகிழி உள்ளிட்டக் கண்ட கழிவுகளைத் தின்று நோய்க்கு ஆட்படும் பசுக்கள் கொடுக்கும் பாலை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதால் அதன்மூலம் பிறருக்கு நோய் உண்டாவதற்கும் உரிமையாளர்கள் காரணமாக இருப்பதால் "கால்நடைகள் அத்துமீறல் (தமிழ்நாடு) திருத்தச் சட்டம் 1857" ன்படி, கால்நடைகளை கைப்பற்றுவதோடு, உரிமையாளர்களைக் கைது செய்யவும் சட்டம் வழிவகை செய்கிறது.
"நகரப்பகுதிகளில் விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்படுத்துதல் & ஒழுங்குபடுத்துதல்) தமிழ் நாடு சட்டம் 1997" ன் படி விலங்குகளை வெளியே விடக்கூடாது.
மாடுகள் உள்ளிட்ட விலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான சட்டங்கள் உள்ளன. பல்வேறு உயர் நீதிமன்றங்களும் மற்றும் உச்ச நீதிமன்றமும் மாடுகள் உள்ளிட்ட விலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஏராளமானத் தீர்ப்புகளை வழங்கி உள்ளன.
சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளைக் கட்டுப்படுத்த தவறும் அதிகாரிகள், பணியில் அலட்சியம் காட்டியதாகக் கூறி, விலங்குகளால் ஏற்பட்ட சேதாரம் மற்றும் காயங்களுக்கு அவர்களைப் பொறுப்பாக்கி இழப்பீடு கோரி அவர்கள் மீது உரிமையியல் வழக்குத் தொடுக்க முடியும்.
சாட்டைகள் எடுக்கப்படாத வரை சண்டித்தனங்களுக்கு முடிவேது?
பொன்.சேகர்
வழக்குரைஞர்