Saturday, 18 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-4

IV

கல்லுளி மங்கன் மோடி

ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் பொய்யானவை, இட்டுக்கட்டப்பட்டவை, உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டவை என 413 பக்க அளவில் தனது மறுப்பு அறிக்கையை அதானி குழுமம் வெளியிட்ட போதிலும், அதானியின் சொத்து மதிப்பு கிடுகிடுவென சரிந்து ரூ.46 000 கோடி அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததால் உலகின் மூன்றாவது இடத்தில் இருந்த அதானி குழுமம் ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்ததோடு ஆயிரக்கணக்கான ஆவணங்கள் மற்றும் ஆறு நாடுகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பர்க் அறிக்கை மீது பலரும் மௌனம் காத்த போதும்,

“எத்தனை முறை நீங்கள் கௌதம் அதானியுடன் பயணத்திருக்கிறீர்?  எத்தனை முறை அவரை சந்தித்திருக்கிறீர்? ஹிண்டன்பர்க் அறிக்கை மீது ஏன் விசாரணை நடத்த உத்தரவிடவில்லை? விமான நிலையங்கள், சிமெண்ட், சூரியஒளி மின்ஆலைகள், காற்றாலைகள், பாதுகாப்பு, நுகர்பொருள், நிதி, தகவல் தொடர்பு, துறைமுகங்கள் உள்ளிட்ட எண்ணற்ற துறைகளில் அதானியால் எப்படி கோலோச்ச முடிகிறது? 2014 இல் ரூ.10 லட்சம் கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு மூன்றே ஆண்டுகளில் எப்படி ரூ.18 லட்சம் கோடியாக உயர்ந்தது?”

உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகளை 07.02.2023 அன்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் மோடியின் முகத்தைப் பார்த்து நேரடியாகவேக் கேட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி. வழக்கம் போலவே ஒரு நமட்டுச் சிரிப்புடன், தான் ஒரு கல்லுளி மங்கன்தான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார் திருவாளர் மோடி.

செவிடன் காதில் சங்கு ஊதுவதால் பயன் ஏதும் இல்லை என்பதை உணர்ந்ததாலோ என்னவோ,

"ஒரு தனிமனிதன் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவையே கடத்திச் சென்றிருக்கிறான், பூதாகரமாக ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்டுள்ள அதானியின் பங்குகள், ஒரு நீர்க்குமிழி போல விரைவிலேயே வெடித்துச் சிதறும் எனவும், ஆயுள் காப்பீடு நிறுவனம் மற்றும் இந்திய ஸ்டேட் வங்கிகள் முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்" எனவும் பாரத் ஜோடோ யாத்ராவில் அறிவித்துதிருக்கிறார் இராகுல் காந்தி. மாநிலங்களவையிலும் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் சார்பாக 10 முறை நோட்டீஸ் கொடுத்தும் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. 

நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஒன்றை அமைத்தோ அல்லது உச்சநீதி மன்றத்தின் மேற்பார்வையில் விசாரணைக்குழு ஒன்றை அமைத்தோ ஹிண்டன்பர்க் அறிக்கை மீதான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை உடனே அமைக்க வேண்டும் என 14.03.2023 அன்று காங்கிரஸ், திமுக, சமாஜ்சாதி, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட 16 எதிர்கட்சிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றன.

பங்குச் சந்தையைக் கண்காணிப்பதற்காகச் செயல்படும் செபி (SEBI) என்கிற அமைப்பு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக்கூறி, எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுக்கிறது மோடி அரசு. செபிக்குத் தெரியாமலேயா அல்லது வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்குத் (DRI) தெரியாமலேயா இத்தகைய ஊழல் நடந்திருக்க முடியும்?

தொடரும்.... 

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-3

No comments:

Post a Comment