Wednesday, 19 May 2021

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்!

 

இடிப்பாரை இல்லாத
ஏமரா மன்னன்!

கிரேக்கத்தின் கீர்த்திக் கொடியை
உலகளாவப்
பட்டொளி வீசிப் பறக்கப்
படை நடத்திய மாவீரன்
அலெக்சாண்டர்
மரணித்த போது-அவன்
சவப்பெட்டியை
சிறந்த மருத்துவர்கள் சுமக்க
வேண்டுமென விரும்பினான்-அதுவே
நடந்தது!
மருத்துவர்களாலும்-தன்
மரணத்தைத் தடுக்கமுடியவில்லையே
என்ற ஆதங்கம் போலும்?

நைல் நதி தீரத்து வரலாற்றை
கங்கை முதல்
காவிரி நதி தீரத்து
மருத்துவர்கள்
புரட்டிப் போட்டனர்!
ஆம்! மனித உருவில் பிறந்த
மருத்துவ தேவதைகள்
மனித உயிர்களைக் காக்க
தம் உயிரை துச்சமெனக்
கொண்டனர்!
 
கொரோனா என்ற-கொடிய
நோயிலிருந்து
மக்களைக் காக்க
மரண வாயில் திறந்தாலும்
மனம் கலங்காமல்
கடமையாற்றும் அவர்களை
என்னென்பது?
எம் விழிகளில்
வழியும் நீரால்-உம்
பாதங்களை நனைக்கின்றோம்!
 
கருணை வடிவிலான செவிலியர்கள்
மருத்துவ உதவியாளர்கள்
கண் துஞ்சாது கடமையாற்றும்
காவல் துறை-மின்துறை ஊழியர்கள்
இவர்கள்
உறுதுணையால் உயிர்கள்
காக்கப்படுவதற்கு
கைம்மாறும் உண்டோ?

ஆட்சியாளரின் அலட்சியத்தால்
நிலை தடுமாறி நின்று போன
தடுப்பு நடவடிக்கைகளை
சுட்டிக் காட்டி ஒழுங்குபெற
உரத்தக் குரலில் சாடி-உதவிய
உச்ச நீதிமன்ற – உயர் நீதிமன்ற
நீதியரசர்கள்,
‘நெற்றிக் கண் திறந்தாலும்
குற்றம் குற்றமே’
என்ற நக்கீரனின் பரம்பரைதான்
என நிரூபித்தமைக்கு
சிரம்தாழ்ந்த நன்றி! நன்றி!!
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
எடுக்காமல் மவுன விரதம்
பூண்ட புவியரசர்களின்
செயலின்மையை சுட்டிக் காட்டாமல்
அதிகாரத்துக்கு அடிமையாய்
துதிபாடும் தொலைக் காட்சி
ஊடகங்கள் பத்திரிக்கைகளை
வரலாறு மன்னிக்காது!
 
வள்ளுவன் மொழிந்த
”இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்”
என்பதை என்றுதான் உணர்வார்களோ?
 
வாலாஜா ஜெ.அசேன், BA, BL., Ex.MLA.,

Monday, 17 May 2021

கொரோனாவால் கரைந்து போன மோடியின் பிம்பம்!

மோடியின் பிம்பம்!

மதவெறி ஊட்டி
மானுடன் மதியிழக்க 
பொய்யுரை புகன்று!
பூஜ்யம்-ராஜியம் 
ஆளவந்தது !

கறுப்புப் பணம்
கைப்பற்றி-தலைக்கு
பதினைந்து லட்சம்
பணக்குவியல்
தருவேனென்றது!

அந்தோ!
தந்ததோ பிணக்குவியல்
பார்க்கும் திசையெங்கும்
பிணக்குவியல்!!
சிந்து நதியில் 
தோணிகள் ஓட்டக் 
கற்பனைக் கண்டான்
முண்டாசு கவிஞன்!

மோடி முனிவர் ஆட்சியில்
கங்கை நதியில் மக்கள் கண்டது 
பிணத் தோணிகளின்
பவனி!!

செயற்கையாக வடிவமைக்கப்பட்ட
மோடி ஜியின் பிம்பம்
கொரோனாவால் கரைந்து போனதுவே! 

வாலாஜா ஜெ அசேன், BA, BL.,Ex MLA.,