அமரகாவியம் அப்பாச்சி!
ஆங்கில ஏகாதிபத்தியத்தின் முன்
ஆமையென அடங்காமல்  
யானையெனப் பிளறிய  
மானமறவர் படையின்  
மக்கள் தலைவனே..! 
தாயக விடுதலைக்காக   
சிறைக் கருவறையில்  
ஒன்பதாண்டுகள் 
கடுந்தவம் புரிந்தாய்..!
விடுதலைக்குப் பின்  
வறுமையின் சீற்றம்  
வாட்டி வதைத்த போது., 
மக்களின் துயர வலியை -நின்
மனவலிமையால்  வீழ்த்தி
வித்தக முதல்வரானாய்..! 
அணைகள், ஆலைகள், 
தொழிற்சாலைகள், 
கல்விச் சாலைகள்,
கனிமச் சுரங்கங்கள்,  
உருக்காலைகளென 
அசுர வளர்ச்சி..! 
ஒன்பதாண்டுகள்
உன் ஆட்சியின் மாட்சி..!
அடுத்து,
ஒன்றிய அரசின்   
தலைவிதியை நிர்ணயிக்கும்
ஒப்பற்றத் தலைவனாக
உலா வந்தாய்..! 
எஞ்சிய ஆண்டுகளில்
பாரதம் 
ஏற்றம் காண
உழைப்பின் உச்சம் தொட்டு
தேய்பிறை ஆனாய்..!
மிஞ்சியது உன்னிடம்
மூன்று 
கதர் வேட்டிச் சட்டைகள்..!  
தலையணைக்கு கீழே
₹153.30 காசுகள்..!
ஆம்! 
வேதனையின் வியப்பு..!  
உனக்காகச் சொத்து
சேரக்கவில்லை!
உன்னையே 
தமிழினத்தின் சொத்தாக்கி 
தமிழர்தம் நெஞ்சில்  
அணையா அமரதீபமானாய்..!
வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA

No comments:
Post a Comment