Thursday, 21 March 2024

வசந்த விடியலை வரவேற்போம் வா...!

வசந்த விடியலை வரவேற்போம் வா...!


நாட்டைக் காக்க 
நெடும் பயணம்..!
பாரத தேசமெங்கும் - தன்
பாதச் சுவடுகளை பதியவிட்டு
பாசிச சக்தியின்
பிடறி முடியை 
பிடித்துப் பந்தாடி
மக்கள் உரிமையை 
மீட்டெடுக்கும்
இலட்சியப் போராளியின்
அதிரடி அறிவிப்பு..!
மோ(ச)டியின் காடியை
ஆட்டம் காண வைத்துள்ளது..!

பெண்ணினத்தின் பெருமையை
நாவால் நடனமிட்டு ஏமாற்றும்
மோடியின் தொண்டையை அடைக்கும் 
அபாய அறிவிப்பு..!
ஏழைப் பெண்களுக்கு
ஆண்டுக்கு ஒரு இலட்சம்..!
அரசு வேலையில் 50 சதவீதம்..!
அங்கன்வாடி, ஆஷா ஊழியர்கள் மற்றும் மதிய உணவு திட்டத்திற்கு
வழங்கும் நிதி இருமடங்கு உயர்வு..!
ஆட்சிக்கு வந்த ஆண்டே
இருபது இலட்சம்
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு..!

இவை அனைத்தும்..,
அடுத்து மலரப்போகும் 
மக்கள் ஆட்சியின் மகுடாதிபதி இராகுல்காந்தியின் அதிரடி
நடைப்பயண வெடிமுழக்கம்..!
நாட்டு மக்களின்
இரத்த நாளங்களில் 
இதயத்தாளங்களாய் 
ஒலிக்கத் துவங்கிவிட்டது..!

வெளிபப்டையான நிர்வாகமென 
வெளிச்சம் போட்டு 
மோடியின் ஆட்சிக்குத் துதிபாடிய பத்திரிக்கை தும்பிகளே..,
உச்சநீதிமன்ற துந்துபி முழக்கத்திற்கு பதில் என்ன?
இடிமுழக்கம் கேட்ட நாகம்போல்
அடங்கிப்போனது ஏன்..?

மோடியின் வித்தைகள்
வெளிச்சத்துக்கு வந்துவிட்டது..!
அரசின் அனைத்து அமைப்புகளையும் 
தனது பதவியைத் தக்கவைக்க பயன்படுத்தி வரும் மோடிக்கு கடைசி ஆயுதம் EVM எனும் மின்னணு வாக்கு எந்திரம்தான்..!
அதற்கும் உச்சநீதிமன்றம் வழிகாட்டும் என 
நாடு எதிர்பார்க்கின்றது..!
மோடி கும்பல்களின் முகமூடியை
நீதி தேவதைகள் கிழித்துக்கொண்டிருக்கின்றன..!
காரிருள் கரைந்து கீழ்வானம் சிவந்துவிட்டது..!

களம்காணத் துடிக்கும் காளைகளே...
களமாடுவோம் வாருங்கள்.!
தன்னம்பிக்கையின் தளநாயகன்
இராகுல்ஜீயின் தலைமையில்
வேற்றுமையின் வேரறுத்து,
ஒற்றுமை நாதம் ஓங்கி ஒலிக்க
சுதந்திர இந்தியாவின் புதிய பரிணாமத்தை பூவுலகிற்கு தருவோம்! புறப்படு...!
Do or die 
மகாத்மாவின் அன்றைய 
ஆத்ம ஒலிக்கு 
இன்று விடை காண
I.N.D.I.A கூட்டணியின் 
மறவர் கூட்டமே
தேர்தல் அழைக்கிறது...
ஒன்றுபட்டு தேர்தல் களம் காண்போம்  வா..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Saturday, 2 March 2024

ராமர் ஒரு கிராமர் (Grammar)!

ராமர் ஒரு கிராமர் (Grammar)
ஜெய் ஸ்ரீ ராம் பக்தி முழக்கமா? அரசியல் முழக்கமா?

ஆலயம் தொழுவது
சாலவும் நன்று..!
கோவில் இல்லா ஊரில்
குடியிருக்க வேண்டாமென்ற
முதுமொழிகளுக்கு ஏற்றம்
தந்த புனித பூமி..!

மதங்கள்
வாழ்க்கை சாகரத்தின்
வழிப்பயணத் துடுப்புகள்
என்பதை மறந்து
மதப் பேய் பிடித்து
ஆட்டம் போடுகின்றனர்..!

பல்வேறு பெயர்களில்
பல்வேறு பிரிவுகள்
என்றாலும்..,
ஒரே பரம்பொருளிடமிருந்து
உதித்தவைதான் மதங்கள்
என்பதையே சிவவாக்கியரும்
பின்வருமாறு பாடிவைத்தார்...

"தங்கம் ஒன்று ரூபம் வேறு
தன்மையானவாறு போல்
செங்கண்மாலும் ஈசனும்
சிறந்திருந்தது உம்முளே
விங்களங்கள் பேசுவீர்
விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற ராம
நாமம் இந்த நாமமே..."

மக்கள் நெஞ்சக் குழியில்
நாதமாக ஒலிக்கும்
ஆன்மீக இலக்கணமான ராமநாமத்தை
அரசியல் அரங்கில்
அரங்கேற்றம் செய்தனர்..!

கடந்த 
வங்க சட்டமன்றத் தேர்தலில்
பிஜேபி vs திரிணாமுல் காங்கிரஸ் 
என ஆரம்பித்து 
பிறகு
மோடி vs  மம்தா பானர்ஜி 
என மாற்றி 
இறுதியில்...
ஜெய் ஸ்ரீராம் vs ஜெய் காளி
என உரக்க முரசுகொட்டி
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இறுதி முடிவின் விளைவு 
ஜெய் காளியே வென்றது..!

இதிலிருந்து 
படிப்பினையைப் பெறாமல் மீண்டும் 
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில்
சாதனையைச் சொல்ல
சரக்கில்லாததால்
ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தை
ஒலிக்கச் செய்யும் முயற்சி...!

பக்தி மேவியதால் 
பல ஆலயங்கள் கட்டப்பட்டது வரலாறு..! 
ஆனால்...
பதவிப் பசியைத் தணித்துக்கொள்ள
மோடி அரசால் 
இராமர் ஆலயம்  கட்டப்பட்டது தகராறு..!

அன்னை கைகேயியின்
ஆணையை ஏற்று
தன் தம்பி பரதனே
நாடாளட்டும் என்று
"என் பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்றதன்றோ"
எனப் பகர்ந்து
பதவி துறந்து கானகம் புகுந்த
உன்னத புருஷனின்
பெயரைப் பயன்படுத்தி
பதவிப் பித்தலாட்டம்
நடத்துவது தருமம்தானா..?

தற்போதைய அரசியலில்
நேரு குடும்ப இளந்தளிரின்
நடைப்பயணம்
இந்திய அரசியலையே
புரட்டிப் போட்டுக்கொண்டு
இருக்கிறது..!

வருங்காலம் 
காங்கிரஸின் ✋யில்..!
மீண்டும் ஒரு முறை
ஜெய் ஸ்ரீராம் எனும் கோஷம்
மதிப்பிழக்க வேண்டுமா..?
சிந்திப்பாரா மோடிஜி..?

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA

புட்டிப்பால் அண்ணாமலையை நம்பி மனப்பால் குடிக்கும் மோடிஜி!

புட்டிப்பால் அண்ணாமலையை நம்பி மனப்பால் குடிக்கும் மோடிஜி..!

இது தமிழகம்..!
பகுத்தறிவின் பிறப்பிடம்..!
சுயமரியாதையின் விளைநிலம்..!
சுந்தரத் தமிழ் உணர்வின் எரிமலை..!

அரசு விழாக்களில் 
உங்களின்
அரசியல் ஆணவப் பேச்சான
'அழிப்பேன்...
ஒழிப்பேன்...
இல்லாமல் செய்வேன்...'
இவை அனைத்தும்
சர்வாதிகாரத்தின் சொல்லாடல்.
பாசிசத்தின் பக்க வாத்தியங்கள்..!

உங்களுக்கு முன்னே
பதினான்கு பிரதமர்கள்
பாரத நாட்டின் 
ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தார்கள்..!
பிரதமர் பதவிக்குப்
பெருமை சேர்த்தார்கள்..!
"வேற்றுமையில் ஒற்றுமை"
உயர்ந்து நிற்பதைக் கண்டு
உலகம் எழுந்து நின்று
கைத்தட்டிப் பாராட்டியது..!

