Wednesday, 26 July 2023

துஞ்சியது போதும்! விஞ்சி எழு!

மணிப்பூர் மண் 
மயான பூமியாகத்
துடிக்கும் போது 
அரசியல் சாசன செயல்பாட்டில் 
மோடியின்
மௌன விரதம்..!

பாராளுமன்றத்தை
சந்திரமுகி - பட
பேய் மாளிகையாக
நினைத்து அஞ்சுகிறார்..!

கேள்வி கேட்பார்கள் 
இல்லையென்றால் 
கெட்டிமேளம் 
கொட்டுவது போல 
முழக்கமிடும் மோடி
பாராளுமன்றமென்றால்
பதுங்கி ஒதுங்குவது
ஏன்..?

பஞ்சசீலம் 
போதித்த பூமி - இன்று
பஞ்சமா பாதகர்களின்
கொலைக்களமாக 
மாறிவருகிறது.!


சேனாக்களெல்லாம்
பேனாக்களால்
புதையுண்டு போனதை 
உலக வரலாறு 
பதிவு செய்துள்ளது..!

குரங்குக் கூட்டம் 
மணிப்பூர் மலர்களை 
நிர்வாணமாக்கி 
வன்கொடுமை செய்து 
கொண்டுள்ளதை
நினைத்தால்...

கொலை வாளினை எடடா...
கொடியோர் செயல் அறவே...

எனும் பாவேந்தரின்
பாடலைப படித்து விட்டு 
பாய்விரித்துப்
படுப்பது தகுமோ
என்ற துடிப்பு
நெஞ்சைத் துவளச்
செய்கிறது..!

எனவே...
விடியலை
வென்றெடுப்போம் 
வா..!

ஆண்ட பரம்பரையடா
நாம் மீண்டும் 
ஆள நினைப்பதில் 
சுணக்கம் ஏனடா..!

துஞ்சியது போதும் 
விஞ்சி எழு..!
எஞ்சிய காலத்தை
நெஞ்சம் நிறைந்த 
தன்னிகரில்லாத்
தலைவன் 
ராகுல் காந்தியின் 
ஆட்சி மலர்ந்திட
உழைப்போம்..!
எழுக.! எழுக.!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Thursday, 13 July 2023

அமரகாவியம் அப்பாச்சி!

அமரகாவியம் அப்பாச்சி!


ஆங்கில ஏகாதிபத்தியத்தின் முன்
ஆமையென அடங்காமல்  
யானையெனப் பிளறிய  
மானமறவர் படையின்  
மக்கள் தலைவனே..! 

தாயக விடுதலைக்காக   
சிறைக் கருவறையில்  
ஒன்பதாண்டுகள் 
கடுந்தவம் புரிந்தாய்..!

விடுதலைக்குப் பின்  
வறுமையின் சீற்றம்  
வாட்டி வதைத்த போது., 
மக்களின் துயர வலியை -நின்
மனவலிமையால்  வீழ்த்தி
வித்தக முதல்வரானாய்..! 

அணைகள், ஆலைகள், 
தொழிற்சாலைகள், 
கல்விச் சாலைகள்,
கனிமச் சுரங்கங்கள்,  
உருக்காலைகளென 
அசுர வளர்ச்சி..! 
ஒன்பதாண்டுகள்
உன் ஆட்சியின் மாட்சி..!

அடுத்து,
ஒன்றிய அரசின்   
தலைவிதியை நிர்ணயிக்கும்
ஒப்பற்றத் தலைவனாக
உலா வந்தாய்..! 
எஞ்சிய ஆண்டுகளில்
பாரதம் 
ஏற்றம் காண
உழைப்பின் உச்சம்‌ தொட்டு
தேய்பிறை ஆனாய்..!

மிஞ்சியது உன்னிடம்
மூன்று 
கதர் வேட்டிச் சட்டைகள்..!  
தலையணைக்கு கீழே
₹153.30 காசுகள்..!
ஆம்! 
வேதனையின் வியப்பு..!  
உனக்காகச் சொத்து
சேரக்கவில்லை!
உன்னையே 
தமிழினத்தின் சொத்தாக்கி 
தமிழர்தம் நெஞ்சில்  
அணையா அமரதீபமானாய்..!

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA

Saturday, 8 July 2023

நீதியே! நீ இன்னும் இருக்கின்றாயா?



நீதியே...நீ இன்னும்
இருக்கின்றாயா...? - இல்லை,
நீயும்,
கோத்ரா கொலைக் களத்தில்
மாண்டு போனாயா...?

