மலையின் மரண யாத்திரை!
Tuesday, 26 October 2021
மலையின் மரண யாத்திரை!
Friday, 11 June 2021
இளம் பகவத் மாற்றம்! இராணிப்பேட்டைக்கு ஏமாற்றம்!
இளம் பகவத் பொறுப்பேற்றது முதல்
ஏற்றம் கண்டது இராணிப்பேட்டை மாவட்டம்!
இலஞ்சம் ஏதும் இன்றி
எதுவும் நகராது என
அகங்காரமாய் ஆட்டம் போட்ட
கீழ்மட்ட அதிகாரிகளையும்
நடுங்க வைத்த சிங்கம் நீ!
காற்றில் பறக்கவிட்டு
உலகின்-
மாசடைந்த நகரங்களின் பட்டியலில்
இராணிப்பேட்டையை
மூன்றாம் இடத்திற்குக் கொண்டு வந்த
அபாயகரமான ‘ரெட் கேட்டகிரி’
நச்சு ஆலைகளை துணிச்சலோடு மூடி
தண்டம் விதித்து
தெறிக்கவிட்ட தீப்பொறி நீ!
ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு எமனாய்
நேர்மை-துணிவுடன் நின்றாய்!
இயலாதவர்களின்
இரட்சகனாய்த் திகழ்ந்தாய் நீ!
வெள்ளையனை எதிர்த்து
போர் புரிந்தான் பகத்சிங்!
இன்று
கொள்ளையர்களை எதிர்த்து
களம் கண்டான்
இளம் பகவத்!
வென்றுவா! சூழ்ச்சிகளை வென்றுவா!
மற்றும்
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
Wednesday, 9 June 2021
விடியலின் வசந்த விழா!
ஆளுநர் மாளிகையில்
ஆர்ப்பாட்டம் இல்லா-ஓர்
எளிய விழா!
கோடிக்கணக்கான தமிழர்
தொலைக்காட்சிப் பெட்டிமுன்!
எனும்-ஒலி அலைகள்
செவியில் சங்கமித்த போது
கத்தும் கடல் தந்த முத்தும்-
கலைஞர்தம்
எண்ணக் கடல் தந்த சொத்தும்-
ஸ்டாலினாக
உயிர் பெற்றதை உணர்த்தியது!
விழிகளில்-
ஆனந்தக் கண்ணீர்!
இளைஞர்அணி துவங்கிய போது
உடன் இருந்து
நாங்கள் கண்ட கனவும்
நனவானதால்
எம் விழிகளிலும்-
ஆனந்தக் கண்ணீர்!
முதல் வித்திட்ட
வேலூர் கோட்டை வெளியில்
அன்று-இளைஞர் அணி
துவக்க விழாவில்
“தளபதி ஸ்டாலின்” வாழ்கவென
எழுந்த
ஆயிரக்கணக்கான இளைஞர்களின்
துந்துபி முழக்கம்
வேலூர்
கோட்டை மதிலில் மோதி
இன்று-செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில்
வசந்தத்தின் இடி முழக்கமென
எதிரொலிக்கிறது!
கொள்கைக் கூட்டணி கண்டார்!
தேர்தலிலே வென்றார்!
ஆட்சித் தேரின் வடம் பிடிக்க
அதிகாரிகளை நேர் நிறுத்தி
அனைவர் இதயங்களையும் வென்றார்!
தமிழகத்தை மீட்க
மாற்றுக் கட்சித் தோழர்களையும்
அரவணைத்து
அவர் ஆற்றும் அரிய பணிகள்
நீதி மன்றத்திற்கே நிறைவைத் தந்தது!
வாராமல் வந்த
வான் மழையாக,
பாராண்ட பைந்தமிழ் இனத்தின்
பெருமையை மீட்க
முதல்வர்-
ஸ்டாலின் ஆட்சி!
ஆம்!