இன்று,
உங்கள் ஆட்சியில்...
'ஓட்டு மெஷினும்..,
நோட்டு மெஷினும்'
உங்கள் கையில் என்பதால்
மக்கள் பிரதிநிதிகளை
சந்தைச் சரக்காக்கி
வேற்றுமைகளை விதைக்கின்றீர்..!
ஜனநாயகப் படுகொலை செய்யும்
உங்கள் பாதகச் செயல்களால்
உலக அரங்கில்
இந்தியாவிற்கேத் தலைகுனிவு..!

ஏற்கெனவே..,
'காங்கிரஸ் இல்லாத இந்தியா'
என்ற 
உங்கள் பாசிச முழக்கத்தை
சிங்க நடையால் 
மக்கள் இதய சிம்மாசனத்தில் கொலு வீற்றிருக்கும் 
ராகுல் காந்தியின் 
காலில் பட்டுதிர்ந்த தூசானது..!

தற்போது...
கம்பங்களைக் கண்டால்
காலைத் தூக்கிச் சிறுநீர் கழிக்கும்
ஜீவனைப்போல.,
மைக்கைக் கண்டால்
திமுகவை இழிவாகப் பேசிவருவது
புட்டிப்பால் அண்ணாமலைக்கு
வாடிக்கையாகி விட்டது..!
தமிழகம் வந்தால் 
மோடிஜியின் நாவும்
நாலாந்திர அரசியல்வாதியின்
நாக்குபோல நடனமாடுகிறது..!

2016 ஆம் ஆண்டு,
ஜெயலலிதாவின் ஆட்சிபற்றி..,
'தமிழகத்தில் "லஞ்ச லாவண்யம்"
தலைவிரித்தாடுகிறது..,
இந்த லஞ்சத்தினால் தமிழகமே 
முற்றிலும் பாதித்துப் போயிருக்கிறது'
என ஓசூரில் பேசினார்..!
அதை மறந்து,
தற்போது தமிழகம் வந்து
ஜெயலலிதாவின் ஆட்சி பற்றிப்
புகழாரம் சூட்டுகிறார்..!

தமிழ் நாட்டுத் தேர்தல் 
வாக்குப் பெட்டிகளில்
'நோட்டா'வால் தோற்கடிக்கப்பட்ட
நீங்கள்...
'திமுக இனி இருக்காது என்றும்..,
தமிழகத்திலிருந்து முற்றாக
அழிக்கப்படும் என்றும்...
இனி தேடினாலும் திமுகவைக்
காணமுடியாது' என்றும்
திமுகவிற்கு எதிராக 
தான் வகிக்கும் பிரதமர் பதவியின் தகுதிக்குக் களங்கமுண்டாகும்
வகையில் திருநெல்வேலியில்
தரம்தாழ்ந்து பேசி இருக்கிறார்..!

பிரதமர்களை உருவாக்கி
பெருமை 
பெற்ற அரசியல் சாணக்கியரும்.,
சுயநலமற்ற சொக்கத் தங்கம்.,
தனக்காக சொத்து சேர்க்காமல்
தன்னையே சொத்தாக தமிழகத்துக்குத்
தந்த அருந்தவப்புதல்வனான காமராஜர் வாழ்ந்த புண்ணிய பூமி தமிழகம்..!

தன் மண்டைச் சுரப்பால்
பகுத்தறிவு பயிர் வளர்த்த பகலவன்
பெரியாரின் விளைநிலமிது..!

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை
தமிழனின் சொத்தாக்கி
சுந்தரத்தமிழால் சொக்கவைத்து
சாமான்யனையும் அரசியல்வாதியாக்கிய
பேரறிஞர் அண்ணாவின் மண்ணிது..!

கடல்கோள்கொண்ட 
பூம்புகாரையே மீட்டு 
பூமிக்குத் தந்த வித்தகன்.,
மங்காப் புகழ்கொண்ட தமிழன்னைக்கு 
செம்மொழி மகுடம் சூட்டிய சிங்கத்தமிழ்
மறவனின் தாலாட்டில் வளர்த்தெடுத்த திமுகவை 
வீழ்த்த நினைப்பது...,
அது மோடிஜியின் பகல்கனவு..!

'கலைஞரைவிட ஸ்டாலின் ஆபத்தானவர்' என்று நீங்கள் சொன்னதையே உங்களுக்கு நினைவூட்டுகிறேன்..!

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA