Monday, 9 January 2023

இது ஜார்கண்ட் மாநிலம் அல்ல, ஜகா வாங்க! இது காளைகளின் திமிலைப் பிடித்துத் திமிரை அடக்கும் மறவர் பூமி!

அரசியல் சட்டத்தை அவமதிக்கும் ஆளுநர், அலங்காநல்லூர் காளை போல, சீறிப்பார்க்கிறார்! இது ஜார்கண்ட் மாநிலம் அல்ல-ஜகா வாங்க! இது காளைகளின் திமிலைப் பிடித்து, திமிரை அடக்கும் மறவர் பூமி! தமிழ் நாடு!

"ஆட்டுக்குத் தாடி போல, நாட்டுக்கு 'கவர்னர்' தேவையா?" என அன்றே வினவினார் அண்ணா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, ஒரு நியமன ஆளுநர் அடக்கி ஆள நினைப்பது தமிழ் நாட்டில் எடுபடாது. 

பிற மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை, வியாபாரப் பொருளாக்கி, ஆட்சியைப் பிடித்து அதிகார போதையில் மிதப்பதைப் போல தமிழ் நாட்டில் செய்ய முடியாததால், ,கவர்னரை' வைத்து குழப்பம் ஏற்படுத்தக் கனவு காண்கிறது பாரதிய ஜனதாக் கட்சி.

தாய்ப்பாலுடன் தமிழ்ப் பாலையும் கலந்து ஊட்டி வளர்ந்த இனம் தமிழ் இனம். தமிழ் உணர்வும் தமிழ் நாட்டுப்பற்றும், எம் நெஞ்சில் கனன்று கொண்டிருக்கும் எரிமலை. 'கவர்னர்' சீண்டினால் குமுறும் எரிமலை, சீறி வெடிக்கும்! எச்சரிக்கை!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிதாமகன் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரையே உச்சரிக்க மறுத்தது, அவர் நெஞ்சில் "தீண்டாமைத் தீ" எரிவதையே காட்டுவது போல் உள்ளது.

'கவர்னர்' உரை முடிந்தவுடன் நாட்டுப்பண் இசைப்பது அவை மரபு. ஆனால், அதற்கு முன்னரே, அவையை விட்டு 'கவர்னர்' வெளியேறியது மன்னிக்க முடியாத குற்றம். அவர் மீது ஏன் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயக்கூடாது?

1986 ல் நான் வாலாஜா நகர மன்றத் தலைவராக இருந்த போது, அன்றைய அதிமுக அமைச்சர் மறைந்த ப.உ. சண்முகம் அவர்களுக்கு வரவேற்புக் கொடுத்தோம். கலைஞரை அவமதிக்கும் வகையில் அமைச்சர் அன்று பேசிய போது, அது அரசியல் மரபை மீறிய செயல் என உடனே எனது கண்டனத்தைப் பதிவு செய்தேன். ஆத்திரமடைந்த அமைச்சர், பாதியிலேயே வெளியேறிய போது, நாட்டுப் பண் இசைக்கச் சொன்னேன். உடனே, அமைச்சர் பாதையிலேயே நின்று விட்டார்.

அதுபோல, அவை  மாண்புகளை மீறி, 'கவர்னர்' பாதியிலேயே வெளியேறிய போது, மாண்புமிகு அவைத் தலைவர் அவர்கள், தேசிய பண் இசைக்கச் செய்திருந்தால் கவர்னரின் தேசப்பற்று வெளிச்சத்துக்கு வந்திருக்கும். அவருக்கு அது ஒரு பாடமாகவும் இருந்திருக்கும்.

வாலாஜா ஜெ.அசேன், B.A, B.L., Ex.MLA., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மாநில துணைத் தலைவர் 

No comments:

Post a Comment