குற்றவாளிகளோ
கோபுரக்கலசங்களில்...
குரல் கொடுப்பவரோ
தண்டனை வாசலில்....
தருமத்தின் நெஞ்சில்
ஈட்டியைப் பாய்ச்சுவதோ...?
 
ஏவி விடப்பட்டு,
வேட்டைக்காக 
வட்டமிடும் 
வல்லூறுகளின்
பொய்வழக்குத் 
தாக்குதலை
எதிர்கொள்ள...
நீதியின் நிழலை 
நாடினால்- அங்கேயும்
அநீதியின் ஆர்ப்பரிப்பு...!
 
கோடானகோடி
நெஞ்சங்களில்
கொலு வீற்றிருக்கும்
கோமகன் ராகுலை
வஞ்சனையால்
வீழ்த்த முயல்வதோ?
 
ஏழிரண்டாண்டுகள்,
பாதுகைகள்
நெறிதவறாமல்
ஆண்டபூமியடா..!
பாதுகை மன்னனின்
பெயரை
உச்சாடனம் செய்து
தேர்தல் பரணி பாடி
பதவி பிடித்து
பேயாட்சியை
அரங்கேற்றுவதோ...!
 
2014-இல்
ஆரம்பமானது
குஜராத்துக்குள்ளே...
2024-ல்
ஆடி 
அடங்கப் போவது
டெல்லிக்குள்ளே.!
ஆராய்ந்து பார்
மனதுக்குள்ளே…!
ஆத்திரம் கொள்ளாதே
நெஞ்சுக்குள்ளே...!
 
வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA.,

Monday, 3 July 2023

மோடி அலையை சூறையாடிய ராகுல் சுனாமி!

சர்ச்சை செய்யவே 
நேர்ச்சை செய்துகொண்டு 
தமிழகம் வந்த கவர்னர்.

மக்கள் ஆட்சியின்
மாண்பிற்கு
கல்லறை
கட்ட நினைக்கும் 
கவர்னர். 
Govt. is of the people.., 
for the people.., 
by the people..! 
மக்களுடைய..,
மக்களுக்காக..
மக்களால்
நடத்தப்படுவது..!
மக்கள் ஆட்சிக்கு  
மகுடம் சூட்டிய 
வைர வரிகள்..!

ஆட்டுக்குத் தாடி
நாட்டுக்குக் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கவர்னர்
தேவையா என்ற
அறிஞர் அண்ணா எழுப்பிய கேள்வி 
மீண்டும் 
உயிர்ப்பிக்கப்படும் தேவை..!


அரசியல் அமைப்பை
பின்பற்ற வேண்டிய ஆளுநர்...
அமித்ஷா அமைப்பை
பின்பற்றுகின்ற அவலநிலை..!
கிண்டி ராஜ்பவனை
ஆர்.எஸ்.எஸ்ஸின்
விதைப் பண்ணையாக
மாற்றிவிட்டார்..!

திராவிடத் தென்றலை எதிர்த்து 
தீ ஜ்வாலையை கக்குகிறார்..!
சட்டமன்றத்தில் 
சண்டித்தனம் செய்து 
போகும் இடமெல்லாம்
புரியாத பொத்தல்களை
புதுமையெனப் புகழ்கின்றார்..!
தாய்ப்பாலில் 
கள்ளிப்பாலை
கசிய விடுகின்றார்..!

மொரிஷியஸ் to மோதானி
₹20 ஆயிரம் கோடி..
ஒன்றிய அரசின்
ஊழலின் உச்சத்தைப் பற்றி
ஓதிம மரம்போல் 
மௌனம் சாதிக்கும் ஆளுநர்..,
ஊழல் ஒழிப்பதாக 
அமைச்சர் பாலாஜியின்
உயிரோடு போராடுவது 
அவருடைய
புத்தி பேதலிப்பைக் காட்டுகிறது..!
நீக்குகிறார்...
நிறுத்துகிறார்...
கபடி ஆடுகிறார்..!

தமிழகம்...
தந்தை பெரியார்
பண்படுத்தி
பெருந் தலைவர் 
கல்விப் பயிர் வளர்த்து
பேரறிஞர்
சுயமரியாதை நீர்பாய்ச்சி 
கலைஞரின் பேனா உழுது
வார்த்தெடுத்த வீரத்தின்
விளைநிலம்..!
இங்கே
நாடோடிகளின்
நரித்தனத்திற்கு
இடமில்லை..!

ஏற்கனவே, 
மோடிஜியின் அலையை
ராகுல்ஜியின்
நடைப்பயண சுனாமி.., 
சூரையாடிவிட்டது..!

SO...
GO BACK GOVERNER..!
GO BACK GOVERNER RAVIJI..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA