பஞ்சாயத்தில் வடிவேல் ஜி!
பார்லிமென்ட்டில் மோடிஜி!
மணிப்பூரின்
மகரந்த பூமியில் 
கந்தகச் சாரல்..!
வீதியெங்கும்
வெடிச் சத்தம்..!
நங்கையரை 
நிர்வாணப்படுத்தி 
நகர்வலமாய்
அலையவைத்து..,
வல்லுறவில் சிதைத்து 
சீரழிக்கும் 
கும்பல்களின் 
கொடிய பேயாட்டம்..!
நாதியற்று போனதடா
மணிப்பூர் மாநிலம்..!
தாயக மண்ணில் 
அகதியாக..,
கொடுங்கோல் ஆட்சியில்
கடுங்காடுகளில்
மக்களின் வனவாசம்..!
ஆணாதிக்கத்தால்
அஞ்சும் வஞ்சியர்..,
மியான்மர் நாட்டில்
தஞ்சம் தேடும் 
அவலம்..!
அபயம் தரவேண்டிய 
ஆட்சியாளர்கள் 
உபயோகமற்றுப்
போனதால்..,
உச்சநீதிமன்றமே 
கலவரத்தை அடக்க 
மேற்கொண்ட
முயற்சிக்குப் பிறகும்..,
நாட்டை ஆளும் பிரதமர்
எதிர்வரும் 
சுதந்திர தின விழாவிற்கு 
தனக்கான 
ஆடை அலங்காரத்
தேர்வின் கனவில்
ஆழ்ந்து இருப்பதால்
எதிர்கட்சிகள்
நம்பிக்கையில்லாத் தீர்மான 
அம்புகள் தொடுத்தனர்..!
நீண்ட முயற்சிக்குப் பின்
நாடாளுமன்றத்தில் விவாதம்..!
வராதவர் வந்தார்..,
வாய்ச் சவடாலை
அவிழ்த்து விட்டார்..!
எதிர்க் கட்சிகள் எழுப்பிய 
எந்தக் கேள்விக்கும்
பதில் இல்லை..!
மாறாக...
மணிப்பூர் கலவரத்துக்கு
ஜவகர்லால் நேருவே
காரணம் என்றார்..!
உடைந்து 
உருக் குலைந்து இருந்த 
இந்தியாவை மீட்டு 
உருவம் கொடுத்து..,
அவர் கபாலத்தில் 
கசிந்த திட்டங்களால்தான்
இந்தியா இன்றளவும் 
இயங்கிக் கொண்டுள்ளதை
மறந்து..,
வாய்க் கொழுப்பால்
வக்கணை பேசினார்..!
குடும்ப அரசியல் என
குதியாட்டம் போட்டு 
விடுதலை வேள்வியில் 
வெங்கொடுமைச் சிறைச்சாலையில் 
வாடிய குடும்பத்தைப்
பரிகசித்தார்..!
மொத்தமாக
நையாண்டி மேளம் 
கொட்டினார்..!
துயரம் கவ்விய 
மணிப்பூரின் விடியலுக்கு 
விடை காணாமல்..,
"ஏம்ப்பா கையப் புடிச்சு
இழுத்தியா"?
எனும்...
வடிவேலு நகைச்சுவையின் 
பாணியில்
பாராளுமன்றத்தில் 
தன் நிலையை 
வெளிப்படுத்தினார்..!
பாவம்
எதிர்க் கட்சியினர்..,
கல்லுளி மங்கனை
எதிர்த்து 
வெளிநடப்பு செய்தனர்..!
மணிப்பூரின் துயரம் 
தொடர் கதைதானா..?
விடியாதோ..?!
வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

No comments:
Post a Comment