Thursday, 5 December 2024

சாக்கடை நீரில் மிதக்கும் வாலாஜா மகளிர் கல்லூரி!

வட தமிழ்நாட்டை உலுக்கிய ஃபெஞ்சலைக் கண்டு ஓடி ஒளிந்திருந்த மூடுபனி, புயல் அகன்றதை எட்டிப்பார்த்து பூமித்தாயை சூழ்ந்து கொண்டது. மூடுபனி பார்ப்பதற்குச் சாதுவாய் தோன்றினாலும் அதுகூட பலரை முடக்கிவிடும். இது ஒரு ஊமகொட்டான். ஆனாலும் என்னை இதமாய் வருடிவிடும் காதலி இது. இன்று இவளைக் கைபிடிக்க கையில் கைபேசியோடு புறப்பட்டேன்.

வழக்கமான பாதைதான் என்றாலும் அவளை பரந்தவெளியில் கைபிடிக்க, திறந்தவெளி நோக்கிச் சென்றேன். செல்லும் வழியில் கழிவுநீர் வாய்க்கால் பராமரிப்பின்றி கிடப்பதால் அண்மையில் பெய்த மழை நீர் பெருக்கெடுத்து கணபதி நகர் டி.என்.எச்.பி சாலையில் புரண்டோடி சரலைகளால் சாலை வேயப்பட்டிருந்தது.

விசாலமான இடத்தில் மூடுபனியை கைக்குள் அடக்கி, அருகில் குளிருக்கு இதமாய் நீண்ட கவுன் அணிந்து ஒய்யாரமாய் நின்ற ஒற்றைப் பனையையும் அணைத்துக் கொண்டு, அக்கம் பக்கம் பார்த்த போது அருவெறுப்பே மிஞ்சியது.

எடக்குப்பம்-அனந்தலை செல்லும் கூட்டுச் சாலையின் முகப்பில் வலப்பக்கம் அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி. அங்கே அதன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து குப்பை கொட்டும் பாழிடமாய் மாறிவிட்டது. வாலாஜாவிலிருந்து ஓடிவரும் சாக்கடை நீரில் கல்லூரி வளாகம் மூழ்கிப் போனது.

அதற்கு எதிரில் ஈமக்கிரியை செய்யும் குளக்கரையின் இடப்பக்கம் ஏழை மகளிர் தங்கும் விடுதி, வலப்பக்கம் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, இரண்டுக்கும் இன்றும் மண்பாதைதான். இருண்டு விட்டால் கைபேசிதான் பாதை காட்டும்

அங்கு, முச்சந்தியில் கொட்டப்படும் நகரக் கழிவுகளின் நாற்றத்தில் நாள்தோறும் அவதியுறும் விடுதி வாசிகள். குளக்கரையில் காரியம் செய்பவர்களைக்கூட இந்த நாற்றம் தொடாமல் விடுவதில்லை. ஆனால் அது அவர்களுக்கு ஒரு நாள் கேடு. ஆனால் விடுதி வாசிகளுக்கோ அது ஒவ்வொரு நாளும் கேடு.

இதற்கு மேற்கே, சென்னை செல்லும் முதன்மைச் சாலையில் தீனபந்து ஆசிரமம். அதையொட்டி அதன் அருகே சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள் அருவருப்பின் உச்சம்.

சுற்றிலும் மாணவர்கள். பூஞ்சோலையாய் பராமரிக்கப்பட வேண்டிய இடம் இன்று பேய்கள் உலாவும் இருண்ட காடாய் உரைந்து கிடக்கும் எடக்குப்பம் கூட்டுச்சாலை. அதிகாரிகளின் கண்கள் திறக்குமா? இருண்ட காட்டில் வெளிச்சம் பாயுமா?

ஊரான்

தீனபந்து வளாகம்

எடக்குப்பம் கூட்டுச்சாலை கல்லூரி வளாகம்


எடக்குப்பம் கூட்டுச்சாலை கல்லூரி வளாகம்

No comments:

Post a Comment