II
நிகோலா
இலாபம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் பெருநிறுவனங்களாலும், பொறுப்பற்ற அரசுகளாலும், நீர்-நிலம்-காற்று என அனைத்தும் பாழாகி, மக்கள் வாழ முடியாத நிலைக்கு இப்புவிப் பரப்பு மாசடைந்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இனம்புரியாத பல்வேறு புதுப்புது நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுவதோடு, பலர் அன்றாடம் மாண்டும் வருகின்றனர்.
ஒருபுறம், புவி மாசடைவதைத் தடுக்கத் தமிழகத்தில் செயல்படும் பூவுலகின் நண்பர்களைப் போல உலகமெங்கும் எண்ணற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தோன்றிய வண்ணம் உள்ளனர். மற்றொருபுறம், நச்சுப்புகையை வெளியேற்றாத வாகனங்களைத் தாங்கள் வடிவமைத்துள்ளதாகவும், நச்சுப்புகையை வெளியிடாத இயற்கை எரிபொருளை கண்டுபிடித்து விட்டதாகவும் சிலர் கூறுவதை நாம் அவ்வப்பொழுது கேட்டுக் கொண்டுதான் வருகிறோம். இந்த வழியில் பிரபலமாகப் பேசப்பட்ட இராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் என்னவாயிற்று என்று இதுவரை தெரியவில்லை.
முன்பு ‘நிகோலா மோட்டார்ஸ்’ (Nikola Motors) என்று அறியப்பட்ட, ட்ரீவர் மில்டன் என்பவரைத் தலைவராகக் கொண்ட, அமெரிக்காவைச் சேர்ந்த நிகோலா (Nikola Corporation) என்கிற ஒரு நிறுவனம் நச்சுப்புகையைக் கக்காத (zero emission) ‘லித்தியம் பேட்டரி’ மற்றும் ‘ஹைட்ரஜன் செல்’லில் இயங்கும் வாகனத்தை வடிவமைத்துள்ளதாகக் கூறி, டிரக் வகையைச் சார்ந்த ஒரு மோட்டார் வாகனம் சாலையில் ஓடும் வீடியோவை 2020 ஆம் ஆண்டு மத்தியில் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அத்தகைய வாகனங்கள் எதுவும் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு வராத போதிலும், நிகோலா நிறுவனத்தின பங்குகள் உச்சத்தைத் தொட்டன. அதைத் தொடர்ந்து பிரபல ஜெனரல் மோட்டார் (GM) நிறுவனமும் நிகோலாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது.
நிகோலா நிறுவனம் வடிவமைத்ததாகச் சொல்லப்படும் டிரக், லித்தியம் மற்றும் ஹைட்ரஜன் செல்லில் ஓடவில்லை, மாறாக அது சாய்வான மலைப் பாதையில் தானாக ஓடுவதாகவும், ஒரு டஜன் பொய்களைச் சொல்லி நிகோலா நிறுவனம் மக்களை ஏமாற்றுவதாகவும் கூறி, 21.09.2020 அன்று ஹிண்டன்பர்க் தனது ஆய்வறிக்கையை வெளியிட்ட அடுத்த சில நாட்களில், நிகோலா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 30% அளவுக்கு மளமளவென சரிந்தது. இதைத் தொடர்ந்து ஜெனரல் மோட்டார்ஸ் (GM) நிறுவனமும் நிகோலாவுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்துவிட்டது.
க்ளோவர் ஹெல்த்
மருத்துவம் மற்றும் காப்பீடு தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வரும் மற்றொரு அமெரிக்க நிறுவனமான க்ளோவர் ஹெல்த் (Clover Health) என்ற நிறுவனம் முதலீட்டார்களை தவறாக வழிநடத்தி சொத்துக் குவித்து வருதாக அந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஹிண்டன்பர்க் தனது ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்ட பிறகு க்ளோவர் ஹெல்த் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 12.3% சரிவைக் கண்டது.
மேற்கண்ட இரு நிறுவனங்கள் மட்டுமன்றி, 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் சுமார் 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மோசடிகளை ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அம்பலப்படுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தாலும், இந்தியாவைப் பொருத்தவரை 2023, ஜனவரி 27 ஆம் தேதிவரை பலருக்கும் ஹிண்டன்பர்க் என்றால் என்னவென்றே தெரியாது.
அதானி
மோடி ஆட்சிக்கு வரும் வரை இந்தியாவைப் பொருத்தவரை டாடா-பிர்லா என்கிற இரு பெருமுதலாளிகளைத்தான் நாம் அறிவோம். 1857 ல் தொடங்கப்பட்ட பிர்லா நிறுவனம் சிமெண்ட், ஜவுளி மற்றும் இரசாயணம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும், 1868 ல் தொடங்கப்பட்ட டாடா நிறுவனம் ஜவுளி, இரும்பு, நீர் மின் நிலையங்கள், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றன.
அதன் பிறகு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கழித்து 1966 ல் தொடங்கப்பட்ட அம்பானி மற்றும் 1988 ல் தொடங்கப்பட்ட அதானி ஆகிய இரு நிறுவனங்களும் முதலில் பலருக்கும் பரிச்சயமில்லாத நிறுவனங்களாக இருந்து வந்தன. இவர்களைத்தவிர கோத்ரெஜ், பஜாஜ், மித்தல், ஜிண்டால் என பல்வேறு முதலாளிகளும் இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆனால், இன்று குறிப்பாக மோடி பிரதமராக வந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெட்ரோலியம், ஜவுளி, இரசாயணம், துறைமுகங்கள், மின்சாரம் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் அம்பானி மற்றும் அதானி ஆகிய இருவர் மட்டுமே கொடிகட்டிப் பறக்கின்றனர். அதிலும் குறிப்பாக அதானி கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் முதல் பணக்கார முதலாளியாகவும் உலகின் மூன்றாவது பெரிய பணக்கார முதலாளியாகவும் வளர்ந்து நிற்கிறார். இது எப்படிச் சாத்தியமானது?
நேற்றுவரை ஒரு சாதாரண அரசியல்வாதியாக இருந்த நம்ம ஊர் பிரமுகர் ஒருவர் திடீரென சில லட்சங்களைச் சேர்த்துவிட்டால் உடனே நாம் கொந்தளிக்கிறோம். அதுவும் அவர் மாற்றுக் கட்சிக்காரர் எனில் வறுத்தெடுத்து விடுகிறோம். இலஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டால் மட்டுமே ஒருவன் திடீர் பணக்காரனாக வளரமுடியும் என்பது நாம் அறிந்த பால பாடம்.
அரசியல்வாதிகள் மக்களோடு சேர்ந்து வாழ்வதாலும் பழகுவதாலும் அவர்கள் எப்படிச் சொத்து சேர்த்தார்கள் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பெரு முதலாளிகளுக்கும் மக்களுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லாததால், பெருமுதலாளிகள் எப்படிச் சொத்து சேர்த்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவதற்கான வாய்ப்பும் இல்லை அல்லது தெரிந்து கொள்வதற்கு நாம் முயற்சிப்பதும் இல்லை.
அதனால்தான், அதானி எப்படி உலகின் மூன்றாவது பணக்காரனாக வளர முடிந்தது என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவன் வந்து நமக்குப் புரிய வைக்க வேண்டி உள்ளது. இதற்காக நாம் வெட்கப்படத்தானே வேண்டும்.
No comments:
Post a Comment