Tuesday, 10 November 2020

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களுக்கு வாலாசாவில் பிறந்தநாள் விழா!

முத்தமிழ்க் காவலர் என்று பரவலாக அறியப்பட்ட திருச்சி கி..பெ விசுவநாதன் அவர்களின் பிறந்தநாள் விழா 11.11.2020 அன்று தமிழ் ஆர்வலர்கள் சார்பாக வாலாசாப்பேட்டையில் கொண்டாடப்பட்டது.

பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கி.ஆ.பெ அவர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா அசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வழக்குரைஞர் பொன்.சேகர் சிறப்புரையாற்றினார். ஜானகிராமன், மதன், பூக்கடை மணி, வழக்குரைஞர் அண்ணாதுரை,  சால்வை மோகன், உத்தமன், தினகரன், ராணி வெங்கடேசன், அசோக்குமார், ஜெகதீசன்,அருள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்று கி.ஆ.பெ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

வழக்குரைஞர் பொன்.சேகர் தனது உரையில்...,

"கி.ஆ.பெ அவர்கள் பள்ளிக்குச் சென்றதில்லை என்றாலும் தாமாக முன்வந்து தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்று இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். திராவிட நாடு கோரிக்கையில் உடன்பாடு இல்லை என்றாலும் பெரியாரோடு இணைந்து 1938 மற்றும் 1965  இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்று சிறையில் அடைக்கப்படடுள்ளார். நீதிக்கட்சி உறுப்பினராக இருந்த போது பார்ப்பனரல்லாதோர் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டுள்ளார். 

தமிழுக்காகப் பாடுபட்ட அதேவேளையில் கி.ஆ.பெ பெயரில் திருச்சியில் செயல்படும் மேல்நிலைப்பள்ளியும் மருத்துவமனையும் இன்றும் மக்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மருத்துவ சேவையில் பெரும் பங்காற்றி வருகின்றன.

இந்தித் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் இன்றைய சூழலில், தமிழ் மொழியைக் காக்க வேண்டுமானால் தமிழ் பேச்சு மற்றும் அலுவல் மொழியாக இருந்தால் மட்டும் போதாது, அது ஒரு தொழில் மொழியாக வளர்க்கப்பட வேண்டும்; எந்த மொழியில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றனவோ, எந்த மொழியில் தொழில் கல்வி வழங்கப்படுகின்றனவோ அந்த மொழியே வளர்ச்சி பெறும், நிலைத்து நிற்கும். இல்லையேல் ஒரு மொழியின் அழிவை யாராலும் தடுக்க முடியாது. எனவே தமிழ் மொழியை பாதுகாக்கவும் வளர்க்கவும் வேண்டுமானால் அனைத்துத் தொழிற்கல்வியும் தமிழிலேயே பயிற்றுவிக்கப்பட வேண்டும்; தமிழில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் ஆர்வலர்கள் குரல் கொடுக்க வேண்டும்." என தனது சிறப்புரையில் வழக்குரைஞர் பொன்.சேகர் வலியுறுத்திப் பேசினார்.




தகவல்

முத்தமிழ் சுவைச் சுற்றம்
வாலாசாப்பேட்டை

Monday, 9 November 2020

நவம்பர் 8: பணமதிப்பிழப்பு: மறக்க முடியுமா?

2016 நவம்பர் 8 அன்று இரவு 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து நான்கு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கருப்புப் பணம் ஒழியும் என்றார்கள். ஆனால் புதிய 2000 ரூபாய் நோட்டு வந்தபிறகு கட்டுக்கட்டாக பதுக்கினார்கள் பணக்காரர்கள். ஏழைகளோ அன்றாடத் தேவைக்காகப் பணம் எடுக்க 'ஏடிஎம்' வாசலில் வரிசைகட்டி நின்றார்கள்‌. சொந்தப் பணத்தைக் கூட எடுக்க முடியாமல் வாடி வதங்கிச் சுருண்டு விழுந்து வாசலிலேயே மாண்டு போனார்கள். 

வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் எல்லாம் இந்தியாவுக்கு வரும் என்றார்கள். நமது பிரதமர் நாடு நாடாய் சுற்றியதில் நமது வரிப்பணம்தான் காலியானதே தவிர அந்நிய நாட்டிலிருந்து ஒரு 'அணா'கூட இந்தியாவிற்குள் வரவில்லை.

ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை என்றார்கள். ஆனால் இருந்த வேலையையும் பறித்துக்கொண்டு அவர்கள் நமக்கு 'கோடி' போட்டதுதான் மிச்சம்.

ஆளுக்கு 15 லட்சம் 'அக்கவுண்டில்' போடுவேன் என்றார்கள். ஆனால் 'கார்ப்பரேட்' முதலாளிகளுக்கோ லட்ச லட்சமாய் தள்ளுபடி செய்தார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதம் ஒழியும் என்றார்கள். ஆனால் காவிகளே தீவிரவாதிகளாய் நாடெங்கும் பரவினார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் புதிய நோட்டுகளை அச்சடித்துக் காசை கரியாக்கியதைத் தவிர வேறெதையும் யாமறியோம் 'பராபரமே!'

மறக்க முடியுமா?
மறுக்க முடியுமா?

மதி இழந்த மோடியால்
கதி இழந்து அலைந்த 
மக்களை மறக்க முடியுமா?

நவம்பர் 8 இரவு 8 மணி
நடுநடுங்கிப் போனதே வங்கிகள்

பணப் புழக்கத்தின் மீது 
'சர்ஜிகல் ஸ்ட்ரைக்'

கந்தல் கூளமானதே 
பொருளாதாரம் 
மறக்க முடியுமா?

தாடி வளர்ச்சி 
மூளை வளர்ச்சி ஆகுமா?

