Thursday, 29 June 2023

நீரோ 2.0

நீரோ 2.0

இயற்கையின்
எழில் தோற்றம்
இந்தியாவின்
பெருமை சாற்றும்
மணிப்பூர் மண்ணில்
குருதி வெள்ளம்.
ஓயாத உள் மாநிலப் போர். 
பேயாட்சியின்
பின்விளைவு. 
அமைதி காக்க
மோடி முனையாமல்... 
அமெரிக்க  அரசின்
அழைப்பை ஏற்று
பறந்து போனார். 

மணிப்பூர் 
மதவாதிகளின் கொலைக்களமானது! 
மருந்துக்குக் கூட
மணிப்பூர் உயிர்களின் கவலையின்றி
வெள்ளை மாளிகை
விருந்து வைபவம்
பைடன்-ஜில் பைடன்
பறிமாற
மோடி பசியாறினார்.

ரோமாபுரி பற்றி எரியும்போது
நீரோ மன்னன்
பிடில் வாசித்த வரலாறு
நினைவலைகளில்
நீந்தி வந்தது! 
ஈன்ற தாயையே 
தூக்கில் தொங்கவிட்ட
நீரோவிடம்...
தாய் மடிப்பிச்சை கேட்டாள்... 

"I carried you in my womb
and nourished you with my blood"
என் கருவிலே
உன்னை சுமந்தேன், 
என் உதிரத்தால்
உன்னை வளர்த்தேன்
மகனே என மன்றாடினாள்.
நீரோவின் கல் மனம்
சரித்திரமானது!

இந்தியாவின் நீரோ
மோடியின் கல்மனம்
மட்டும் கரையுமா?
மறந்தார், 
மணிப்பூர் எரிதழலில்
வெந்து கரிவதை
மீண்டும் பறந்தார்!


எழிலரசி, புவியரசர்களை
விழி வீச்சில் வென்று
பித்தர்களாக்கி
துப்பட்டாவில் தொங்கவிட்டு
பாராண்ட  பைங்கிளி
கிளியோபாட்ரா
தன் அழகு வாகனத்தில்
உலா வந்த நைல் நதியின்
தென்றல் அலைகள்
தாலாட்டும்
எகிப்து நாட்டிற்கு!

அரபு பூமி
ஆரத் தழுவி
நைல் நதி தீரத்தின்
மிக உயரிய 
'ஆர்டர் ஆஃப் தி நைல்'
(Order of the Nile)
விருதினை வழங்கி
ஆனந்த கும்மி
இசைத்தது! 
விருந்தோம்பலின்
உச்சத்தை தொட்டது, 
உலகம் வியப்புடன்
உற்று நோக்கியது! 
காரணம்...
வஞ்சப் புகழ்ச்சி விருதா?

ஐ.நாவில்
வெளிச்சம் போட்ட
இந்திய ஜனநாயக
மரபணு... 
மணிப்பூரில்
வெந்தணலில்
வீழ்ந்து கிடப்பதை
இனியேனும் மோடி
காப்பாரா?
மௌனம் கலைப்பாரா?

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

Saturday, 24 June 2023

மோடிக்கு வாக்கப்பட்டதுக்கு நமக்கு இதுவும் வேணும்! இன்னமும் வேணும்!

அமெரிக்காவில் மோடி...

"கால்ல விழுந்து மோடியை வரவேற்ற அமெரிக்க அதிபர் பைடன்"

"சீனாவைத் தாக்க ஏவுகணை, ஸ்விட்ச்ச அழுத்துமாறு மோடியை கேட்டுக் கொண்ட அமெரிக்க ராணுவ படைத் தளபதி "

"டாலர நீங்க எடுத்துக்குங்க, விலைமதிப்பில்லாத ரூபாய எங்களுக்கு விட்டுக் கொடுங்க!" என அமெரிக்க நிதியமைச்சர் மோடியிடம் கதறல்"

"அமெரிக்காவிற்கு ஒரு நாள் அதிபராக இருக்குமாறு, முதல்வன் பட பாணியில் அமெரிக்க மக்கள் கை தட்டி, கரண்டி-தட்டை அடித்து மோடிக்கு கோரிக்கை"

படிக்கும் போதே நம்ம மண்ட மேல குண்டு 💣 வெடிச்சா மாதிரி இருக்குதா...?

இவை எல்லாம்,

மோடி அமெரிக்க பயணத்த வச்சு ரெண்டு ரூவா சங்கியானுக, பரப்பி உட எழுதி வச்ச தலைப்புகள்...

ஆனா நடந்தது...

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க 75 அமெரிக்க எம்பிக்கள் முடிவு!

ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கடிதம் எழுதி போராட்டம் நடத்த எம்பிக்கள் முடிவு!

இது நடந்தா மோடி மானம், இந்தியா மானம் எல்லாம் அமெரிக்க நாடாளுமன்றத்துல ஆரம்பிச்சு உலக அளவுல கேவலப்பட்டுப் போகும்...

மோடிக்கு வாக்கப்பட்டதுக்கு நமக்கு இதுவும் வேணும்...

 இன்னமும் வேணும்...

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA.,



Sunday, 18 June 2023

தமிழரைப் பிரதமராக்குவோம்?-அமித்ஷா!

ஆட்சியின் உயிர் 
ஊசலாடும் நேரத்தில் 
உயில் அறிவிக்கிறார் அமித்ஷா!

ஏற்கனவே,
ஆட்சிக்கு உரியவரை 
அடையாளம் கண்டு 
கர்நாடக தேர்தல் களத்தில் 
ஒப்பந்தம் (Agreement) போட்டாகிவிட்டது.

வரும் 2024ல் 
பத்திரப்பதிவு செய்து 
பட்டா வழங்கப்பட உள்ள 
சொத்துக்கே சொந்தமில்லாத நேரத்தில் - அமித்ஷா 
உயில் அறிவிப்பது 
உலகமகா விந்தை!

வாலாஜா ஜெ. அசேன் Ex MLA



அமலாக்கத்துறை அகோரிகளின் பேயாட்டம்!

அமலாக்கத்துறை அகோரிகளின் பேயாட்டம்!

மணிப்பூரின் மரண ஓலம்-உலக ஊடகங்களில் ஒலித்த போதும்...
ஒரு வார்த்தையும் வெளியிடாத 
உரியவரின் மௌனம்?
மௌனங்களின் மகுடம்! 
கவனமெல்லாம்...
தலைவணங்காத் தமிழகத்தின் மீது!

விளைவு...

இ.பி.எஸ் அமைச்சரவையின் அங்கம்... 
செந்தில் பாலாஜி மீது-அன்று 
தொடரப்பட்ட வழக்கு
எட்டாண்டு கழித்து 
அவசர நடவடிக்கையாகப் பாய்கிறது!
இதய வலியால் தாக்குண்டவரை 
பிராண்டி எடுத்தது 
அகோரிகளின் பேயாட்டம்!

கர்நாடகாவில்,
தரைதட்டிப்போன கலத்தில் 
தஞ்சம் அடைந்திருந்தால்-செந்தில் புடம்போட்ட தங்கமென 
ஜொலித்திருப்பார்!

இருபதாயிரம் கோடி ரூபாய்...
மொரீசியசிலிருந்து அதானிக்கு...
(Mauritius to Adani) 
அதன் மர்மம்-அடைகாக்கப்படுவது...?
அமலாக்கத்துறை அகோரிகளின்
நினைவில் மறந்து போனதோ?
மௌனம் சாதித்தால் மாமனிதரோ?

மோடியின் கைத்தடிகள் 
'டாடி'யின் மகுடி இசைக்கு 
பாம்பாக மாறி-முதல்வர்
ஸ்டாலின் மீது சீறுகின்றன!
தன் ஆட்சியில் நடந்த தவறைத் 
தட்டிக் கேட்காமல்
முதல்வர் ஸ்டாலின் மீது-தற்போது பம்முகிறார் பழனிச்சாமி!

செந்தில் பாலாஜி மீது  
தொடரப்பட்ட வழக்குக்காக
ஸ்டாலின் பதறுவதாக 
இவர் கதறுகிறார்! 
இவரது ஆட்சியில் 
தலைமைச் செயலகத்தில் 
சோதனை நடந்தபோது-தன்னுடைய 
ஒன்பது வாசல்களையும் மூடிக்கொண்டு 
ஒடுங்கி உட்கார்ந்திருந்தார்!

ஆனால் ஸ்டாலினோ  
சிறைச் சாலையின் சிம்புட்பறவை 
சும்மா இருக்குமா? 
பதறி எழுந்து 
எதிரியை பதம் பார்த்தார்!

தரையில் தவழ்ந்து 
காலைப் பிடித்து 
அரியணை ஏறியவரல்ல,
களம் பல கண்டு 
காராகிரகத்தில் அடைபட்டு 
சங்கத் தமிழின் மங்காப் புகழுக்கு 
தங்க விளக்காகி 
அரியணை ஏறியவர்தான் 
முதல்வர் ஸ்டாலின்!

ஆம்... பதறினார்!
போர்ப் பரணி பாடினார்.. 
பேதைகளுக்கு-இதில் 
ஏன் உபாதை?

