Thursday, 5 December 2024

அதானியின் ஊழல் மேக வெடிப்பு!

அதானியின் ஊழல் மேக வெடிப்பு!

ஊழல் பெருங்கடலில் 
உலா வந்த 
அதானியின் தோணி..!
அதுவே மோடிஜீயின் பாணி..!
அமெரிக்க நீதியலைகள் கவிழ்த்ததே காணீர்..!

ஏற்கனவே,
பதினேழு விதேசி விருதுகள் வாங்கியவருகு..,
நேற்று,
கயானா, டொமினிக்கா, பார்படோஸ் நாடுகளின் 
உயரிய விருதுகள் 
வழங்கிய நேரத்தில்..,

சட்டத்தின் சன்னிதானத்தில்
அமெரிக்க நீதிமன்றமும்
குற்றப் பத்திரிக்கையை 
வாசித்துள்ளது..!


கடந்த காலத்தில்
அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க்
ஆய்வு நிறுவனம்
மொரீஷியசில் இல்லாத
நிறுவனத்திலிருந்து
இருபதாயிரம் கோடி ரூபாய்
அதானி குழுமத்திற்கு
வந்தது எப்படி என
குற்றம் சாட்டியது..!

இப்போது
அமெரிக்க நீதிமன்றத்தில்
குற்றப்பத்திரிக்கை
அறிவிப்பு..!
இது ஊழல்
மேக வெடிப்பு..!

இதுவரை
நமக்குத் தெரிந்தது...,
டெல்லிகேட்,
டோல்கேட்,
கோல்கேட்,
இப்போது அதானியின் "ப்ரைப்"கேட்..!
இது மோதானியின்
உச்சகட்ட சாதனை..!

கூடாநட்பு கேடாய்
முடியுமென
ஆரம்பத்திலேயே
சங்கு ஊதிய
சரித்திர நாயகன்
ராகுல்ஜீ...
இப்போது
வியாபாரி அதானியைக்
கைது செய்ய
எரிமலையாய் வெடிக்கிறார்..!

விசாரணை தீர்ப்பு வந்தால்தான் 
குற்றவாளியென
மோதானி பாய்ஸ் புலம்பல்..!

இந்த புத்தி
இந்தியாவின்
பொருளாதார மேதை
முன்னாள் உள்துறை அமைச்சர்
ஐயா ப.சிதம்பரம்  அவர்களை
106 நாட்கள்
விசாரணைக் கைதியாக
பழிவாங்கிய போது
எங்கே போனது..!

மதப்போர்வையால் மறைக்கப்பட்டுள்ள
மாயாஜால வித்தைகள் 
இனி
மக்கள் அரங்கில் எடுபடாது..!
தெய்வம் நின்று கொல்லும்..!!

வாலாஜா ஜெ.அசேன் Ex.MLA

சாக்கடை நீரில் மிதக்கும் வாலாஜா மகளிர் கல்லூரி!

வட தமிழ்நாட்டை உலுக்கிய ஃபெஞ்சலைக் கண்டு ஓடி ஒளிந்திருந்த மூடுபனி, புயல் அகன்றதை எட்டிப்பார்த்து பூமித்தாயை சூழ்ந்து கொண்டது. மூடுபனி பார்ப்பதற்குச் சாதுவாய் தோன்றினாலும் அதுகூட பலரை முடக்கிவிடும். இது ஒரு ஊமகொட்டான். ஆனாலும் என்னை இதமாய் வருடிவிடும் காதலி இது. இன்று இவளைக் கைபிடிக்க கையில் கைபேசியோடு புறப்பட்டேன்.

வழக்கமான பாதைதான் என்றாலும் அவளை பரந்தவெளியில் கைபிடிக்க, திறந்தவெளி நோக்கிச் சென்றேன். செல்லும் வழியில் கழிவுநீர் வாய்க்கால் பராமரிப்பின்றி கிடப்பதால் அண்மையில் பெய்த மழை நீர் பெருக்கெடுத்து கணபதி நகர் டி.என்.எச்.பி சாலையில் புரண்டோடி சரலைகளால் சாலை வேயப்பட்டிருந்தது.

விசாலமான இடத்தில் மூடுபனியை கைக்குள் அடக்கி, அருகில் குளிருக்கு இதமாய் நீண்ட கவுன் அணிந்து ஒய்யாரமாய் நின்ற ஒற்றைப் பனையையும் அணைத்துக் கொண்டு, அக்கம் பக்கம் பார்த்த போது அருவெறுப்பே மிஞ்சியது.

எடக்குப்பம்-அனந்தலை செல்லும் கூட்டுச் சாலையின் முகப்பில் வலப்பக்கம் அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி. அங்கே அதன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து குப்பை கொட்டும் பாழிடமாய் மாறிவிட்டது. வாலாஜாவிலிருந்து ஓடிவரும் சாக்கடை நீரில் கல்லூரி வளாகம் மூழ்கிப் போனது.

அதற்கு எதிரில் ஈமக்கிரியை செய்யும் குளக்கரையின் இடப்பக்கம் ஏழை மகளிர் தங்கும் விடுதி, வலப்பக்கம் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, இரண்டுக்கும் இன்றும் மண்பாதைதான். இருண்டு விட்டால் கைபேசிதான் பாதை காட்டும்

அங்கு, முச்சந்தியில் கொட்டப்படும் நகரக் கழிவுகளின் நாற்றத்தில் நாள்தோறும் அவதியுறும் விடுதி வாசிகள். குளக்கரையில் காரியம் செய்பவர்களைக்கூட இந்த நாற்றம் தொடாமல் விடுவதில்லை. ஆனால் அது அவர்களுக்கு ஒரு நாள் கேடு. ஆனால் விடுதி வாசிகளுக்கோ அது ஒவ்வொரு நாளும் கேடு.

இதற்கு மேற்கே, சென்னை செல்லும் முதன்மைச் சாலையில் தீனபந்து ஆசிரமம். அதையொட்டி அதன் அருகே சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள் அருவருப்பின் உச்சம்.

சுற்றிலும் மாணவர்கள். பூஞ்சோலையாய் பராமரிக்கப்பட வேண்டிய இடம் இன்று பேய்கள் உலாவும் இருண்ட காடாய் உரைந்து கிடக்கும் எடக்குப்பம் கூட்டுச்சாலை. அதிகாரிகளின் கண்கள் திறக்குமா? இருண்ட காட்டில் வெளிச்சம் பாயுமா?

ஊரான்

தீனபந்து வளாகம்

எடக்குப்பம் கூட்டுச்சாலை கல்லூரி வளாகம்


எடக்குப்பம் கூட்டுச்சாலை கல்லூரி வளாகம்

Sunday, 17 November 2024

மக்களாட்சியின் மாண்புக்கு மகுடம் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்..!

மக்களாட்சியின் மாண்புக்கு 
மகுடம்  சூட்டிய 
முதல்வர் ஸ்டாலின்..!

தொலைக்காட்சியில்..,
இதயத்தில் 
ஈரம் பாய்ச்சியக் காட்சி..!

அதிகார போதையால் 
ஆட்டம் போடும் 
அநேகத் தலைவர்கள் மத்தியில் நிறைகுடம் தளும்பாது என்பதை நினைவு படுத்தும் நிகழ்ச்சி..!

பழம்பெரும் மூத்தத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள்., 
தோழர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு விழாவுக்கு 
சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அழைக்க 
அவரது இருப்பிடம் போகிறார். 
வாயிலின் வெளியே வந்து வரவேற்று, 
கனிவாக உபசரித்து, 
பணிவாக மரியாதை தந்து, மீண்டும் வாயில் வரை வந்து 
காரில் வழியனுப்பி வைத்தக் காட்சி..,

"இந்தக் காலத்திலும் 
இப்படி ஒரு முதலமைச்சரா?" - என வியக்காத விழிகள் இல்லை..!

இளைஞரணியின் 
தொடக்கக் காலத்தில் - நான் அவரிடம் பழகும்போது 
கண்ட பணிவும், கனிவும் முதலமைச்சரான பிறகும் கரையவுமில்லை, மறையவுமில்லை..!

மகிழ்ச்சியால் 
மனம் நிறைந்த போதுதான் 
எனது மாவட்டத்தில் 
நிகழ்ந்த நிகழ்ச்சி 
நினைவுக்கு வருகிறது..!

இராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு வளாகம் 
ரூபாய் பதினைந்து கோடி மதிப்பில் கட்டுவதற்கான தொடக்கவிழா நடைபெற்றது..!

அவ்விழாவிற்கு 
கூட்டணியாக இருக்கும் 
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் அழைக்கப்படவில்லை..!
விழா ஒட்டுமொத்த மாவட்டத்துக்கானது... ஆனால் இராணிப்பேட்டை 
மாவட்ட அமைச்சரோ 
தன் தொகுதிக்கு மட்டுமான விழாவாக நடத்தியுள்ளார்..!

பலமுறை 
பல நிகழ்ச்சிகளில் 
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ.எம். முனிரத்தினம் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்..!


கடந்த செப்டம்பர் மாதம் 
சோளிங்கர் தொகுதியைச் சார்ந்த பனப்பாக்கத்தில்  
சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 
கார் தொழிற்சாலை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 
திருக்கரத்தால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அவ்விழாவில் 
தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினருக்கு 
மேடையில் அமரும் வாய்ப்புகூடத் தரப்படவில்லை..!

தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பாக 
மாண்புமிகு முதல்வரை வரவேற்க., 
வரவேற்பு பதாகைகள்  ஏற்பாடு செய்ததை கட்டுவதற்கூட அனுமதி வழங்கப்படவில்லை..!
ஆளுங்கட்சியின் சார்பாக மட்டும் பதாகைகள் கட்டப்பட்டன..!

மாண்புமிகு முதலமைச்சர் 
எல்லா மக்களுக்கும் பொதுவானவர்.
அவரை மக்களிடமிருந்து
மாவட்ட மந்திரி 
தோழமைக் கட்சியினரை புறக்கணிப்பது..,
தன்னை 
மன்னர் கிருஷ்ணதேவராயராக நினைத்து 
செயல்படுவதாகத் தெரிகிறது..!

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA

Thursday, 1 August 2024

கண்ணீர்க் கடலில் கடவுளின் தேசம்..!

கண்ணீர்க் கடலில் கடவுளின் தேசம்..!


இதயத் தடாகத்தில்
இன்ப அலை எழுப்பும்
தாய் மண்ணே வணக்கம்..,
தாய் மண்ணே வணக்கம்..!

ரகுமானின் இசையால்
உள்ளம்  நிறைந்த
தாய்மண்...
வயநாட்டில் சேய்களை
விழுங்கியதே..!

விடியலில் விழிப்போமென
கண்மூடியவர்களை
விடியும் முன்னே
மண்மூடியதே.!

கடவுளின் தேசத்தில்
மரணகீதம்...!
எழிலழகு இசைபாடும் பூமியில்
ஊழி வெள்ளத்தின்
ருத்ரதாண்டவம்..!

மேக வெடிப்போ...
வானக்கிழிப்போ...
வயநாடு...
காலநதியில் கரைந்து
விடைபெற்ற இடத்தின்
நினைவுச் சின்னமானதே..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Thursday, 21 March 2024

வசந்த விடியலை வரவேற்போம் வா...!

வசந்த விடியலை வரவேற்போம் வா...!


நாட்டைக் காக்க 
நெடும் பயணம்..!
பாரத தேசமெங்கும் - தன்
பாதச் சுவடுகளை பதியவிட்டு
பாசிச சக்தியின்
பிடறி முடியை 
பிடித்துப் பந்தாடி
மக்கள் உரிமையை 
மீட்டெடுக்கும்
இலட்சியப் போராளியின்
அதிரடி அறிவிப்பு..!
மோ(ச)டியின் காடியை
ஆட்டம் காண வைத்துள்ளது..!

பெண்ணினத்தின் பெருமையை
நாவால் நடனமிட்டு ஏமாற்றும்
மோடியின் தொண்டையை அடைக்கும் 
அபாய அறிவிப்பு..!
ஏழைப் பெண்களுக்கு
ஆண்டுக்கு ஒரு இலட்சம்..!
அரசு வேலையில் 50 சதவீதம்..!
அங்கன்வாடி, ஆஷா ஊழியர்கள் மற்றும் மதிய உணவு திட்டத்திற்கு
வழங்கும் நிதி இருமடங்கு உயர்வு..!
ஆட்சிக்கு வந்த ஆண்டே
இருபது இலட்சம்
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு..!

இவை அனைத்தும்..,
அடுத்து மலரப்போகும் 
மக்கள் ஆட்சியின் மகுடாதிபதி இராகுல்காந்தியின் அதிரடி
நடைப்பயண வெடிமுழக்கம்..!
நாட்டு மக்களின்
இரத்த நாளங்களில் 
இதயத்தாளங்களாய் 
ஒலிக்கத் துவங்கிவிட்டது..!

வெளிபப்டையான நிர்வாகமென 
வெளிச்சம் போட்டு 
மோடியின் ஆட்சிக்குத் துதிபாடிய பத்திரிக்கை தும்பிகளே..,
உச்சநீதிமன்ற துந்துபி முழக்கத்திற்கு பதில் என்ன?
இடிமுழக்கம் கேட்ட நாகம்போல்
அடங்கிப்போனது ஏன்..?

மோடியின் வித்தைகள்
வெளிச்சத்துக்கு வந்துவிட்டது..!
அரசின் அனைத்து அமைப்புகளையும் 
தனது பதவியைத் தக்கவைக்க பயன்படுத்தி வரும் மோடிக்கு கடைசி ஆயுதம் EVM எனும் மின்னணு வாக்கு எந்திரம்தான்..!
அதற்கும் உச்சநீதிமன்றம் வழிகாட்டும் என 
நாடு எதிர்பார்க்கின்றது..!
மோடி கும்பல்களின் முகமூடியை
நீதி தேவதைகள் கிழித்துக்கொண்டிருக்கின்றன..!
காரிருள் கரைந்து கீழ்வானம் சிவந்துவிட்டது..!