முற்றும் முறிந்து போன 
பொருளாதாரம் மீண்டும்
துளிர் விடுமா?

வாய்மையைப் புறந்தள்ளி
பொய்மையைப் போற்றி
புகழ் தேடும் கபட வேடதாரிகளை
மறக்க முடியுமா?


வாலாஜா ஜெ.அசேன், B.A, B.L., Ex.MLA, வழக்குரைஞர் பொன்.சேகர், B.E, M.L, M.Phil.,

நீதிக்கான குரல்



Tuesday, 3 November 2020

ஊழல்: பஞ்சாயத்துச் செயலாளர்களின் இல்லங்களில் வெளிச்சம் பாய்கிறது!

அனந்தலை ஊராட்சி:

படம் 1: வாலாஜா-அம்மூர் சாலை, ஆனந்தலை ஊராட்சியில் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின்விளக்கு.


படம் 2: படம் 1 ல் காட்டப்பட்டுள்ள மின்விளக்கு அமைக்க ஆன செலவு ரூ 5.7 லட்சம்.

இது போல அனந்தலை ஊராட்சியில் மொத்தம் 6 சூரிய ஒளி மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த செலவு 34.20 லட்சம்.

வாலாஜா நகரம்:
படம் 3: வாலாஜா பதிவு அலுவலகம் எதிரில் உள்ள மின்சாரத்தால் இயங்கும் மின் விளக்குக் கோபுரம்

மரம் 4: படம் 3 ல் காட்டப்பட்டுள்ள மின்விளக்கு அமைக்க ஆன செலவு ரூ.2.75 லட்சம்.

வாலாஜா பதிவு அலுவலகம் எதிரில் 2011 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மின் விளக்கு மின்சாரத்தால் இயங்கக்கூடியது. அனந்தலை ஊராட்சியில் 2020 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மின்விளக்கு சூரிய ஒளியில் இயங்கக்கூடியது. இதன் உயரம் பதிவு அலுவலகம் எதிரில் உள்ள மின் கம்பத்துடன் ஒப்பிட்டால் பாதி உயரம் கூட கிடையாது. மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் பேனலுடன் கூடிய பேட்டரி அமைப்பு மட்டுமே சூரிய ஒளி மின் விளக்குகளில் கூடுதலாக இருக்கக் கூடியது. 

மேற்கண்ட விவரங்களைப் பரிசீலிக்கும் பொழுது "மூனு மொழம் பத்து ரூபாய்; ஒரு முழம் முப்பது ரூபா!" கதையா இருக்கு.  அனந்தலை ஊராட்சியில் சூரிய ஒளி மின் விளக்குகள் அமைக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாலாஜா மக்களின் கோரிக்கையாகும். 

வெட்டாத கிணற்றிலும் கட்டாதப் பாலத்திலும் காசு பார்க்கும் காலமிது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாததால் பஞ்சாயத்துச் செயலாளர்களே முடிசூடா சுல்தான்களாக வலம் வருகின்றனர். பல்வேறு உள்ளாட்சித் திட்டங்கள் இவர்கள் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

மின்விளக்கு போன்ற திட்டங்களால் அனந்தலை உள்ளிட்ட ஊர்களில் இருள் அகல்கிறதோ இல்லையோ பஞ்சாயத்துச் செயலாளர்களின் இல்லங்களில் வெளிச்சம் பாய்கிறது.

நீதிக்கான குரல்



Monday, 2 November 2020

பல்லு போனா சொல்லு போகும்!

பல் சிகிச்சைக் கட்டமைப்பை மேம்படுத்த வாலாஜா மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் கோரிக்கை! 

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இராணிப்பேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வாலாசாப்பேட்டை நகரத்தில் செயல்பட்டு வருகிறது. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இராணிப்பேட்டைக்கும் முக்கிய இடம் உண்டு.

இராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் செயல்படும் பல்வேறு நச்சு ஆலைகளால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நீர், நிலம், காற்று அனைத்தும் மாசு படுத்தப்பட்டு மக்கள் சொல்லொன்னாத் துயரங்களுக்கும் பல்வேறு நோய்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர். உலக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இராணிப்பேட்டையும் இடம் பெற்றுள்ளது என்பது ஒரு துயரமான செய்தி. 

இத்தகைய சூழலில் வாலாசாப்பேட்டையில் செயல்படும் மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது மிகமிக அவசியமானதாகும். ஆனால் கடந்த ஓராண்டு காலமாக இங்கு பல் மருத்துவர் ஒருவர்  நியமிக்கப்பட்டும் பல் மருத்துவம் செய்வதற்கான நாற்காலிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத சூழல் தொடர்கிறது. “நீதிக்கான குரல்” அமைப்பின் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில் அதன் நிர்வாகிகள் 02.11.2020 அன்று  காலை 10.30 மணி அளவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அவர்களைச் சந்தித்து பல் மருத்துவ சிகிச்சைக்கானக் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக செய்து தருமாறு கோரிக்கை முன்வைத்தபோது அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில்  செய்து முடிப்பதாகவும் மாவட்ட மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மருத்துவர் சிங்காரவேலு அவர்கள் உறுதியளித்துள்ளார். 

சமூக ஆர்வலர் வாலாஜா அலிம் அகமத் அவர்களின் முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு இருசக்கர நாற்காலிகள்   (wheel chair) மருத்துவமனை. பயன்பாட்டிற்காக ஜெ.அசேன் அவர்களால் அன்பளிப்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் சிங்காரவேலு அவர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது நீதிக்கான குரல் அமைப்பின் நிர்வாகிகள் வழக்குரைஞர் பொன்.சேகர், டி.ஜானகிராமன், மதன் மற்றும் சமூக ஆர்வலர்கள் சசிகுமார், முகமது அலி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.