உதய நிலவின்
ஒளிக்கிரணங்கள் சூழ்ந்த
வங்கக் கடல் அலை ஓசையில்
தங்கத் தமிழ் மகன் கலைஞரின்
குரல் ஒலிக்கிறது-
கடற்கரையில்
கல்லரை எழுப்பி
ஓய்வெடுக்கச் செய்தாலும்
ஸ்டாலின் வடிவில் வந்து
தமிழினம் தழைக்க
நல்லாட்சி தருவேன்
நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்!”
Wednesday, 19 May 2021
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்!
ஏமரா மன்னன்!
கிரேக்கத்தின் கீர்த்திக் கொடியை
உலகளாவப்
பட்டொளி வீசிப் பறக்கப்
படை நடத்திய மாவீரன்
அலெக்சாண்டர்
மரணித்த போது-அவன்
சவப்பெட்டியை
சிறந்த மருத்துவர்கள் சுமக்க
வேண்டுமென விரும்பினான்-அதுவே
நடந்தது!
மருத்துவர்களாலும்-தன்
மரணத்தைத் தடுக்கமுடியவில்லையே
என்ற ஆதங்கம் போலும்?
கங்கை முதல்
காவிரி நதி தீரத்து
மருத்துவர்கள்
புரட்டிப் போட்டனர்!
ஆம்! மனித உருவில் பிறந்த
மருத்துவ தேவதைகள்
மனித உயிர்களைக் காக்க
தம் உயிரை துச்சமெனக்
கொண்டனர்!
நோயிலிருந்து
மக்களைக் காக்க
மரண வாயில் திறந்தாலும்
மனம் கலங்காமல்
கடமையாற்றும் அவர்களை
என்னென்பது?
எம் விழிகளில்
வழியும் நீரால்-உம்
பாதங்களை நனைக்கின்றோம்!
மருத்துவ உதவியாளர்கள்
கண் துஞ்சாது கடமையாற்றும்
காவல் துறை-மின்துறை ஊழியர்கள்
இவர்கள்
உறுதுணையால் உயிர்கள்
காக்கப்படுவதற்கு
கைம்மாறும் உண்டோ?
நிலை தடுமாறி நின்று போன
தடுப்பு நடவடிக்கைகளை
சுட்டிக் காட்டி ஒழுங்குபெற
உரத்தக் குரலில் சாடி-உதவிய
உச்ச நீதிமன்ற – உயர் நீதிமன்ற
நீதியரசர்கள்,
‘நெற்றிக் கண் திறந்தாலும்
குற்றம் குற்றமே’
என்ற நக்கீரனின் பரம்பரைதான்
என நிரூபித்தமைக்கு
சிரம்தாழ்ந்த நன்றி! நன்றி!!
எடுக்காமல் மவுன விரதம்
பூண்ட புவியரசர்களின்
செயலின்மையை சுட்டிக் காட்டாமல்
அதிகாரத்துக்கு அடிமையாய்
துதிபாடும் தொலைக் காட்சி
ஊடகங்கள் பத்திரிக்கைகளை
வரலாறு மன்னிக்காது!
”இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்”
என்பதை என்றுதான் உணர்வார்களோ?
Monday, 17 May 2021
கொரோனாவால் கரைந்து போன மோடியின் பிம்பம்!
மோடியின் பிம்பம்!
பவனி!!
வாலாஜா ஜெ அசேன், BA, BL.,Ex MLA.,
Sunday, 18 April 2021
வென்றது பணநாயகம்! தோற்றது தேர்தல் ஆணையம்!!
தோற்றது தேர்தல் ஆணையம்!!
ஜனநாயகத்தைப்
பணநாயகம்
பாதாளத்தில்
புதைத்துவிட்டது!
கட்சி - கொள்கை
தியாகம் - லட்சியம்
பணவீச்சில்
பறந்து போனதே!
ஓ.. தேசப் பிதாவே
உன் தியாகத்தால்
ஜனநாயகம் மலர்ந்தது!
இன்று -
உன் சிரிப்பு சுமந்த
'கரண்சி'யால்
ஜனநாயகம்
மரணித்ததே!