களம்காணத் துடிக்கும் காளைகளே...
களமாடுவோம் வாருங்கள்.!
தன்னம்பிக்கையின் தளநாயகன்
இராகுல்ஜீயின் தலைமையில்
வேற்றுமையின் வேரறுத்து,
ஒற்றுமை நாதம் ஓங்கி ஒலிக்க
சுதந்திர இந்தியாவின் புதிய பரிணாமத்தை பூவுலகிற்கு தருவோம்! புறப்படு...!
Do or die 
மகாத்மாவின் அன்றைய 
ஆத்ம ஒலிக்கு 
இன்று விடை காண
I.N.D.I.A கூட்டணியின் 
மறவர் கூட்டமே
தேர்தல் அழைக்கிறது...
ஒன்றுபட்டு தேர்தல் களம் காண்போம்  வா..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Saturday, 2 March 2024

ராமர் ஒரு கிராமர் (Grammar)!

ராமர் ஒரு கிராமர் (Grammar)
ஜெய் ஸ்ரீ ராம் பக்தி முழக்கமா? அரசியல் முழக்கமா?

ஆலயம் தொழுவது
சாலவும் நன்று..!
கோவில் இல்லா ஊரில்
குடியிருக்க வேண்டாமென்ற
முதுமொழிகளுக்கு ஏற்றம்
தந்த புனித பூமி..!

மதங்கள்
வாழ்க்கை சாகரத்தின்
வழிப்பயணத் துடுப்புகள்
என்பதை மறந்து
மதப் பேய் பிடித்து
ஆட்டம் போடுகின்றனர்..!

பல்வேறு பெயர்களில்
பல்வேறு பிரிவுகள்
என்றாலும்..,
ஒரே பரம்பொருளிடமிருந்து
உதித்தவைதான் மதங்கள்
என்பதையே சிவவாக்கியரும்
பின்வருமாறு பாடிவைத்தார்...

"தங்கம் ஒன்று ரூபம் வேறு
தன்மையானவாறு போல்
செங்கண்மாலும் ஈசனும்
சிறந்திருந்தது உம்முளே
விங்களங்கள் பேசுவீர்
விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற ராம
நாமம் இந்த நாமமே..."

மக்கள் நெஞ்சக் குழியில்
நாதமாக ஒலிக்கும்
ஆன்மீக இலக்கணமான ராமநாமத்தை
அரசியல் அரங்கில்
அரங்கேற்றம் செய்தனர்..!

கடந்த 
வங்க சட்டமன்றத் தேர்தலில்
பிஜேபி vs திரிணாமுல் காங்கிரஸ் 
என ஆரம்பித்து 
பிறகு
மோடி vs  மம்தா பானர்ஜி 
என மாற்றி 
இறுதியில்...
ஜெய் ஸ்ரீராம் vs ஜெய் காளி
என உரக்க முரசுகொட்டி
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இறுதி முடிவின் விளைவு 
ஜெய் காளியே வென்றது..!

இதிலிருந்து 
படிப்பினையைப் பெறாமல் மீண்டும் 
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில்
சாதனையைச் சொல்ல
சரக்கில்லாததால்
ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தை
ஒலிக்கச் செய்யும் முயற்சி...!

பக்தி மேவியதால் 
பல ஆலயங்கள் கட்டப்பட்டது வரலாறு..! 
ஆனால்...
பதவிப் பசியைத் தணித்துக்கொள்ள
மோடி அரசால் 
இராமர் ஆலயம்  கட்டப்பட்டது தகராறு..!

அன்னை கைகேயியின்
ஆணையை ஏற்று
தன் தம்பி பரதனே
நாடாளட்டும் என்று
"என் பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்றதன்றோ"
எனப் பகர்ந்து
பதவி துறந்து கானகம் புகுந்த
உன்னத புருஷனின்
பெயரைப் பயன்படுத்தி
பதவிப் பித்தலாட்டம்
நடத்துவது தருமம்தானா..?

தற்போதைய அரசியலில்
நேரு குடும்ப இளந்தளிரின்
நடைப்பயணம்
இந்திய அரசியலையே
புரட்டிப் போட்டுக்கொண்டு
இருக்கிறது..!

வருங்காலம் 
காங்கிரஸின் ✋யில்..!
மீண்டும் ஒரு முறை
ஜெய் ஸ்ரீராம் எனும் கோஷம்
மதிப்பிழக்க வேண்டுமா..?
சிந்திப்பாரா மோடிஜி..?

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA

புட்டிப்பால் அண்ணாமலையை நம்பி மனப்பால் குடிக்கும் மோடிஜி!

புட்டிப்பால் அண்ணாமலையை நம்பி மனப்பால் குடிக்கும் மோடிஜி..!

இது தமிழகம்..!
பகுத்தறிவின் பிறப்பிடம்..!
சுயமரியாதையின் விளைநிலம்..!
சுந்தரத் தமிழ் உணர்வின் எரிமலை..!

அரசு விழாக்களில் 
உங்களின்
அரசியல் ஆணவப் பேச்சான
'அழிப்பேன்...
ஒழிப்பேன்...
இல்லாமல் செய்வேன்...'
இவை அனைத்தும்
சர்வாதிகாரத்தின் சொல்லாடல்.
பாசிசத்தின் பக்க வாத்தியங்கள்..!

உங்களுக்கு முன்னே
பதினான்கு பிரதமர்கள்
பாரத நாட்டின் 
ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தார்கள்..!
பிரதமர் பதவிக்குப்
பெருமை சேர்த்தார்கள்..!
"வேற்றுமையில் ஒற்றுமை"
உயர்ந்து நிற்பதைக் கண்டு
உலகம் எழுந்து நின்று
கைத்தட்டிப் பாராட்டியது..!

இன்று,
உங்கள் ஆட்சியில்...
'ஓட்டு மெஷினும்..,
நோட்டு மெஷினும்'
உங்கள் கையில் என்பதால்
மக்கள் பிரதிநிதிகளை
சந்தைச் சரக்காக்கி
வேற்றுமைகளை விதைக்கின்றீர்..!
ஜனநாயகப் படுகொலை செய்யும்
உங்கள் பாதகச் செயல்களால்
உலக அரங்கில்
இந்தியாவிற்கேத் தலைகுனிவு..!

ஏற்கெனவே..,
'காங்கிரஸ் இல்லாத இந்தியா'
என்ற 
உங்கள் பாசிச முழக்கத்தை
சிங்க நடையால் 
மக்கள் இதய சிம்மாசனத்தில் கொலு வீற்றிருக்கும் 
ராகுல் காந்தியின் 
காலில் பட்டுதிர்ந்த தூசானது..!

தற்போது...
கம்பங்களைக் கண்டால்
காலைத் தூக்கிச் சிறுநீர் கழிக்கும்
ஜீவனைப்போல.,
மைக்கைக் கண்டால்
திமுகவை இழிவாகப் பேசிவருவது
புட்டிப்பால் அண்ணாமலைக்கு
வாடிக்கையாகி விட்டது..!
தமிழகம் வந்தால் 
மோடிஜியின் நாவும்
நாலாந்திர அரசியல்வாதியின்
நாக்குபோல நடனமாடுகிறது..!