வாலாஜா ஜெ. அசேன் Ex. MLA.,




Thursday, 8 June 2023

வாகை சூடுவாய் பொன்மகளே!

வாகை சூடுவாய் பொன்மகளே!

செங்கோலின்
ஓங்கார ஒலியில்
கரைந்து போனது
ஜனாதிபதியின்
புறக்கணிப்புச் செய்தி..! 

பெண்ணுரிமை பேணுவதாகப்
பிதற்றும் பிரதமர்
பட்டியலின மகளை,
பாராளுமன்ற விழாவில்
புறந்தள்ளிய செய்தி 
விஸ்வரூபம் எடுக்கா வண்ணம்
பாராளுமன்றத் திறப்பு விழாவை
செங்கோலின் 
ஜனன விழாவாக மாற்றி... 

சிறப்பும் செழுமையும் மிக்க
செங்கோலை செங்குச்சியாக்கி... 
அடிமை ஊடகங்களில்
அகடவிகட கச்சேரியை
அரங்கேற்றி... 
மக்களின் நினைவுகளில்
மறைக்கலாம்!

ஆனால்,
2024 தேர்தல் களத்தில்
பெண்ணுரிமை பறித்ததைப்
பழிவாங்க...
புதுயுகம் புலர... 
புயலென... 
பொங்குமா கடலென 
களமாடி...

"தேரா மன்னா 
செப்புவதுடையேன்" என
சீறி எழுந்து
மோடிஜியின்
முகமூடி கிழித்து... 
வாகை சூடுவாள்!
தங்கமகன் ராகுல்ஜீயின்
தங்கை பிரியங்கா காந்தி!

வாலாஜா ஜெ.அசேனா, Ex.MLA.,




Friday, 2 June 2023

மோடியின் வீழ்ச்சியை செங்கோல் காக்குமா?

மக்கள் ஆட்சி மாள., 
மன்னர் ஆட்சி மீள.., 
செங்கோலின் கால்கோள் விழா..!

தற்புகழ்ச்சி தம்பட்ட மன்னன்-மோடிஜி 
சரிந்து விட்ட செல்வாக்கை சரி கட்ட... 
புதிய நாடாளுமன்றத்தில் 
பழைய செங்கோலின் 
புதிய அரங்கேற்றம்..!

தென்னாட்டு மண்ணில் 
தலைதெறிக்க ஓட விட்ட 
துயரக் காட்சியை 
துடைத்தெறிய துணையானதோ தமிழ்நாட்டுச் செங்கோல்?

அன்று 2004ல் 
அன்னை சோனியா காந்தி 
பிரதமராவதை எதிர்த்த
பாசிசக் கூட்டத்தை எதிர்த்து, 
சோனியா காந்திக்கு 
ஆதரவாகக் குரல் கொடுத்த 
லாலு பிரசாத் யாதவ் அவர்களையும்., 
இணை அமைச்சர் ஆர்.வேலு அவர்களையும் கடந்த 18-09-2004 அன்று 
வாலாஜாப்பேட்டைக்கு அழைத்து வந்து பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தி 
லாலுவுக்குத் தங்கக் கிரீடம் சூட்டியதோடு 
தங்கச் செங்கோலும் வழங்கி 
கௌரவித்தோம்!
விளைவு... 

அரசியல் சித்தர் லாலுஜி, 
நிர்வாகத் சித்தர் ஆர்.வேலு ஆகியோரால் வாலாஜாபேட்டை இரயில் நிலையம் மறுமலர்ச்சி கண்டது!

ஆண்டுக்கு 
சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டிக் கொண்டிருந்ததை மாற்றி 
சுமார் நாலு கோடி ரூபாய் வரை 
உயரும் அளவுக்கு 
இரயில் பயணிகளின் போக்குவரத்தை மிகைப் படுத்தினார்கள்!

புதிதாக, 
நகரி-திண்டிவனம் 
இணைப்புப் பாதைக்காக 
லாலுவும்-வேலுவும்
அன்று
திட்டம் தீட்டிச் செயல் படுத்தினார்கள்.

இடையில் ஆட்சி மாற்றம்,
மோடி பிரதமரானதால்-திட்டம் 
முன்னெடுக்கப் படாமல் 
முடங்கிப் போனது!

அன்று, 
வாலாஜாப்பேட்டையில் 
வழங்கப்பட்ட செங்கோலால் வளர்ச்சி!
இன்று, 
பாராளுமன்றத்தில் செங்கோல்!
மோடியின் வீழ்ச்சியை 
மறைக்கும் முயற்சி..!

வாலாஜா ஜெ. அசேன். Ex MLA