அன்று-
கோட்சே குண்டு
மகாத்மா காந்தியின்
உயிரைப் பரித்தது!
இன்று-
அதிகார மோகமோ
காந்தி தேசத்தின்
ஆன்மாவை
அழித்துவிட்டது!
"கண்ணீர் விட்டு வளர்த்தோம்
சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருகத்திருவுளமோ?"
பாட்டன் பாரதி பாடல்
வாலாஜா ஜெ அசேன், BA, BL, Ex MLA.,
Wednesday, 3 February 2021
மாடுகளுடன் ஒரு மல்லுக்கட்டு!
தமிழகத்தின் முதல் பிள்ளை வாலாஜாப்பேட்டை. பிறந்தது என்னவோ 1866 ல்தான் என்றாலும் இன்னமும் சவளப் பிள்ளையாய் தவழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சித்தூர் மற்றும் இராணிப்பேட்டை முத்துக்கடை பகுதிகளிலிருந்து சென்னை செல்ல விரும்புவோர் வாலாஜாப்பேட்டைக்குள் நுழைய அச்சப்பட்டு, வி.சி.மோட்டூரிலேயே ஜகா வாங்கி புறவழிச்சாலை வழியாக சென்னைக்குப் பயணிப்பர். இரண்டு கிலோ மீட்டர் நகரைக் கடக்க, சமயத்தில் இரண்டு மணி நேரம் கூட தவழ வேண்டி வரலாம். புறவழிச்சாலை வந்தபிறகும் துள்ளி ஓடும் வகையில் அப்படி ஒன்றும் மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை.
ஏன் இந்த அவலம்?
ஒரு காலத்தில் பாக்கு, பஞ்சு, வெத்தலைப் பேட்டைகளின் உறைவிடமாக இருந்த வாலாஜா, இன்று மாடுகளின் பேட்டையாக மாறிப் போனதால் பாதைகள் எல்லாம் மறிக்கப்பட்டு வருகின்றன. சாலைகள் நடுவே நந்திகள் முளைத்தால் தட்டி விட்டா கடக்க முடியும்? முடியாது என்பதால்தான் டைவர்ஷன் எடுக்கிறார்கள்.
போதாக்குறைக்கு நடைபாதைகள் எல்லாம் வியாபாரிகளின் சின்ன வீடுகளாய் மாறிப்போனதால் நடப்பதற்குக்கூட, பாதசாரிகள் நடை பயில வேண்டிய இருக்கு. முரணாய் நிற்கும் நந்திகளில் முட்டி மோதி உயிர் துறப்பதும், கோமாதாக்களின் கழிசலில் வழுக்கி விழுந்தது கால் முடமாவதும் வாலாஜாவின் காலச் சுவடுகள். கோரிக்கை வைத்து துவண்டு போன மக்களைத் தட்டியெழுப்ப தாரை தப்பட்டைகளோடு பிப்ரவரி மூன்றில் களமிறங்கினார் வாலாஜா அசேன்.
மாடுகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் காட்சிப்படுத்த, காளையாய் வேடமிட்ட ஒருவர் குறுக்கும் நெடுக்குமாய் சாலையில் ஓட, தாரை தப்பட்டையுடன் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பரிக்க, அசேன், பொன்.சேகர் ஆகியோர் கண்டன உரையாற்ற நகர ஆணையரிடம் ஆவண செய்ய அறிவிக்கை கொடுத்தனர். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் நகர மக்களே நேரடி கரசேவையில் இறங்குவர் என எச்சரிக்கை செய்து, அடுத்து மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனுவையும் கொடுத்துப் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
மாடுகள் போற்றுதலுக்கு உரியவைதான் அவை மக்களோடு முரண்படாத வரை. வியாபாரிகள் வாழ்த்துக்குரிவர்கள்தான் அவர்கள் நடைபாதைகளை ஆக்கிரமிக்காத வரை.
மரம் வளர்த்தால் மழை பெறலாம் என்கிறது அரசாங்கம். காலையில் பெரும்படையாய் திரண்டு வரும் ஆடுகளையும், பகல் முழுதும் சுற்றித் திரியும் மாடுகளையும், வேர் வேட்டைக்கு அலையும் பன்றிகளையும் கட்டுப்படுத்தாமல் மரம் வளர்ப்பது வாலாஜாவைப் பொறுத்தவரையில் வெறும் கானல் நீர்தான்.
சாலையின் நடுவே ஒருவன் சண்டித்தனம் செய்தால், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்ததாக அவன் மீது "இந்திய தண்டனைச் சட்டம்", பிரிவு 289 ன் கீழ் வழக்குத் தொடுப்பது போல, மாடுகளைச் சாலைகளில் திரிய விடும் உரிமையாளர் மீதும் மேற்கண்ட பிரிவில் வழக்குத் தொடுக்க முடியும். தெரிந்தோ, கவனக் குறைவாகவோ மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், கொடுங்காயம் உண்டாக்குதல் ஆகிய குற்றங்களுக்காக உரிமையாளரை ஆறுமாதம் சிறை வைக்கவும், ரூ.1000 தண்டம் விதிக்கவும் சட்டம் வழிவகை செய்கிறது. மேலும் மாடுகளால் ஏற்படுத்தப்பட்ட காயம் மற்றும் சேதத்திற்கு உரிமையாளர் இழப்பீடும் வழங்க வேண்டும்.
உணவுக்காகத்தானே மாடுகளை வெளியே அவிழ்த்து விடுகின்றனர். அப்படியானால் அவர்கள் மாடுகளுக்குப் போதிய அளவு உணவு வழங்கவில்லை என்ற குற்றத்திற்காக "விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960", 11 (I) (j) (h) ஆகிய பிரிவுகளின் கீழ் உரிமையாளர் மீது வழக்குத் தொடுக்க முடியும்.
நெகிழி உள்ளிட்டக் கண்ட கழிவுகளைத் தின்று நோய்க்கு ஆட்படும் பசுக்கள் கொடுக்கும் பாலை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதால் அதன்மூலம் பிறருக்கு நோய் உண்டாவதற்கும் உரிமையாளர்கள் காரணமாக இருப்பதால் "கால்நடைகள் அத்துமீறல் (தமிழ்நாடு) திருத்தச் சட்டம் 1857" ன்படி, கால்நடைகளை கைப்பற்றுவதோடு, உரிமையாளர்களைக் கைது செய்யவும் சட்டம் வழிவகை செய்கிறது.
"நகரப்பகுதிகளில் விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்படுத்துதல் & ஒழுங்குபடுத்துதல்) தமிழ் நாடு சட்டம் 1997" ன் படி விலங்குகளை வெளியே விடக்கூடாது.
மாடுகள் உள்ளிட்ட விலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான சட்டங்கள் உள்ளன. பல்வேறு உயர் நீதிமன்றங்களும் மற்றும் உச்ச நீதிமன்றமும் மாடுகள் உள்ளிட்ட விலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஏராளமானத் தீர்ப்புகளை வழங்கி உள்ளன.
சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளைக் கட்டுப்படுத்த தவறும் அதிகாரிகள், பணியில் அலட்சியம் காட்டியதாகக் கூறி, விலங்குகளால் ஏற்பட்ட சேதாரம் மற்றும் காயங்களுக்கு அவர்களைப் பொறுப்பாக்கி இழப்பீடு கோரி அவர்கள் மீது உரிமையியல் வழக்குத் தொடுக்க முடியும்.
சாட்டைகள் எடுக்கப்படாத வரை சண்டித்தனங்களுக்கு முடிவேது?
பொன்.சேகர்
வழக்குரைஞர்
Friday, 15 January 2021
வாலாஜாவில் இஸ்லாமியர் முன்னெடுத்த சமத்துவப் பொங்கல்!