2016 ஆம் ஆண்டு,
ஜெயலலிதாவின் ஆட்சிபற்றி..,
'தமிழகத்தில் "லஞ்ச லாவண்யம்"
தலைவிரித்தாடுகிறது..,
இந்த லஞ்சத்தினால் தமிழகமே 
முற்றிலும் பாதித்துப் போயிருக்கிறது'
என ஓசூரில் பேசினார்..!
அதை மறந்து,
தற்போது தமிழகம் வந்து
ஜெயலலிதாவின் ஆட்சி பற்றிப்
புகழாரம் சூட்டுகிறார்..!

தமிழ் நாட்டுத் தேர்தல் 
வாக்குப் பெட்டிகளில்
'நோட்டா'வால் தோற்கடிக்கப்பட்ட
நீங்கள்...
'திமுக இனி இருக்காது என்றும்..,
தமிழகத்திலிருந்து முற்றாக
அழிக்கப்படும் என்றும்...
இனி தேடினாலும் திமுகவைக்
காணமுடியாது' என்றும்
திமுகவிற்கு எதிராக 
தான் வகிக்கும் பிரதமர் பதவியின் தகுதிக்குக் களங்கமுண்டாகும்
வகையில் திருநெல்வேலியில்
தரம்தாழ்ந்து பேசி இருக்கிறார்..!

பிரதமர்களை உருவாக்கி
பெருமை 
பெற்ற அரசியல் சாணக்கியரும்.,
சுயநலமற்ற சொக்கத் தங்கம்.,
தனக்காக சொத்து சேர்க்காமல்
தன்னையே சொத்தாக தமிழகத்துக்குத்
தந்த அருந்தவப்புதல்வனான காமராஜர் வாழ்ந்த புண்ணிய பூமி தமிழகம்..!

தன் மண்டைச் சுரப்பால்
பகுத்தறிவு பயிர் வளர்த்த பகலவன்
பெரியாரின் விளைநிலமிது..!

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை
தமிழனின் சொத்தாக்கி
சுந்தரத்தமிழால் சொக்கவைத்து
சாமான்யனையும் அரசியல்வாதியாக்கிய
பேரறிஞர் அண்ணாவின் மண்ணிது..!

கடல்கோள்கொண்ட 
பூம்புகாரையே மீட்டு 
பூமிக்குத் தந்த வித்தகன்.,
மங்காப் புகழ்கொண்ட தமிழன்னைக்கு 
செம்மொழி மகுடம் சூட்டிய சிங்கத்தமிழ்
மறவனின் தாலாட்டில் வளர்த்தெடுத்த திமுகவை 
வீழ்த்த நினைப்பது...,
அது மோடிஜியின் பகல்கனவு..!

'கலைஞரைவிட ஸ்டாலின் ஆபத்தானவர்' என்று நீங்கள் சொன்னதையே உங்களுக்கு நினைவூட்டுகிறேன்..!

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA

Thursday, 22 February 2024

காவிக் கோட்டையில் ஓட்டை போட்ட காவியத் தலைவன்!

காவிக் கோட்டையில் ஓட்டை போட்ட காவியத் தலைவன்!

பஞ்சபூதங்களால்
பாராட்டி தாலாட்டப்படும்
பாரத பூமியில்
பஞ்சமா பாதகங்களின் 
அரங்கேற்றம்..!

பக்தி பகல்வேஷம் போடும்
மோ(ச)டிஜியின் ஆட்சியில்
ஆன்லைன் சூதாட்டம்..!
ஆன்லைன் விபச்சாரம்,.!
பாலியல் வன்கொடுமை..!
அதானி துறைமுகத்தில்
கஞ்சா இறக்குமதி..!
பூனே, டெல்லியில் புதுவகை
மியாவ் மியாவ் 
(தடை செய்யப்பட்ட மெபெட்ரோன்)
போதை வஸ்து விநியோகம்..!

வங்கி மோசடிப் பேர்வழிகள் 
வெளிநாடு தப்பியோட்டம்..!
விண்ணை முட்டும்
விலைவாசி ஏற்றம்..!
ஜிஎஸ்டி எனும் பெயரில்
ஏழைகளின் இரத்தத்தை
உறிஞ்சும் வரிப்புலி..!

இத்தனை தவிப்புகளுக்கும்
மகுடம் சூட்டுவதுபோல்.., 
சண்டிகர் மாநகராட்சி தேர்தலில்
நடந்த ஜனநாயகப் படுகொலை வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம்
மோடிஜி ஆட்சியின்
முகமூடியை கிழித்திருக்கிறது..!

மோடிஜி இதுவரை வென்றதாகக் கூறப்படும் எல்லா தேர்தல் முடிவுகளிலும்
இதைப் போன்ற பல்வேறு
தில்லாலங்கடி வேலைகளால்தான்
பதவியை தக்கவைத்துக்
கொண்டிருக்கிறார் என்பது
வெளிப்படையாகி உள்ளது..!
பேசுவது மக்களாட்சி
நடத்துவது பாசிச ஆட்சி..!

அடுத்தவர்கள் மீது
அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும்
மோடி ஆட்சிமீது
தேர்தல் பத்திர ஊழலை
உச்சநீதிமன்ற அமர்வு
வெளிச்சத்துக்குக்
கொண்டுவந்துள்ளது..!

மோடிஜியின் கடந்த
பத்தாண்டுகால ஆட்சியில்
குண்டூசியைக்கூட
திருடவில்லையென்று
அரசியல் குறைபிரசவக்
குழந்தை கூவிக்கூவி
கூக்குரலிட்டது..!
மோடி ஆட்சியில்
ஈ.டி (அமலாக்கத்துறை)
பணம் கறக்கும்
காமதேனுவாகிவிட்டதை
நீதிமன்றத் தீர்ப்பு
நிரூபித்து உள்ளது..!

ஒற்றுமை நீதிக்காக 
என் தலைவன் நடத்தும் 
நெடும் பயணத்துக்கு
உச்ச நீதிமன்றத்தின்
இரண்டு தீர்ப்புகள் குடைபிடித்து இருக்கின்றன..!

வேற்றுமையில் ஒற்றுமை
ஒளிக் காணத் துடிக்கும்
மங்காப் புகழ் குலத்தின்
மாணிக்கச்சுடர் விளக்கு
இளம் தலைவர்
ராகுல்ஜீயின் நடைப்பயணத்திற்கு
கிடைத்த மாபெரும் வெற்றி..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA




அரண்மனை நாயே.., அடக்கடா வாயை..!

அரண்மனை நாயே..,
அடக்கடா வாயை..!

புலியைப் பார்த்து
பூனையும் சூடு
போட்டுக்கொண்ட கதையாக..,

தேசிய அளவில்
இராகுல் காந்தியின்
நடை பயணத்தைக் கண்டு...
தமிழகத்திலும் ஒரு
நடை பயணம் நடந்தது..!

நடையா அது நடையா
நாடகமன்றோ நடந்தது...

வெண்ணெய் வெட்டி அண்ணாமலைக்கு
வெளிச்சம் போட்ட
ஊடகங்கள்..!

பறையடித்து பாசுரம் பாடிய
பத்திரிகைகள்..!
அப்பப்பா...
என்ன ஆர்ப்பாட்டமான கொக்கரிப்பு..!
வாரத்திற்கு ஒரு ஊழல் பட்டியல் வெளியீடு..!
நடைப்பயண முடிவுக்குள் பல
அமைச்சர்கள் சிறைச்சாலையில் இருப்பார்கள் என்று...
ஊர் ஊராக ஊழல் என்ற
கற்பனைக் கதைகளை கட்டவிழ்த்த
ஊதாரிக் கூட்ட அறிவிப்பு...!

பத்திரிகைகளோ...
தமிழக அரசின் மீது
அண்ணாமலை ஊழல் அணுகுண்டுகளை வீசுவதாக
பரபரப்பாக துதி பாடின..!

கூட்டிய கூட்டத்தை 
மக்கள் வெள்ளமென
கள்ளக் கணக்கு காட்டின..!

மாநில அரசு மீது பொய்யான
குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கற்பனைக் குதிரைகளை கட்டவிழ்த்து விட்டார்கள்..!

கடந்த அதிமுக ஆட்சியில்
இரண்டு அமைச்சர்கள் மீது
அமலாக்கத்துறையால்
தொடுக்கப்பட்ட வழக்குகள்
நீதிமன்ற தீர்ப்புக்கு உள்ளானது தவிர...
வேறெதுவும் அண்ணாமலை 
கிழிக்கவில்லை..!

உண்மையில் ஊழல் மண்டிக்கிடப்பது மத்திய ஆட்சியில்தான்..!

வெளிநாட்டு புலனாய்வுக்குழு
ஹிண்டன்பெர்க்கின்
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை
அண்ணாமலையின்
குருமகா சன்னிதானத்தின் மீது
சுமத்தியது..!

பிரான்ஸ் நாட்டுடன் நடந்த
ரஃபேல் விமானம் வாங்கிய
வியாபார பரிவர்த்தனையில்
ஊழல் நடைபெற்றதாக
பிரான்சு அரசு மீதும்,
இந்திய அரசு மீதும்
பிரான்சு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது..!

மொரிஷியஸ் நாட்டிலிருந்து
அதானி குடும்பத்துக்கு
மாற்றப்பட்ட ரூபாய் இருபதாயிரம் கோடியை
யார் பணமென்று விசாரிக்கப்படாமல்
வேதாளம் முருங்கை மரத்தின் மீது
தொங்குவது போல
தொங்கிக்கொண்டிருக்கிறது..!

இந்த லட்சணத்தில்...
கடந்த 10 ஆண்டு ஆட்சியில்
ஒரு குண்டூசியை திருடிவிட்டார்
என்ற குற்றச்சாட்டைக் கூட
மோடி ஆட்சியின் மீது வைக்க முடியாது...
என அண்ணாமலை பொய்வாய் மலர்ந்திருக்கிறார்...!

குண்டூசி தொழிற்சாலைகளே
அவர் கோட் பாக்கெட்டில் குடியிருக்கும்போது...
ஒற்றைக் குண்டூசியை
திருடவேண்டிய
அவசியமென்ன இருக்கிறது..!

வெளிப்படையான ஆட்சி நடத்துவதாக
வெளிச்சம்போட்ட மோடிக்கு உச்சநீதிமன்றம்
மோடியின் தேர்தல் பத்திர திட்டத்தை
இரத்து செய்து நேற்றைய தீர்ப்பில்
சவுக்கடி கொடுத்திருக்கிறது..!

மக்களின் கண்களில்
மண்ணைத் தூவிவிட்டு
கட்சி நிதி எனும் பெயரில்
பெருமுதலாளிகளிடமிருந்து
சுருட்டப்பட்ட தொகையின் பட்டியலில்
முதலிடத்தில் மோடிஜி கட்சி என்பதற்கு
மேற்கண்ட படமே சாட்சி..!
உடம்பெல்லாம் பொய்யாக
உளறிக் கொண்டிருப்பது உமக்கு வாடிக்கையாகிவிட்டது..!

உம் உளறல்களில்
ஒன்றே ஒன்றுதான் நடந்தது..,

கூவாகம் கூத்தாண்டவர்
கோவில் திருவிழாவில்..,
மாலையில் தாலிகட்டி
காலையில் தாலியறுத்துக்கொள்ளும்
அரவாணிகளைப்போல...
அண்ணா திமுகவின் உறவை
அறுத்துக்கொண்டதுதான்..!

உம் கற்பனைக் கதறல்களை
படிக்கும்போது
என் மனதில் நினைவில் நிழலாடுவது
கலைஞரின் பேனாவிலிருந்து
வெடித்துக்கிளம்பிய வரிகள்..,

அரண்மனை நாயே..,
அடக்கடா வாயை..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

இன்னா செய்தாரை ஒறுத்தல்...

இன்னா செய்தாரை ஒறுத்தல்...

தமிழகத்தின் தவச்சீலன்
முப்பாலை முன்மொழிந்து
கடல்களுக்கு அப்பாலும் 
நீதி போதனைகளை 
ஏற்க முரசமிட்ட குறளாசானின்...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்

என்ற கருத்துக்கு 
செயல் வடிவம் கொடுத்த பாலைவன அரபுபூமி...

"நீங்கள் புனித பள்ளிவாசல்களை
இடித்துத் தகர்த்தாலும்
இஸ்லாமிய மண்ணில்
சுவாமி நாராயணனுக்கு
கோவில் எழுப்பி இருக்கிறோம்,
உங்கள் திருக்கரத்தால்
திறந்து வைக்க வாருங்கள்"

என்று...
இந்தியப் பிரதமர்
மோடி ஜியை அழைத்து
சிறப்பு செய்த
அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக்
முகமது பின் அல் சையத் நஹ்யான்
அவர்களுக்கு...

முப்பாலை உலகுக்கு ஊட்டிய வள்ளுவனின் வழிவந்த இந்நாள்
கொள்ளு கொள்ளு கொள்ளுப் பேரன்
வாலாஜா அசேனின் ஆதாப் சலாம்..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

பாஸ்டிலியின் வரலாற்றை உணர மறந்தது ஏனோ..?

பாஸ்டிலியின் வரலாற்றை உணர மறந்தது ஏனோ..?

ஜனநாயகத்தின் தொட்டிலென 
ஜெகம் புகழ்ந்த இந்தியாவில் ஜனநாயகப் படுகொலையின் அரங்கேற்றம்..!

மத நல்லிணக்கத்தின்
மகுடமென பார்போற்றிய
பாரத பூமியில் 
வெறுப்பு
விதைகளின் விளைச்சல்..!