பெரு மழை, பெரு வெள்ளமானாலும் துளி நீர் கூட தேங்காமல் வழிந்தோடும் வாட்டம் கொண்ட தமிழகத்தின் முதல் நகராட்சி. பின் தோன்றிய மதுரை, சென்னை எல்லாம் பல லட்சம் மக்கள் தொகையுடன் மாநகராட்சிகளாக உயர்ந்த போதும் ஐம்பதாயிரத்தைத் தாண்டவே இன்னும் வாலாஜா திண்டாடிக் கொண்டிருக்கிறது. வசதிகள் பெருகினால்தானே நகரங்கள் வளர முடியும். ஒரு பக்கம், பழம் பெருமைகள் எல்லாம் வெறும் நினைவுகளாய் மாறினாலும், மறு பக்கம் சில நிகழ்வுகள் நம்மை நெகிழ வைக்கின்றன. சாதி, மதம், இனம், மொழி என மக்களிடையே பகைமையை வளர்த்து ஆதாயம் தேட சிலர் முயற்சிக்கும் வேளையில், ஓடும் குருதி ஒன்றாய் இருக்கும்பொழுது எமக்குள் ஏது வேறுபாடு என பறைசாற்றும் நிகழ்வுகளும் நடந்தேறுகின்றன.
தை என்றாலே பொங்கல் மட்டுமல்ல தமிழும் இனிக்கும். தை இன்றி தமிழ் இல்லை, தமிழ் இன்றி தை இல்லை என்பதனால்தானோ என்னவோ தமிழ்ப் புத்தாண்டு தையிலே தொடங்குகிறது. உழைத்துக் களைத்த வேளாண் குடிகள், தை மகள் கண்டு சற்றே முகம் மலரும் காலம் இது.
மகிழ்ச்சி; அது எல்லோருக்கும் பொதுவானதாய் மாறும் பொழுது பிணக்குகள் எல்லாம் மாயமாய் மறைகின்றன.
வள்ளுவன் வந்த நாளில்தான் ஆண்டுதோறும் வாலாஜாவில் சமத்துவப் பொங்கல் விழா அரங்கேறுகிறது. இந்த ஆண்டு, காலை பத்து மணி…,
வாலாசா பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் பின் திரையில் அழகன் வள்ளுவன் மிளிர, நாதஸ்வரக் கலைஞர்கள் இசை மழை பொழிய, கீழே சர்க்கரைப் பொங்கல் தயாராகிக் கொண்டிருந்தது. கரும்பும், மஞ்சளும், மாவிலையும் தைப்பொங்கலின் தவிர்க்கமுடியாப் பொருளாய் இடம் பிடித்தன. சாதி, மதம், இனம், மொழி, அரசியல், ஏழை, பணக்காரன் கடந்து "முத்தமிழ்ச் சுவைச் சுற்றம்" அழைப்பு விடுத்ததால் பலர் வந்த வண்ணம் இருந்தனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்களும், தொழிலதிபர் அக்பர் ஷெரிப்பும், ஆட்டோ தொழிலாளி அலிமும், கோட்டீஸ்வரன், ஜானகிராமன், விஜயராகவனோடு கைகோர்த்து புதுப் பானையில் சர்க்கரை இட்டனர். தாய்மார்களுக்கு, கணேசும் மதனும் கனிவோடு உதவ புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கல். பேதங்கள் இன்றி உண்டு மகிழ்ந்தனர். இனிதாய் முடிந்தது சமத்துவப் பொங்கல். இடையிடையே மேடையில் "சக்சஸ் கிங்" சிறார்களின் சிலம்பம்-கராத்தே-குங்பூ களை கட்டியது. இவை அத்தனைக்கும் ஆணிவேர் வாலாஜா ஜெ.அசேன். ஊருக்கு ஒரு அசேன் இருந்தால் சாதி-மத-இன பேதங்களுக்கு இடமேது?
காத்திருக்கிறோம்! மாலைநேர கலை நிகழ்ச்சிகள், பட்டி மண்டபத்தை காண!