அவனிக்கு 
அகிம்சையை அளித்த 
காந்திய மண்ணில்
தடி பிடித்தவன் முடிவெடுக்கும்
பாசிச வெறியாட்டம்..!

மக்களாட்சியின் மாட்சி
மோடியின் 
மாயவலையில்
காயப்பட்டு 
கல்லறை
நோக்கிப் பயணம்..!

செக்கென்றும் 
சிவமென்றும் பாராமல் 
நக்கும் நாயைப் போல
அரசியல் சட்டத்தை
அடக்குமுறையால் 
அவமதிக்கும் அமலாக்கத்துறை..!

எதிர்க் கட்சிகளை அழிக்க..,
ஒரே நாடு...
ஒரே மொழி...
ஒரே தேர்தல்...
என உலுத்துப்போன
மன்கீ பாத்தின்
அகங்கார ஊளையோசை..!
விளைவு..,

மோடியின் 
அமலாக்கத் துறையால்
தொடுக்கப்பட்ட 
மொத்த வழக்குகள் 121..!
அதில் 
எதிர்க்கட்சித் தலைவர்களை
சிறையில் அடைத்து
தொடுக்கப்பட்ட வழக்குகள் 115..!
எதிர்க்கட்சிகள் மீது மட்டும் 
95% வழக்குகள் என்பது
அப்பட்டமான 
சர்வாதிகாரத்தின் சாயலல்லவா..!
 
நிர்வாகத்தில் 
ஆர்எஸ்எஸ் அதிகாரிகளின் ஆக்கிரமிப்பால்
பஞ்சாப் சண்டிகர்
மாநகராட்சித் தேர்தலில்
வாக்கு எண்ணிக்கையின் போது
8 வாக்குச் சீட்டுகளில்
தேர்தல் அதிகாரியே
பேனாவில் எழுதி
செல்லாத வாக்குகளாக்கி 
மோசடியாக...
பாஜக வெற்றி பெற்றதாக
அறிவித்ததை எதிர்த்து
உச்ச நீதிமன்றத்தில்
நடந்த வழக்கில்..,

நீதியரசரின் இதழ்கள் வெடித்த
சரித்திர வரிகள்...
"வாக்குச்சீட்டுகளை சிதைத்த தேர்தல் அதிகாரியை விசாரிக்க வேண்டும்.., இதை நான் ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் செயலாகவே பார்க்கின்றேனென்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் போய் சொல்லுங்கள்"
எனக் காட்டமாகக் கண்டித்தது  அதிகாரியையே என்றாலும்
அது 
மோடியின் மீது
வீசப்பட்ட சாட்டை என்பதை
உணர்வுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்..!

வரலாற்றில் 
சர்வாதிகாரம்
வாழ்ந்ததாக சரித்திரமில்லை..!
மன்னரும் மத குருமார்களும்
மக்களையடக்கி 
மரண வாசலாம்..,
பாஸ்டிலி கொடுஞ் சிறையிலடைத்து.,
சித்திரவதை செய்து
கில்லெட் எந்திரத்தால் கொன்று
குவித்ததைக் கண்டித்து.,
மக்கள் புரட்சி ஜூலை 14/1789 அன்று
எரிமலையென ஃப்ரென்ச்சில் வெடித்து.,
பாஸ்டிலி சிறைக்கூடம் தகர்க்கப்பட்டு
மன்னர் லூயியின் தலை
அதே எந்திரத்தால்
துண்டிக்கப்பட்ட நாளையே
ஃப்ரெஞ்சு மக்கள்
ஆண்டுதோறும் பாஸ்டிலி டே
எனக் கொண்டாடுகின்றனர்..!

கடந்த ஆண்டு
(ஜூலை 14 2023 அன்று)
ஃப்ரெஞ்சு அதிபர்
இம்மானுவேல் மெக்ரானின் அழைப்பை ஏற்று.,
பாஸ்டிலி டே விழாவில்
பங்கேற்று சங்கநாதம் எழுப்பி திரும்பிய பிறகும்.,
மோடி ஆட்சியின் சர்வாதிகார அடக்குமுறை தொடர்வது விந்தையிலும் விந்தை...!

வாலாஜா ஜெ. அசேன் Ex MLA

அரசியல் சப்பாணி அண்ணாமலையின் ஆவேச சாக்கடைப் பேச்சு!

அரசியல் சப்பாணி அண்ணாமலையின் ஆவேச சாக்கடைப் பேச்சு!

பதவிப் பித்தம் ஏறிப்போனதால் வார்த்தை வாந்தி 
எடுத்துக் கொண்டிருக்கிறாய்..!

வடிகட்டிய யோக்கியன் போல எதிர்க்கட்சித் தலைவர்களை  அசிங்கப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது...!

பாஜகவில் உள்ள 
தலைவர்கள் எல்லாம் 
புடம் போட்டத் தங்கம் போலவும் எதிர்க்கட்சியில் 
இருப்பவர்கள் எல்லாம் 
ஏமாந்த சோணகிரி போலவும் விமர்சனம் செய்து வருகிறாய்..!

இராணிப்பேட்டைக்கு வந்து 
எங்கள் 
மாவட்ட அமைச்சரையே அரசியலுக்குத் தகுதி 
இல்லை என்று சொல்வதற்கு உனக்கு என்னத் தகுதி இருக்கிறது..?

கள்ளச்சாராய.... குண்டாஸ் என்று கூவிக்கூவி குரல் கொடுக்கிறாய்..!

நீ பாஜகவிற்கு அறிவித்த நிர்வாகிகள் எத்தனை பேர் கள்ளச்சாராய... குண்டாஸ் என்று ஊரும் உலகமும் அறியும்..!

கர்நாடகத்தின் 
காவல்துறையில் பணிபுரிந்து 
கல்லா கட்டிக்கொண்டிருந்து.,  பதவியைக் கை கழுவி விட்டு அரசியல் அதிகார மோகத்தால் ஆளுங்கட்சியில் சேர்ந்து கொண்டு..,
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில்  பொறுப்பாளராக செயல்பட்டு 
உன் தவளை வாயால் 
கண்டபடி கூச்சலிட்டு  
பாஜகவை தோற்கடித்துவிட்டு., தமிழகத்தில் 
உனது பித்தலாட்டப் பேயாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறாய்..!

பாராளுமன்ற  உறுப்பினர் ஜெகத்ரட்சகன் அவர்களை விமர்சனம் செய்வதற்கு 
உன் கட்சியின் 
மூத்தத் தலைவர்களுக்கேத் தகுதி இல்லாத போது 
உனக்கு எப்படி 
அந்தத் தகுதி வந்தது..?

நகரி திண்டிவனம் 
புதிய ரயில் தடம் அமைக்க பணியைத் துவக்கி 
ஏறக்குறைய 
ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன..,
வேலை பாதியிலேயே நிற்கிறது..!

இதைப் பற்றி 
பாராளுமன்றத்தில் 
ஜெகத்ரட்சகன் 
பலமுறை கேள்வி எழுப்பியும் 
அந்தத் திட்டத்திற்கான தொகை ஒதுக்கப்படவில்லை..!

உண்மையிலேயே 
பொது மக்களின் மீது 
அக்கறை கொண்டு 
உனது நடைபயணத்தைத் 
துவக்கி இருந்தால்..,
தடைப்பட்டுப் போன 
இப்படிப்பட்டத் திட்டங்களை நேரடியாகப் பார்வையிட்டு அதைப்பற்றி 
உன் தலைவனுக்கு 
எடுத்துக் காட்டுவதற்காக இப்பயணத்தை மேற்கொண்டிருந்தால் 
மக்கள் உன்னை 
பாராட்டி இருப்பார்கள்..!

மதுரையில் 
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக அடிக்கல் நாட்டி 
ஒன்பது ஆண்டுகள் ஆகி உள்ளது..!

அது கூட உனது பார்வையில் படவில்லை..!

காரணம்...
உனது நடைப்பயணம் 
ஊர் சுற்றும் உல்லாச நடை பயணம்..!

மக்களை ஏமாற்றுவதற்காக 
நீ ஏதோ உத்தமன் போல சொக்கத்தங்கம் போல அடுத்தவரைக் குற்றம் சாட்டி பதவிபிடிக்க நடக்கிறாய்..!

நீ முட்டி போட்டு நடந்தாலும்  பதவியை எட்டிப் பிடிக்க முடியாது..!

மக்கள் 
பைத்தியத்தை 
வேடிக்கை பார்ப்பதற்குக்கூட கூட்டம் கூடுவது உண்டு..!

இங்கே 
உனக்குக் கூடும்  கூட்டம் 
எந்த வகையைச் சார்ந்ததோ..?

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA

தேசப்பிதாவே வழிநடத்து

தேசப்பிதாவே வழிநடத்து...
தேசப்பிதாவே
உன் உதிரத்தால்
விடிந்த தேசத்தின்
ஜனநாயகம்
பாசிச வல்லூறுகளின்
வேட்டைக்காடானதே..!

பரம்பொருளை வணங்கும்
பாலமான பக்தி
பதவிக் கட்டில் ஏற
படிக்கட்டாகிப் போனதே..!

நீதிமன்றங்களின் தீர்ப்பு
நிர்வாணமாக்கப்பட்ட
நிலையில் துடிக்கிறதே..!

மலிந்துபோன மதவாத...
ஊழல் விலங்கொடிக்க
இரண்டாம் விடுதலை வேள்வியில்
உன் வழியில் களமாடும்
இளைய தலைமுறையின்
காவியத் தலைவன்
ராகுல்ஜீயின் வெற்றிக்கு
வலிமை கூட்டி
வாழ்த்தி வழிநடத்துவாயாக..!

வாலாஜா ஜெ அசேன் Ex MLA

ஆதவன் முன் அகல் விளக்கின் நாட்டியமா.?

ஆதவன் முன் அகல் விளக்கின் நாட்டியமா.?

விடுதலைக்காக நடந்த
வீரம் செறிந்த வரலாற்றை
கசடறக் கற்காமல்
வாய்ச்சவடால் காட்டுவது
ஆளுநருக்கும் 
அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல..!

அரசு பதவியை
அனுபவித்துக்கொண்டு மக்களாட்சியுடன் மல்லு கட்டுவது பாசிசத்தின் பகல் கனவு..!

தேசப்பிதா காந்தியும்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் காங்கிரஸ் பெருங்கடலின்
நன்முத்துக்கள் 
என்பதை
கூவத்தின் தவளை அறியாது..!

உலக மக்கள் 
அகிம்சை ஆயுதத்தின்
வலிமையை 
உணர்ந்த காரணத்தால்
பூமிப்பந்தின் 
பல நாடுகளில்
நிறுவப்பட்டுள்ள
தலைவர்களின் சிலைகளில்
மகாத்மாவின் சிலைகள்தான்
அதிகம் என்பது பதிவாகி உள்ளது..!

வெள்ளையனே வெளியேறு
வேள்வியை அடக்க
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கருத்துக் கேட்கப்பட்டது..!

எதற்கும் 
யாருக்கும் அஞ்சாத
வின்சென்ட் சர்ச்சில்
எழுந்து...

"காந்தி 
துப்பாக்கியுடன் போரிட்டால் 
நான் 
பீரங்கியால் நசுக்கி இருப்பேன்..!அவர் 
பீரங்கிக் கொண்டு போரிட்டால் நான் 
விமானம் கொண்டு அழித்திருப்பேன். 
ஆனால்., 
ஆயுதத்தை கையில் எடுக்காமல் அகிம்சை, உண்மை என்று போராடுகிறார். 
இவற்றை 
மழுங்க வைக்கும் ஆயுதங்கள் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அவரிடம் 
பணிந்து போக வேண்டி உள்ளது"

என்று பகிரங்கமாக
ஒத்துக் கொண்டது
வரலாற்றில் பதிவாகியுள்ளது..!

சர்ச்சில் 
மற்றொருமுறை
நேதாஜி போர் வீரர்களின்
சாகசப் போர்
தந்திரத்தைப் பார்த்து, 

"தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது"

என்று குறிப்பிட்டதற்கு

"தமிழர்கள்தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இரத்தத்தை குடிப்பார்கள்"

என சாட்டையடி பதில் கொடுத்தார் நேதாஜி..!

நேதாஜி, 
பர்மாவைத் தளமாகக் கொண்டு
படை திரட்டிக் கொண்டிருந்தபோது
ரங்கூன் 
*யார்க்* சாலையில் உள்ள,
விடுதலைப் போரில்
நாடு கடத்தப்பட்டு
இறந்து போன முகலாயப் பேரரசர் பகதூர்ஷாவின்
சமாதியில் இருந்து
ஒரு பிடி மண்ணை எடுத்து
தமக்கு மக்கள் அன்புடன்
அளித்தத் தங்கவாளின்
கைப்பிடியில் அடைத்து 
அந்த வாளினை
ஓங்கிப் பிடித்தவராக..,

"நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும் அந்த மகானிடம்  இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில்  இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன் ஒரு நாள் லண்டன் வாசற்படியைத்ன தட்டும்"

என்று கர்ஜித்த
தியாக வரலாற்றை
யாகம் நடத்தி 
வெள்ளையனுக்கு 
வால் பிடித்தவர்களின் 
வாரிசுகள்
அறிந்திருக்க வாய்ப்பில்லை.

 நேதாஜி

"நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டும்"

என்று போற்றிய தமிழ் மண்ணில் சுபாஷ் சந்திர போசை தத்தெடுக்கும் 
ஆளுநரின் முயற்சி பலிக்காது..!

தமிழகம்
வீரம் விளையாடும் பூமி.,
கர்ஜனைகள் ஒலிக்கும் காடு.,
மொழி காக்க 
மூச்சை முடித்துக் கொண்ட
தியாக மறவர் கூட்டத்தின் 
பாடி வீடு..!

நரிகளின் ஊளை நாடகம் அரங்கேறாது..!

அடக்கப்படும்..!
மூட்டையைக் கட்டு..!
நடையைக்கட்டு..!

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA


காளைகளை அடக்க ஜல்லிக்கட்டு! மதவெறி அடக்க மல்லுக்கட்டு!

காளைகளை அடக்க ஜல்லிக்கட்டு..!
மதவெறி அரசியல் ஆதிக்கத்தை அடக்க மல்லுக்கட்டு..!
அடங்காமல் ஆர்ப்பரிக்கும்
காளைகளின் 
திமிலைப் பிடித்து 
திமிரை அடக்கும்
ஜல்லிக்கட்டு விழா
முடிந்து விட்டது..!

அடங்காத 
ஆதிக்க வெறிபிடித்த 
ஆட்சியரின் 
பிடரி பிடித்து அடக்க 
மல்லுக்கட்டு விழா (2024)
தொடங்க உள்ளது..!

அடுத்தக் குடியரசு நாளை
கொண்டாட முடியுமா..?
ஜனநாயகம்...,
மக்களாட்சி..,
மங்கி மரணித்து விடுமோ..?
துயரக் கேள்வி 
இதயத்தைத் துளைக்கிறது..!

ஜனநாயக மலர்க் காட்டை..,
மதவெறி வேட்டைக் காடாக்க 
கங்காணிகளின் கையில்
ஆட்சி அதிகாரம்..!

அரசியல் அமைப்புகளை ஏவி அடக்குமுறை ஆட்டம்..!
சட்டங்கள் 
நூலறுந்த பட்டங்களாக  பரிதவிக்கின்றன..!

மாதங்கள் பல கடந்தும் 
இந்தியாவின் அங்கம்
மணிப்பூரில் 
துப்பாக்கித் தோட்டாக்களின் 
ரத்த தாகம் தணியவில்லை..!

மோடி ஜி யோ...
ஒரே நாடு
ஒரே மொழி
ஒரே சட்டம்...
என ஒய்யார பாட்டிசைத்து 
ஓய்வெடுக்க லட்சத்தீவில்..!

ஒற்றுமைக் கொடிபிடித்து 
நீதிக்கான நெடும் பயணத்தில் 
மக்கள் தலைவன் ராகுல்ஜி..! 

6713 கிலோமீட்டர்..
100 பாராளுமன்றத் தொகுதிகள்..
15 மாநிலங்கள்..
மக்களின் இதயங்கள்..
சங்கமம் ஆகும் காட்சி...
ஊர்வலத்தின் மாட்சி..!
சிங்க நடையால் 
தடம் போட்டுவிட்டார்..!
நாம் 
அதில் வடம்
பிடிக்க வேண்டாமா..!

புரட்சிக் குயிலே...
பூபாளம் இசைத்துப்  
புறப்படு..!!

மூடுபனியின் 
நீடு துயில் நீக்கி
களம் காண்போம் வா...!

மீண்டும் ஒரு சுதந்திரப் போர் அழைக்கிறது..!

ஜனநாயகத்தைக் காக்க
தாயகத்தை மீட்போம் வா..!

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA

உகாண்டாவிற்கு இடி அமீன்! இந்தியாவுக்கு E.D அமி(ன்)த் ஷா!

உகாண்டா நாட்டிற்கு
இடி அமீன்!
இந்திய நாட்டிற்கு
E.D அமி(ன்)த்ஷா!

இந்தியத் திருநாட்டை
உலக அரங்கில் 
உயர்த்திக் காட்டிய
ஒளிவிளக்கு..!
தன் வாழ்வின்
வசந்த காலத்தை
வெங்கொடுமை சாக்காட்டில் 
ஒன்பதாண்டுகள்
சிறைப்பறவையாகப் போராடி
வெள்ளைக் கொக்குகளை
விரட்டிய ராஜாளிப் பறவை..!

வெள்ளையர்களால் 
சுரண்டப்பட்டு 
வறுமையின் எல்லையில் 
வீழ்ந்து கிடந்த தேசத்தை
தன் அறிவு ஆற்றலால் 
எழுச்சியுறச் செய்த
பிதாமகன்..!

வரலாறாய் வாழும் 
நேரு பெருமகனாரின்
புகழ் ஒளியை
மங்க வைக்க
காஷ்மீர் பிரச்சினை கொண்டு 
தனி மனிதத் தாக்குதல் 
தொடுத்துள்ளார் 
E.D அமி(ன்)த்ஷா..!

பணக்காரர்களின் 
வாராக் கடன்
₹ இருபத்தைந்து லட்சம் 
கோடிகளைத் தள்ளுபடி செய்து
ஏழைகளின் கையிருப்பை
அழிக்க 
பணமதிப்பிழப்பை
(Surgical strike)
தன்னிச்சையாக அறிவித்த
மோடியல்ல.., நேருபிரான்..!

தன் வாழ்நாள் முழுவதும் 
தேசத்திற்காக அர்ப்பணித்த
தியாகத் தலைவரின் மீது
குற்றம் சுமத்துவது என்பது
சமீபத்தில் ஒரு நாளிதழில் 
கண்ட பொன்மொழி நினைவூட்டுகிறது...

'தன் குற்றம் மறப்பதும்
பிறர் குற்றம் காண்பதும்
முட்டாள்தனத்தின்
விசேஷ குணம்'

வாலாஜா ஜெ.அசேன் Ex. MLA

தடம் மாறியதால் தப்புத்தாளங்கள்!

தடம் மாறியதால்
தப்புத் தாளங்கள்!
அக்கா... அக்கா..
கவர்னர் அக்கா..நீர்
சொக்காய் மாற்றிக் கொண்டதால்
பக்கா தமிழச்சி என்பதனை
மறந்தனை போலும்!

இயற்கையை வெல்ல..
செயற்கையால் முடியுமா?

தண்ணீர் வடியவில்லை
எனக் கண்ணீர் விட்டீர்..
கடல்,
புயல் சீற்றத்தால் 
பொங்கும் பொழுது 
வெளிநீரை உள்வாங்காது..

நீக்குப் போக்குத் தெரியாமல்
நினைவிழந்து பேசுவதோ?அதிகாரம் 
அறிவை
மழுங்கச் செய்கிறதோ?

கூவத்தைப் பற்றி
கூவுகிறீர்..
கங்கையைச் சுத்தப்படுத்தும்
சவடால் என்ன ஆனது?
சுத்தமாக மறந்தனையோ?

ஆறுகள் இணைப்போம்
ஆர்ப்பாட்ட அறிவிப்பு
அடங்கிப் போனதேன்?

அடுப்பு ஊத 
நீர் போவதில்லை
அதனால் உமக்கு
சிலிண்டர் கவனம் வருவதில்லை!

அரசு வாகன பவனியால்
உமக்குப் பெட்ரோல்
விலை உயர்வு தெரியாது?

எத்தனை சொன்னாலும்
உமக்குச் சித்தம் தெளியாது!
காரணம்... நீர்
பித்தன் தலையின்
பிறை நிலவு!
பிதற்றுவது.. 
சேர்ந்த இடம் தந்த 
சீதனச் சொத்து...!

வாலாஜா J.அசேன் Ex.MLA., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்